குவில்ட் என்னும் அரிய தையல் கலை!
குளிர் மிகுந்த வட இந்தியாவில் கதகதப்புக்காக பயன்படுத்தப்படும் ஒருவித போர்வையை குவில்ட் என்று சொல்லுவார்கள்.


குளிர் மிகுந்த வட இந்தியாவில் கதகதப்புக்காக பயன்படுத்தப்படும் ஒருவித போர்வையை குவில்ட் என்று சொல்லுவார்கள். அதில், ஓவியங்கள் வரைந்தும், நளினமான தையல் கலையைப் பயன்படுத்தியும் கலை நேர்த்தியோடு மெருகூட்டுவார்கள். அதன் அடுத்த கட்டமாக, தடித்த துணியில் ஓவியம் வரைந்து, அதற்கேற்ப தையல் வேலைபாடுகள் செய்த குவில்ட்டுகள், வசதியானவர்களின் வீட்டு வரவேற்பறையிலும், படுக்கை அறைகளிலும் சுவர்களை அலங்கரிக்கும் கலைப் பொருள்களாய் இருப்பதைக் காணலாம்.
மேற்கத்திய நாடுகளில், குவில்ட் என்ற கலைத் தையல் மிகவும் பிரபலமான கலை வடிவமாக இருந்தாலும், நம் நாட்டில் அத்தனை பிரபலமில்லை. இந்தக் கலையை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது "குவில்ட் இந்தியா பவுண்டேஷன்' அமைப்பு. இந்த அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் சென்னையைச் சேர்ந்த டீனா கத்வால் மற்றும் வர்ஷா சுந்தரராஜன் இருவரும் குவில்ட் கலை பற்றி விரிவாகப் பேசுகிறார்கள்:
குவில்ட் என்பது என்ன?
குவில்ட் என்பது மூன்று அடுக்கு துணிகள் கொண்டு தைக்கப்படும் ஒன்று. குளிர் பிரதேசங்களில், பயன்படுத்தப்படும் தடித்த போர்வை என்று சொல்லலாம். இவை வட இந்தியாவின் குளிப் பிரதேசங்களில் மக்களால் பயன்படுத்தப்படுவது தான். நாளடைவில், அதை ஒரு கேன்வாஸ் போலப் பதப்படுத்தி, தையற்கலையையும், ஓவியக்கலையும் ஒருங்கிணைத்து, அதற்கு ஒரு கலைவடிவம் கிடைத்தது. நம் நாட்டில் தெற்கை விட வடக்கே குவில்ட் கொஞ்சம் பிரபலமான ஒரு கலை வடிவமாக இருக்கிறது என்று சொல்லலாம்.
குவில்ட் கலை இந்திய பாரம்பரியக் கலைகளில் ஒன்றா? அல்லது மேற்கத்திய இறக்குமதிக் கலையா?
தையல் கலையின் ஒரு அங்கம்தான் குவில்ட் தயாரிப்பது. இந்தியாவைப் பொருத்தவரை, சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த ஒரு கல்வெட்டில் ஓர் ஆணும் பெண்ணும் நிற்பதைக் காணலாம். அவர்கள் அணிந்திருக்கும் ஆடை குவில்ட் பாணியில் தயாரிக்கப்பட்டதுதான். அதன் பின் குவில்ட் பற்றிய பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ஏதுமில்லை.
முன் காலத்தில் போர்களில் ஈடுபடும் வீரர்கள் தற்காப்புக்காக மிகவும் கனமான இரும்புக் கவசங்களை அணிந்துகொண்டு போர்க்களத்துகுச் செல்வார்கள். ஆனால், அவர்கள் அந்தக் கவசங்களை நேரடியாக அணிந்துகொண்டால், மிகவும் சிரமப்படவேண்டி இருக்கும். எனவே, குவில்ட் துணியினலான ஆடைகளை உள்ளே அணிந்துகொண்டு, அதன் மேல் இரும்புக்கவசங்களை அணிந்துகொள்வது அந்தக் காலத்தில் பழக்கத்தில் இருந்ததாக தெரிய வருகிறது. குருத்துவாராக்களிலும், தர்காக்களிலும் பளபளப்பான வண்ணத் துணிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட குவில்ட்களை காணமுடியும். பாரம்பரியம் மிக்க கோயில்களில் நடக்கும் திருவிழாக்களில் வீதி உலாக்கள் நடைபெறும்போது இத்தகைய கலைப் படைப்புகளை உடன் ஏந்தி வருவதைக் காணலாம்.
குவில்ட்டில் பயன்படுத்தப்படும் துணி மற்றும் நூல் இவைகள் காலப்போக்கில் மக்கிப் போகக்கூடியவை. எனவே, பழங்காலம் தொட்டே குவில்ட் கலை இருந்து வந்த போதிலும், கல்வெட்டு போல இல்லாமல் அவை அழிந்துவிட்டன. மேற்கத்திய நாடுகளில் இது மிகவும் பிரபலமாக விளங்குகிறது. நம்நாட்டில், தீவிர ஆர்வம் உள்ள குவில்ட் கலைஞர்கள் இணைந்து குவில்ட் இந்தியா பவுண்டேஷன் எனற அமைப்பினை உருவாக்கி, அதனை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தவும், அதிகமானவர்களை இந்தக் கலையில் ஈடுபடுத்தவும் பல்வேறு வகையான முயற்சிகளை செய்து வருகிறோம்.
குவில்ட் ஓவியங்கள் வரைவதற்கு பிரத்யேகமான ஊசி, நூல் வகைகள் அவசியமா?
இல்லை. நாம் வழக்கமாக துணி தைக்கப் பயன்படுத்தும் ஊசி, நூல் வகைகளையே பயன்படுத்தலாம். இன்னொரு விஷயம் தெரியுமா? நல்ல பயிற்சி இருந்தால், கையால் தைக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. வீட்டில் நாம் பயன்படுத்தும் தையல் மிஷினில் கூட தைக்கலாம்.
அண்மையில் சென்னையில் நடந்த குவில்ட் கண்காட்சி அதன் ஓர் அங்கம்தானா?
ஆமாம்! குவில்ட் கலையைப் பிரபலப்படுத்த குவில்ட் இந்தியா பவுண்டேஷன், அகில இந்திய அளவில், போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குகிறது. சிறந்த குவில்ட் ஓவியங்களைக் கொண்டு பல்வேறு ஊர்களிலும் கண்காட்சிகள் நடத்தி மக்கள் மத்தியில் குவில்ட் கலையை அறிமுகப்படுத்துகிறது. குவில்ட் கலையில் கற்பனைகளுக்கு வானமே எல்லை. மூன்று அடுக்குகளாகத் துணிகளைப் பயன்படுத்தியும், அவற்றின் மீது ஓவியங்கள் வரைந்தும் குவில்ட்டில் கலை அம்சம் மிளிரச் செய்யலாம்.
இந்தக் கண்காட்சியில் ஒரே ஓர் ஆண் வரைந்த குவில்ட் மட்டுமே இடம்பெற்றிருந்ததே? அப்படியெனில் பெண்கள்தான் அதிகமாக இந்தக் கலையில் ஈடுபடுகிறீர்களோ?
பொதுவாகவே இது மிகவும் பொறுமையோடு செய்யும் ஒரு வேலை. ஒரு குவில்ட்டை ஆரம்பித்தால் கற்பனைத் திறன், வண்ண வேலைபாடுகள் ஆகியவற்றைப் பொறுத்து, முடிப்பதற்குப் பலநாட்கள் ஆகும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொதுவாக நிறைய நேரம் இருக்கும். எனவே, இந்தியாவில் பெண்கள்தான் அதிக அளவில் குவில்ட் ஓவியக் கலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டத்தில் சில கிராமங்களில் பாரம்பரியமாக சில குடும்பங்கள் குவில்ட் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். சில பள்ளிகளில் குவில்ட் கலையை அறிமுகப்படுத்தி, மாணவிகளுக்கு இதில் ஆர்வம் ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...