கல்கியின் வரலாறு ஆங்கிலத்தில்!

கெளரி ராம்நாராயண் -  பத்திரிகையாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், நாடக இயக்குநர், மொழி பெயர்ப்பாளர், கர்நாடக இசைக்கலைஞர்.
கல்கியின் வரலாறு ஆங்கிலத்தில்!

கெளரி ராம்நாராயண் - பத்திரிகையாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், நாடக இயக்குநர், மொழி பெயர்ப்பாளர், கர்நாடக இசைக்கலைஞர். இவருடைய தாத்தா தமிழின் புகழ் பெற்ற எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், சுதந்திரப் போராட்ட வீரரான அமரர் கல்கி!

கல்கியின் "அலை ஒசை' நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கும் கெளரி ராம்நாராயண் அண்மையில், சுந்தா எழுதிய "பொன்னியின் புதல்வர்' என்ற அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாற்று நூலினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். தமிழில் சுமார் 900 பக்கங்கள் கொண்ட அந்தப்புத்தகம் சுமார் 1200 பக்கங்களில் இரண்டு பாகங்களாக "கல்கி கிருஷ்ணமூர்த்தி : ஹிஸ் லைஃப் அண்டு டைம்ஸ்' என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது. கெளரிராம் நாராயணனுடன் ஓரு சந்திப்பு:

அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

கரோனா தொற்று, அதன் காரணமான பொது முடக்கம் எல்லாம் உச்ச கட்டத்தில் இருந்த நேரம். வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல், நமக்கு தொற்று வந்துவிடுமோ என்ற பயத்துடன் வீட்டுக்குள்ளே மக்கள் முடங்கிக் கிடந்த சூழ்நிலை. நானும் மனச்சோர்வுற்று, அப்படிப்பட்ட நிலையில்தான் இருந்தேன். அப்போது, அதிலிருந்து விடுபட என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அமெரிக்காவில் உள்ள என் தம்பி சங்கர், லண்டனில் உள்ள என் தங்கை ருக்மிணி ஆகியோருடன் ஜூம் செயலி மூலமாக இணைந்து அமரர் கல்கியின் நாவல் ஒன்றை நான் படிக்க, அவர்கள் கேட்பது என முடிவாயிற்று. நான் சுதந்திரப் போராட்டப் பின்னணியில் எழுதப்பட்ட "அலை ஓசை' நாவலைப் படித்தேன். அவர்கள் ரசித்துக் கேட்டு மகிழ்ந்தார்கள். அந்த நாவலைப் படித்து முடித்தபோது, இது, தாத்தா எழுதிய கதை. ஆனால், அவருடைய வாழ்க்கை வரலாறே அரை நூற்றாண்டு கால இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் பதிவுதானே! அடுத்து அதைப் படிக்கலாம் என முடிவு செய்தோம்.

"பொன்னியின் புதல்வர்' புத்தகத்தை நான் தினமும் படித்துச் சொல்லுவதை அமரர் கல்கியின் வாழ்க்கை சம்பவங்களை என் தங்கை ருக்மிணி, லண்டனில் வசித்த தன் நெருங்கிய சீனத் தோழியான ரூபியிடம் பகிர்ந்து கொள்வார். நாளடைவில், ரூபிக்கு கல்கியின் வாழ்க்கை கதையைக் கேட்பதில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. அவர், இந்தப் புத்தகத்தை நீங்கள் ஏன் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கக் கூடாது? என்று கேட்டார். அது எங்களை யோசிக்க வைத்தது. மொழி பெயர்ப்பை நான் செய்து கொடுக்க, ருக்மிணி புத்தக வடிவமைப்புப் பணிகளை கவனிப்பார். சங்கர் அதை பதிப்பிக்கும் பணியில் ஈடுபடுவார் என முடிவு செய்தோம்.

எப்படி இருந்தது மொழி பெயர்ப்புப் பணி?

தினமும் காலையில் ஐந்தரைக்கு எழுந்து, வாக்கிங், காலைப்பணிகளை முடித்துவிட்டு, ஏழு மணிக்கு உட்கார்ந்தால், ஒரு மணி வரை மொழி பெயர்ப்புப் பணி நடக்கும். முழுவதுமாக மொழி பெயர்த்து முடிக்க சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆனது.

மொழி பெயர்ப்பில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

தலைப்பே ஒரு சவால்தான்! "பொன்னியின் புதல்வர்' என்பதை "சன் ஆஃப் பொன்னி' என்று மொழி பெயர்த்தால் என்ன அர்த்தம் வரும்? ஆகவேதான் புத்தகத்துக்கு "கல்கி கிருஷ்ணமூர்த்தி : ஹிஸ் லைஃப் அண்டு டைம்ஸ்' என்று தலைப்பு வைத்தேன். மேலும், சுந்தா கல்கியின் வாழ்க்கை வரலாற்றினை எழுதும்போது கல்கி எழுதியவற்றையே மேற்கோள் காட்டி எழுதி இருக்கிறார். அது மட்டுமில்லை. பொன்னியின் புதல்வர் கல்கியின் வாழ்க்கை வரலாறு மட்டுமில்லை. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சுமார் அரை நூற்றாண்டு கால வரலாறும் ஆகும். அடர்ந்த மொழி வளம் கொண்ட ஓர் எழுத்தை, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்போது எதிர்கொள்ளக் கூடிய எல்லா சவால்களையும் நானும் எதிர்கொண்டேன்.

மொழி பெயர்ப்பின்போது உங்களை நெகிழ வைத்த பகுதி எது?

"மணிக்கொடி' எழுத்தாளர்கள் கல்கியை விமர்சனம் செய்தது அனைவருக்கும் தெரியும். கல்கியை கடுமையாக விமர்சனம் செய்தவர்களில் புதுமைபித்தனும் ஒருவர். அவரது விமர்சனங்களுக்கு, கல்கி பதில் கொடுத்திருக்கிறார் என்பது வேறு விஷயம். அவர் மறைவுக்குப் பின், அவரது குடும்பம் பொருளாதார நிலையில் பாதிப்புக்குள்ளாகி, புதுமைப் பித்தனின் மனைவி கல்கியை சந்தித்து உதவி கோரியபோது, புதுமைப்பித்தனுடனான கருத்து மோதல்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மூலமாகவும், கல்கி பத்திரிகை மூலமாகவும், தானே சொந்தமாகவும் நிதி திரட்டி, அதை வங்கியில் போட்டு வைத்து, அவருக்கு மாதாமாதம் ஒரு தொகை தொடர்ந்து கிடைக்க வழி செய்தார். கல்கியின் அந்த மனித நேயம் என்னை மனம் நெகிழச் செய்தது.

அதே போல, காமராஜரது ஒரு செயலை விமர்சித்து "பெரிய மனிதர் சின்ன புத்தி' என்று தலையங்கம் எழுதுகிறார் கல்கி. சிறிது காலம் கழித்து, காமராஜர் குறித்து அத்தனை கடுமையாக எழுதியதற்காக அவர் வருத்தப்படுகிறர். அதன் பிறகு ஒரு சமயம் பத்திரிகையாளர் சாவி, காமராஜரை சந்தித்தபோது, கல்கியின் கடுமையான விமர்சனம் பற்றி கேள்வி கேட்கிறார். அதற்கு காமராஜர், கல்கி என் மீது வெறுப்பு கொண்டு அப்படி எழுதவில்லை; ராஜாஜி மீது கொண்ட பக்தி காரணமாக அப்படி எழுதினார் என்று சொல்கிறார். அந்த இடத்தில் காமராஜரின் பார்வை, மனப்பக்குவம் என்னை பிரமிக்க வித்தது.

திருமதி. கல்கி பற்றி ஒரு அத்தியாயத்தை கூடுதலாக எழுதி இருப்பதன் பின்னணி?

எங்கள் பாட்டி, ருக்மிணி (திருமதி கல்கி) ஒரு அற்புதமான பெண்மணி. அமரர் கல்கி போன்ற ஒரு அற்புதமான மனிதர் தனக்கு கணவராக அமைந்ததில், அமரர் கல்கி போன்ற ஒரு மகத்தான மனிதருக்கு தான் மனைவியானதில் அவருக்கு அளவிலா பெருமை. சந்தோஷம். மனநிறைவு. அவர், தாத்தா கல்கி பற்றிய பல அரிய விஷயங்களை பேரக் குழந்தைகளோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவருக்கு சுமார் 45 வயதிருக்கும்போது, கல்கி மறைந்துவிட்டார். பாட்டி 90 வயது வரை வாழ்ந்தார். தன் தள்ளாத வயதிலும், தினமும் காலையில் குளித்துவிட்டு வந்ததும், தோட்டத்தில் இருந்து பூப்பறித்துக் கொண்டு வந்து அமரர் கல்கியின் படத்துக்கு சூடுவது அவரது பழக்கம். எனவேதான், தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில், பாட்டியைப் பற்றியும் விரிவாகச் சொல்ல வேண்டும் என ஆசைப்பட்டு, அந்த அத்தியாயத்தை எழுதி, சேர்த்திருக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com