கதை சொல்லும் குறள் - 76: அருள் நெறி;  அன்பு வழி!

கடல் மட்டத்திலிருந்து 1,532 மீட்டர் உயரத்தில் பச்சை மரகதமாக ஜொலித்து நிற்கிறது, தேயிலை வாசம் என்கின்ற அந்த மலை வாசஸ்தலம்.
கதை சொல்லும் குறள் - 76: அருள் நெறி;  அன்பு வழி!

கடல் மட்டத்திலிருந்து 1,532 மீட்டர் உயரத்தில் பச்சை மரகதமாக ஜொலித்து நிற்கிறது, தேயிலை வாசம் என்கின்ற அந்த மலை வாசஸ்தலம். மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நடுவே அமைந்திருந்த இந்த இடத்திற்கு இந்த காரணப் பெயர், அங்கே பரந்து விரிந்து கிடக்கும் தேயிலைச் செடிகளினால் ஏற்பட்டது.

தென்றல் காற்று இங்கே தேயிலை வாசத்தோடு இருப்பதினால் "தேயிலை வாசம்' ஆனது. இங்கே இயற்கையாகவே அமைந்த சீதோஷ்ண நிலை தேயிலையைப் பயிர் செய்வதற்கு ஏதுவானதாக இருக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்ட பிரிட்டிஷ் அதிகாரி மார்வெல், கேரள அரச குடும்பத்திற்குச் சொந்தமான இந்தப் பகுதியை முதலில் குத்தகைக்கு எடுத்துப் பிறகு வாங்கித் தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார்.

இந்திய நாடு சுதந்திரம் அடைந்தபொழுது தான் உருவாக்கிய அழகிய தேயிலைத் தோட்டங்களில் பலவற்றை விற்றுவிட்டார். அப்படி விற்கப்பட்ட ஐநூறு ஏக்கர் தேயிலைத் தோட்டத்தைக் கோயம்புத்தூரின் பணக்காரர் ஒருவர் வாங்கி பிறகு பல கைகள் மாறி இன்று கருணாகரனுக்குச் சொந்தமாக இருக்கிறது.

வெள்ளை வேஷ்டி, சட்டை சகிதம் கம்பீரமாக, தன்னுடைய பென்ஸ் எஸ் கிளாஸ் காரில் கருணாகரன் தன்னுடைய டீ எஸ்டேட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார்.

மேட்டுப்பாளையத்தில் அரை ஏக்கர் நிலத்தில், மரங்களும், செடிகளும் சூழ்ந்த ரம்மியமான இடத்தில் அரண்மனையை ஒத்த பங்களா. வைரங்களைப் பூட்டி பவனிவரும் மனைவி பரிமளா. மூன்று ஆண் வாரிசுகள். மூத்தவன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டான். இரண்டாவது மகன் கருணாகரனோடு மேட்டுப்பாளைய வீட்டில் வசிக்கிறான். அவனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள்.

கடைசி மகன் கோயம்புத்தூரில் தன் அப்பா கட்டிக் கொடுத்த பெரிய மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் பணியாற்றுகிறான். அவனுடைய மனைவியும் ஒரு மருத்துவர்தான். அவனுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள்.

இப்படிப் பேரன்கள், பேத்திகள் என நிறைவான வாழ்க்கை! சமுதாயத்தில் பெரிய அந்தஸ்து. ஆனால் பசுத்தோல் போர்த்திய புலியாக கருணாகரன் வாழ்வது வெளியுலகத்திற்குத் தெரியாத பரம ரகசியமாகக் காப்பாற்றப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே பணக்காரர், ஆனால் பெருஞ்செல்வத்தை, குறுகிய நேரத்தில் குறுக்கு வழியில் சம்பாதிக்கத் தொடங்கி அதில் பெரும் வெற்றியும் கண்டுவிட்டாரே!

தேயிலைத் தோட்டங்கள் மட்டும் அல்ல. அந்த இலைகளைப் பதப்படுத்தி, தேயிலையை பேக் செய்து விற்பனைக்கு அனுப்பும் ஃபேக்டரிகள் மூன்று கருணாகரனுக்குச் சொந்தமாக இருக்கிறது. முதல்தரமான தேயிலையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிடுவார். உள்நாட்டுக்கும், லோக்கல் மார்க்கெட்டுகளுக்கும் அனுப்பும் தேயிலையில் தன் கைவரிசையைக் காட்டுவார்.

ஃபேக்டரிகளுக்கு கீழே சில ரகசிய அறைகள் உண்டு. அங்கே சன்னமான மரத்தூள்களுக்குத் தேயிலை நிறத்தை ஏற்றிக் காய வைத்து, தேயிலைத் தூளோடு கலந்துவிடச் செய்வார்.

பார்த்தால் ஒரு வித்தியாசமும் தெரியாது. அரை மடங்கு தேயிலைத் தூளில் கால் மடங்கு, மரத்தூள் எப்படிப்பட்ட லாபம் பாருங்கள். யார் யாருக்கு எங்கெங்கே பணத்தைத் தட்ட வேண்டுமோ அங்கே தட்டி இந்த அநியாய வியாபாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இது குடும்பத்தாருக்குத் தெரியுமா என்றால் தெரிந்துதான் இருக்கிறது; அதை யாரும் கண்டுக் கொள்வது இல்லை. மங்களூரு பக்கம் ஐந்து ஆண்டுகளுக்கு முன் காப்பி தோட்டத்தை வாங்கி, அங்கே விளையும் காப்பியில் புளியங் கொட்டைகளின் தூளைச் சேர்க்கிறார்கள், யார் அது? வேறு யார்? கருணாகரணும் அவருடைய இரண்டாவது மகனும்தான்.

""டேய் மாயாண்டி, இங்கே வாடா''

""வரேனுங்க'' என்று ஓடி வந்தான்.

""கொஞ்சம் காலைப் புடிச்சி விடு, வலி உயிரே போகுது''.

""ஏம்பா, உனக்குதான் காலை அமுக்குற மிஷின் வாங்கித் தந்திருக்கிறேன் இல்ல'' என்றான் மகன்.

""அடப்போடா, மாயாண்டி எனக்கு எவ்வளவு வருஷங்களா காலை அமுக்கி விடறான். அவன் கைப்பட்டால் வலி பறந்துடும்''.

மாயாண்டி அந்தப் பங்களாவின் அவுட் ஹவுசிலே கடந்த நாற்பத்து ஐந்து வருடங்களாகத் தன் மனைவி அங்கம்மா, மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறான்.

அங்கம்மா வீட்டு வேலைகளில் உதவியாக இருக்க, மாயாண்டி கார்களைத் துடைப்பது, தோட்ட வேலைகளைப் பார்ப்பது, கருணாகரனுக்குப் பணிவிடை செய்வது என்று இந்த வேலைதான் என்று இல்லாமல் ஏவிய வேலைகளை எல்லாம் செய்வான்.

காலச்சக்கரம் தன் ஓட்டத்தைத் தொடர்ந்தது.

நன்றாக உலா வந்து கொண்டிருந்த கருணாகரனின் மனைவியின் வயிற்றில் புற்றுநோய் கண்டு, அமெரிக்காவுக்குச் சென்று வைத்தியம் பார்த்தும் பலனில்லாமல் தன்னுடைய ஐம்பத்தெட்டாவது வயதிலே மரணம் அடைந்து விட்டாள்.

மனைவியின் இழப்பைத் தாங்க முடியாமல் கருணாகரன் நிலைகுலைந்துப் போனார். சரியாகச் சாப்பிடுவது இல்லை, தூங்குவதும் இல்லை.

""அப்பா, ஏன் இப்படி இருக்கறீங்க? நம்மால முடிஞ்ச வைத்தியத்தை எல்லாம் செஞ்சுப் பார்த்தோம். அம்மா இப்படிப் போகணும் என்பதுதான் அவங்க தலையெழுத்து'' என்று மகன் முடிக்கும் முன் கருணாகரன் குறுக்கிட்டார்....

""இல்லப்பா, நாம கண்டதைக் கலக்கி மனுஷங்க வயித்தைக் கெடுத்தோம், அதான்''.

""அப்பா உளறாதீங்க; இந்தாங்க இந்தத் தூக்க மாத்திரையைப் போட்டுக்கிட்டுத் தூங்குங்க''.

கருணாகரனின் மனைவி இறந்து ஆறு மாதங்கள் ஆகியிருந்த நிலையில் மனதளவில் அவர் சற்றுத் தேறியிருந்தார். கடந்த சில தினங்களாக மீண்டும் ஃபேக்டரியை மேற்பார்வையிட கிளம்பி விடுகிறார்.

அன்றும் அப்படித்தான், தன்னுடைய பென்ஸ் காரில் தேயிலை வாசத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தார். அன்று வழக்கத்தைவிட பனிமூட்டம் சற்று அதிகமாக இருந்தது. காரின் டிரைவர் நல்ல அனுபவசாலி, அதனால் வண்டியை ஜாக்கிரதையாக ஓட்டிச் சென்றார்.

பல கொண்டை ஊசி வளைவுகளைக் கார் லாகவமாகக் கடந்து, மேல் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஒரு திருப்பத்தில், எதிரே வந்த சரக்கு லாரி ஒன்றைச் சற்று தாமதமாக உணர்ந்த டிரைவர், உஷாராகி காரைத் திருப்ப, அது நிலை தடுமாறி அதளபாதாளத்தில் உருளத் தொடங்கியது.

காரில் இருந்த பாதுகாப்பு அம்சங்களினால் கருணாகரன் தப்பித்துக் கொண்டார். ஆனால் முதுகுத் தண்டு முறிந்து கழுத்துக்குக் கீழ் உணர்ச்சி அற்று படுத்த படுக்கையாகி விட்டார். வாழ்க்கையே படுக்கை என்றாகிவிட்டது.

அடுத்த பேரிடியாக அமெரிக்காவில் வாழ்ந்துவந்த மகன் மாரடைப்பால் அகால மரணம் அடைந்துவிட்டான் என்பதாக இருந்தது.

மனதாலும், உடலாலும் துடிதுடித்து நொந்து நூலாகி, படுக்கைப் புண் கண்டு கருணாகரன் உயிரை விட்ட பொழுது அவருக்கு வயது அறுபத்து ஐந்தாக இருந்தது.

அன்று பங்களாவில் பெரும் கூட்டம் கூடி இருந்தது. கருணாகரனுக்கு பதினாறாவது நாள் துக்க தினம் முடிந்த அடுத்த நாள் அது. ஆடிட்டர்களும், குடும்ப வக்கீலும், கருணாகரனின் வாரிசுகளும் குழுமி இருந்தனர்.

குடும்பச் சொத்து பிரிக்கப்பட்டு அவரவர்களுக்குச் சேர வேண்டியதை கருணாகரனின் விருப்பத்திற்கு ஏற்ப, அவர் எழுதிச் சென்ற உயிலின்படி பிரித்துக் கொடுக்கப்பட்டது.

""யாருப்பா அது மாயாண்டி, அவரைக் கூப்பிடு'' என்றார் ஆடிட்டர்.

வெளியே, தோட்டத்து வேலையில் இருந்த மாயாண்டியை அழைத்து வந்தனர்.
""இந்தாப்பா இதைப் பிடி''.

""என்னய்யா இது?''

"'கருணாகரன் சார், உனக்கு ஐந்து லட்ச ரூபாய் பணமும், மேட்டுப்பாளையத்து டவுனிலே ஒரு கிரவுண்டிலே ஒரு வீட்டையும் கொடுத்திருக்கிறார். நீ அவருக்கு விஸ்வாசமா வேலை பார்த்ததுக்கு ஐயாவுடைய பரிசு''.

கைகள் நடுங்க, அந்தப் பணத்தையும் பத்திரத்தையும் வாங்கிக் கொண்டான் மாயாண்டி. அவன் கண்கள் கலங்கி இருந்தன.

அந்தக் கூட்டத்தில் ஒரு ஓரத்தில் கருணாகரனின் சொந்தக்காரர் ஒருவர் நின்றுக் கொண்டிருந்தார். கருணாகரனின் மனைவியின் ஒன்று விட்ட சகோதரர். கோயம்புத்தூரில் அநாதை ஆசிரமம் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்.

அவர் அருகே மாயாண்டி சென்றான்.

"'ஐயா, இந்தாங்க இந்தப் பணத்தையும் இந்த வீட்டையும் அநாதை குழந்தைகளுக்காக உபயோகப்படுத்துங்க''.

""மாயாண்டி, உனக்கு என்ன பைத்தியமா? இது உனக்குச் சேரவேண்டியது, இதைப் போய்...''

""ஐயா இது நானாக என் இஷ்டப்படி கொடுக்கிறேன். மறுக்காம வாங்கிக்குங்க'' என்று கூறிவிட்டு, திரும்பி நடந்தான்.

அவனுடைய இந்தச் செயல் அங்கே கூடி இருந்த அனைவரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

செய்தி அறிந்து, மாரிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அங்கம்மா அழுது புரண்டாள்.

""அடப்பாவி மனுஷா, உனக்குப் புத்தி பிசகிப் போயிடுச்சா, இப்படித் தானா வந்த ஸ்ரீதேவியை காலால் உதைச்சுத் தள்ளிட்டியே'' என்று கதறினாள்.

""இது தானா வந்த ஸ்ரீதேவி இல்லடி மூதேவி. இது பாவப்பட்ட பணம், இந்தச் சொத்து நம்மை நிம்மதி இழக்க வெச்சிடும், அதள பாதாளத்தில் தள்ளிடும். உழைப்புக்குக் கூலி வாங்கிட்டேன், இது பலர் வயிற்றில் அடிச்ச பணம். நமக்கு இது வேண்டாம்'' என்று கருணாகரனின் கலப்படத்தைத் தெரிந்திருந்த மாயாண்டியின் மனம் புலம்பியது.

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.

(குறள் எண் : 755)
 

பொருள் :
பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட 
வேண்டும்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com