கர்நாடக இசையின் ரத்தினங்கள்!

"ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்' என்பார்கள்; கர்நாடக இசையின் ராகக் கருத்தைப் புரிந்துகொள்ள உதவும் வகையில், பதினாறு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம் என்றே சொல்லலாம்' என்கிறார் வித்யா பவானி சுரேஷ்.
கர்நாடக இசையின் ரத்தினங்கள்!


"ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்' என்பார்கள்; கர்நாடக இசையின் ராகக் கருத்தைப் புரிந்துகொள்ள உதவும் வகையில், பதினாறு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம் என்றே சொல்லலாம்' என்கிறார் வித்யா பவானி சுரேஷ். இவர் பரதநாட்டியக் கலைஞர் மட்டுமல்ல; இசை ஆராய்ச்சியாளருமாவார். இசை, நடனம் தொடர்பான 43 நூல்களின் ஆசிரியர். அவர் அண்மையில் எழுதிய "மேளகர்த்தாஸ் - கர்நாடக இசையின் ரத்தினங்கள்' என்ற நூல் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரிடம் பேசுவோம்:

உங்களின் நடனம் எவ்வாறு தொடங்கியது?

எங்கள் குடும்பம் போபாலில் இருந்தபோது, நான்கரை வயது சிறுமியாக கதக்கில் சேர்ந்தேன். சிறு வயதிலேயே கர்நாடக இசையில் எனது தாய் விஜயலட்சுமி மூர்த்தி பயிற்சி அளிக்கத் தொடங்கினார். எனது தந்தையின் எதிர்பாராத மறைவால், எங்கள் குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. ஐந்தரை வயதில், என்னை வி.பி. தனஞ்செயனின் நடனப் பள்ளியில் எனது தாய் சேர்த்தார். 12 வயதில் நான் கே.ஜே. சரசாவிடமும் நடனம் கற்றேன். 1986-ஆம் ஆண்டு ஆக. 14-இல் எனது 16-ஆவது வயதில் நடன அரங்கேற்றம் நடைபெற்றது. விதுஷி ஏ.பி.கோமளா இசையைக் கற்பித்தார்.

நடனம், படிப்பு காரணமாக, இசை வகுப்புகளைத் தொடர முடியவில்லை. எனது 38-ஆவது வயதில், ஏ.பி. கோமளாவிடம் இசை வகுப்பில் மீண்டும் பயிற்சி பெற தொடங்கி, அதன்பின்னர் 10 ஆண்டுகள் இசையில் தீவிரப் பயிற்சி பெற்றேன்.

மறக்க முடியாத நடன நிகழ்ச்சிகள்?

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் பிரம்மாண்டமான நந்திக்கு முன் அமைக்கப்பட்ட மேடையில் நடனமாடியது, சிதம்பரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் , தமிழ் இசைச் சங்கத்தில் தொடர்ந்து நடனமாடியது போன்றவை மறக்க முடியாத நடன நிகழ்ச்சிகளாகும். பரிபாடல், திருமுருகாற்றுப்படை போன்ற சங்கக் காலப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டும் நடனம் அமைத்துள்ளேன். நளவெண்பா, மீனாட்சி அம்மன் பிள்ளைத் தமிழ், திருப்புகழ்ப் பாடல்கள் போன்ற வற்றுக்கும் நடனமாடியுள்ளேன்.

"தமிழ் இலக்கியமும், பாரதமும்' என்ற தலைப்பில் மலேசியாவில் 21 நாள் தொடர் நிகழ்ச்சி நடத்தினேன். மாமல்லபுரம் நடன விழா வாழ்க்கையில் திருப்புமுனையைத் தந்தது. உலக இசை ஆல்பமான "அஹிம்சா'வுக்காக கராத்தே, பரத நாட்டியத்துடன் இணைந்து ஆடியுள்ளேன். திருப்புகழ்ப் பாடலின் அடிப்படையில், 20 நிமிடங்களில் முழு ராமாயணம் போன்ற நிகழ்ச்சிகளும் மறக்க முடியாதவை.

மேளகர்த்தாக்கள் என்றால் என்ன?

மேளகர்த்தா என்பது கர்நாடக இசையின் தாய் ராகங்கள். கர்நாடக இசையில் எண்ணற்ற ராகங்கள் உள்ளன. அனைத்தும் 72 ராகங்களில் ஏதேனும் ஒன்றில் ஜன்யமாகும். கர்நாடக இசையை புரிந்துகொள்ள ஆர்வமுள்ள எவருக்கும் மேளகர்த்தாவைப் பற்றிய புரிதல் பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால், பெரும்பாலான மேளகர்த்தாக்கள் விவாதி ராகங்கள் எனப்படும் ராகங்களின் வகையின்கீழ் வருவதால், புரிந்துகொள்வது கடினம். 72 ராகங்களில் 40 ராகங்கள் விவாதி ராகங்கள்.

7 ஸ்வரங்கள் எப்படி 12 ஸ்வரங்கள்ஆகின்றன; 12 ஸ்வரங்கள் எப்படி 16 ஆகின்றன; இந்த 16 ஸ்வர அமைப்புதான் மேளகர்த்தா திட்டத்துக்கான அடிப்படை. "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்' என்ற புகழ்ப் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடல் ஒன்றும் உண்டு. கர்நாடக இசையின் ராகக் கருத்தைப் புரிந்துகொள்ள உதவும் வகையில், பதினாறு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்' என்றும் சொல்லலாம்.

மேளகர்த்தா ராகங்கள் பற்றிய நூலின் சிறப்பு?

மேளகர்த்தா திட்டம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இது கணிதம், வடிவியல், தர்க்கம், அறிவியல் பகுத்தறிவின் சந்திப்பு. இந்தத் திட்டத்தின் கட்டமைப்பை விளக்கி, 19 - ஆண்டுகளுக்கு முன் சிறிய நூல் ஒன்றை எழுதினேன். ஆனால், இந்த அளவிலான பெரிய நூலை எழுதுவது அதில் உள்ள ஒவ்வொரு மேளகர்த்தாவையும் விவரிப்பது மிகவும் கடினமானது.

கர்நாடக இசையில் 50 ராகங்கள் என்பதே விரிவான நூல்தான். அதில், சில அபூர்வ மேளகர்த்தாக்களை உள்ளடக்கி இருந்தேன். அப்போதிலிருந்து 72 மேளகர்தாகளுக்குள் மிக ஆழமாகச் சென்று, ஒரு முழுமையாக படைப்பை எழுத வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்தது.

இசையை பற்றி எழுதும்போது நான் எப்போதும் இரு அடிப்படைகளை மனதில் வைத்திருப்பேன். நுண்கலைகளை அறிவியல்பூர்வமாக எழுதுதல், நீர்த்துப் போகாமல் எளிமைப்படுத்துதல் என்பதே அவை இரண்டும்.

இந்த நூல் ஒரு அன்பான நண்பரின் தொனியில் உள்ளது. ஒவ்வொரு மேளகர்த்தா ராகத்தையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஒவ்வொரு ராகமும் மேளகர்த்தா அட்டவணையில் உள்ள மற்றொரு பெயர் அல்ல. ஒவ்வொரு ராகத்தையும் ஒரு அழகான அனுபவமாக நேயர்கள் உணர வேண்டும்.

மேளகர்த்தாக்களைப் பற்றி எழுதுவது மிகப்பெரிய சவால் என்னவென்றால், கட்டமைப்பு ரீதியாக அனைத்து ராகங்களும் ஒரே மாதிரியைப் பின்பற்றுகின்றன. ஒவ்வொரு மேளகர்த்தா ராகத்திலும், ஒரே அமைப்பில் 7 ஸ்வரங்கள் உள்ளன. மேலும் அடுத்தடுத்த இரு ராகங்கள் ஒரே ஸ்வரத்தால் வேறுபடுகின்றன. எனவே, ராகங்களை வேறுபடுத்தி விளக்குவது உண்மையான சவாலாக இருந்தது.

கேரள கலை வடிவங்களான கதகளி, கொடியாட்டம், ஒட்டன் துள்ளல், மோகினியாட்டம், சாக்கியர் கூத்து போன்ற நூல்களையும் எழுதியிருக்கிறீர்கள். அவற்றில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?

கேரளத்தில் வளர்ந்த எனது கணவர் சுரேஷ் வாயிலாகவே, கேரள வடிவங்களை அறிந்தேன். அவரது சொந்த ஊரில் இரு மாதங்கள் தங்கி, இந்தக் கலைவடிவங்களை ஆழமாக ஆய்வு செய்தோம். அவரது நெருங்கிய நண்பரான மஜீத் குருக்கள் சிறந்த கலை ஆர்வலர். அவரும் உதவி புரிந்தார்.

பரதநாட்டியக் கலைஞரான நீங்கள் ஆடாத வடிவங்களைப் பற்றி எழுதிய அனுபவம் எப்படி?

எம்.ஏ. நாட்டுப்புறவியல் படிக்கும்போது, அகநிலைப் பார்வை, புறநிலைப் பார்வை பற்றி கற்பிக்கப்பட்டன. நான் கதகளி அல்லது கொடியாட்டம் கலைஞன் அல்ல என்பதால், ஆராய்ச்சியாளரின் பார்வையில் என்னால் பார்க்க முடியும். இந்த அற்புதமான கலைகளை பற்றிய சிறந்த நூல்களை எழுத உதவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com