இரட்டை உலக சாம்பியன்!
ஸ்குவாஷ் விளையாட்டில் நான்கு ஆண்டுகள் ஓய்வுக்கு பின் இரட்டை ஆண் குழந்தைகள் ஈன்ற நிலையில் களமிறங்கிய தீபிகா பல்லிக்கல் இரட்டை உலக சாம்பியன் பட்டம் பெற்று அசத்தி உள்ளார்.


ஸ்குவாஷ் விளையாட்டில் நான்கு ஆண்டுகள் ஓய்வுக்கு பின் இரட்டை ஆண் குழந்தைகள் ஈன்ற நிலையில் களமிறங்கிய தீபிகா பல்லிக்கல் இரட்டை உலக சாம்பியன் பட்டம் பெற்று அசத்தி உள்ளார்.
உலக அரங்கில் கால்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், ஹாக்கி, வாலிபால், குத்துச்சண்டை, கிரிக்கெட் உள்பட பல்வேறு விளையாட்டுகளுக்கு தனி ஈர்ப்பு உள்ளது. இதில் ஸ்குவாஷ் விளையாட்டு அதிக பொருள்செலவில் ஆடப்படும் ஆட்டமாகும்.
நான்கு புறம் கண்ணாடி சுவர்களால் மூடப்பட்ட அறையில் 2 அல்லது 4 வீரர், வீராங்கனைகள் ராக்கெட் என்னும் மட்டையைக் கொண்டு ஆடுவது ஸ்குவாஷ் ஆகும்.
முதன்முதலாக 19-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஆடப்பட்ட ஸ்குவாஷ் தற்போது 185 நாடுகளில் 2 கோடி பேரால் ஆடப்பட்டு வருகிறது. உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த விளையாட்டுக்கு சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது. எனினும் ஒலிம்பிக் போட்டிகளில் இன்னும் இடம்பெறவில்லை. ஆசிய, காமன்வெல்த் போட்டி அளவில் ஆடப்படுகிறது. இந்தியாவிலும் 19 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் ஸ்குவாஷ் ஆடப்படுகிறது.
அடையாளம் தந்த தீபிகா-ஜோஷ்னா: நமது நாட்டில் ஸ்குவாஷ் விளையாட்டுக்கு அடையாளம் தந்தவர்களாக திகழ்பவர்கள் தீபிகா பல்லிக்கல், ஜோஷ்னா சின்னப்பா ஆகிய இருவரும் முக்கியமானவர்கள்.
தனது 10 வயது முதல் ஸ்குவாஷ் ஆட்டத்தில் ஆர்வமுடன் ஆடி வரும் தீபிகா 2012-இல் பிஎஸ்கே தரவரிசையில் முதல் 10 இடங்களில் நுழைந்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தினார்.
சென்னையில் பிறந்த தீபிகாவின் தாயார் சூஸன் பல்லிக்கல்லும் சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை ஆவார். 2006-இல் தொழில்முறை வீராங்கனையாக மாறிய நிலையில், 2014-இல் காமன்வெல்த் போட்டிகளில் ஜோஷ்னாவுடன் இணைந்து முதன்முதலாக தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். 2014 ஆசியப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் தன்வசப்படுத்தினார். 2018 ஆசியப் போட்டியில் தீபிகா, ஜோஷ்னா இருவரும் ஒற்றையர் பிரிவுகளில் வெண்கலம் வென்றனர்.
சமத்துவம் கோரி போராட்டம்: கடந்த 2015-இல் வீரர்களுக்கு நிகராக வீராங்கனைகளுக்கும் ஆட்ட ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகினார். அதன்பின் அவர் களத்துக்கு செல்லவில்லை. அதன்பின் ஊதியத்தில் சமநிலை கிடைத்தபின் களத்துக்கு திரும்பி தேசிய சாம்பியன் பட்டமும் வென்றார் தீபிகா.
சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவியான தீபிகா 2015-இல் பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கை கிறிஸ்துவ மற்றும் இந்து முறைப்படி மணம் புரிந்தார்.
இரட்டை ஆண் குழந்தைகள்: தீபிகா-கார்த்திக் தம்பதிக்கு கடந்த 2021 அக்டோபர் மாதம் கபீர், ஸியான் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. தொடர்ந்து இன்டீரியர் டெக்கரேஷன் தொழிலும் புரிந்தார் தீபிகா. 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றார் தீபிகா.
இரட்டை உலக சாம்பியன்: இந்நிலையில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் அண்மையில் நடைபெற்ற உலக ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில் சக வீராங்கனை ஜோஷ்னா சின்னாப்பாவுடன் இணைந்து தங்கப் பதக்கத்தையும், கலப்பு இரட்டையர் பிரிவில் செளரவ் கோஷலுடன் இணைந்து தங்கப் பதக்கம் என இரட்டை உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இதுதொடர்பாக தீபிகா கூறியுள்ளதாவது:
""நீண்ட நாள் ஓய்வுக்கு பின் மீண்டும் மைதானத்துக்கு திரும்பியது மனது, உடலளவில் கடினமாக இருந்தது. எனினும் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியாகும். நாட்டுக்காக ஆடி பதக்கம் வெல்வது சிறப்பானது.
இன்டீரியர் டெக்கரேஷன் தொழில் குறித்த ஆர்வம் இல்லை என்றாலும் எனது சக உரிமையாளர் ஒத்துழைப்பு கிட்டியது.
ஸ்குவாஷ் விளையாட்டில் எனக்கு மிகவும் பக்க பலமாக திகழ்கிறார் தினேஷ் கார்த்திக். தற்போது இந்திய விளையாட்டில் பெண்களின் பங்கு கணிசமாக அதிகரித்துள்ளது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...