சின்னத்திரை மின்னல்கள்!: பெயர்- புகழ் தந்த தமிழகம்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  "அன்பே வா'  தொடரின் நாயகி பூமிகாவாக நடித்து மக்கள்  மனதில் இடம் பிடித்தவர் டெல்னா டேவிஸ். அவர், தனது திரைப்பயணம் குறித்து பகிர்ந்து கொண்டவை:
சின்னத்திரை மின்னல்கள்!: பெயர்- புகழ் தந்த தமிழகம்!
Published on
Updated on
2 min read

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "அன்பே வா' தொடரின் நாயகி பூமிகாவாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் டெல்னா டேவிஸ். அவர், தனது திரைப்பயணம் குறித்து பகிர்ந்து கொண்டவை:

அன்பே வாவுக்கு முன்னாள், அன்பேவாவுக்கு பின்னால் எப்படி இருக்கிறது பயணம்?

அன்பே வாவுக்கு முன்னாடியும் சரி, இப்பவும் சரி ஒரே மாதிரிதான் இருக்கிறேன். ஆனால், என்னுடைய பழக்க வழக்கங்களில் சிறு மாற்றம் வந்திருக்கிறது. முன்பெல்லாம் எதற்கெடுத்தாலும் சிடுசிடு என்று இருப்பேன். ஏதாவது பிடிக்கவில்லை என்றால் உடனே முகத்துக்கு நேரே சொல்லிவிடுவேன். பொறுமை இருக்காது. ஆனால், இப்போது பூமிகாவாக வாழ்ந்து ரொம்ப பொறுமைசாலியாகிவிட்டேன். பூமிகாவிடம் இருக்கும் நல்ல கேரக்டர் கொஞ்சம் எனக்குள்ளே இறங்கிவிட்டது.

தமிழ் கற்றுக் கொள்ள கடினமாக உழைக்கிறீர்களாமே?

உண்மைதான். தமிழ்நாடுதான் எனக்கு பெயர், புகழ், பணம் எல்லாம் கொடுத்திருக்கிறது. நான் இங்கேதான் வேலை செய்கிறேன் அதனால் தமிழை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அதுபோல் அரைகுறையாக தமிழ் பேசுவதிலும் எனக்கு விருப்பமில்லை. வெளிநாட்டில் இருந்து வந்த ஆங்கிலத்தையே நாம் கற்றுக் கொண்டு சரளமாக பேசும்போது, நமது சொந்த பூமியில் உள்ள இந்திய மொழிகளில் ஒன்றான தமிழ் எப்படி வராமல் போகும். தமிழை கற்றுக் கொள்ளவில்லை என்றால் அது அவமானம்.

இயக்குநர் பாரதிராஜா, நடிகர்கவுண்டமணி இவர்களுடன் நடித்தஅனுபவம் குறித்து?

எனக்கு 17-18 வயதுதான் இருக்கும். அப்போதுதான் திரைத்துறைக்கு வந்த புதிது. "49 ஓ' என்ற படத்தில் கவுண்டமணி சாரின் மகளாக நடித்திருந்தேன். அப்போது தமிழ் சுத்தமா தெரியாது. நான் பேசுவதை பார்த்து கவுண்டமணி சார் நிறைய கமெண்ட் அடிப்பார். ஆனா அதுவும் எனக்கு புரியாது. இப்போ நினைத்தாலும் சிரிப்புதான் வரும். அதுபோன்று என் வாழ்க்கையில் நினைத்துக் கூட பார்க்காத ஒன்று பாரதிராஜா சாருடன் நடித்தது. அவரைப் பார்த்ததும் எனக்கு நடிக்கவே வராது, கை எல்லாம் உதற ஆரம்பித்துவிட்டது. ஆனால், அவர், அதைப் புரிந்து கொண்டு என்னை தட்டிக் கொடுத்து. "உன்னால முடியும் என்று நம்பித்தானே நீ செலக்ட் ஆகியிருக்கே. அப்புறம் என்ன பயம். உன்னால் முடியும் நல்லா பண்ணு' என்றார். அது வாழ்க்கையில் மறக்கமுடியாத சம்பவம்.

உங்களுடைய பிளஸ், மைனஸ், பற்றி?

பிளஸ் நிறைய இருக்கு. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் எல்லாரிடமும் அன்பாக பழகுவேன். அதிலும் என்னை நம்பி பழகினால், அவர்களை எந்த சூழலிலும் விட்டுக் கொடுக்க மாட்டேன். மைனஸ் என்றால் நான் வெகுசீக்கிரம் அப்செட் ஆகிவிடுவேன். அப்படி இருக்கக் கூடாது என்று நினைப்பேன் ஆனால் அதை ஃபாலோ பண்ண முடியவில்லை.

உங்களுடைய லட்சியம்?

நடிப்பை பொருத்தவரை, அப்படி ஆகணும் இப்படி ஆகணும் என்றெல்லாம் எண்ணம் கிடையாது. ஆனால், ஒரு சில கதாபாத்திரங்கள் நடிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. அதைத் தவிர, பாதியில் விட்ட எல்.எல்.பி படிப்பை முடித்து வழக்குரைஞராக வேண்டும் என்பதே லட்சியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com