என் பணி - திருப்பணி!
மகாலட்சுமி சுப்ரமணியம். தஞ்சை மண்ணில் பிறந்து வளர்ந்தவர். காஞ்சி மடத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.


மகாலட்சுமி சுப்ரமணியம். தஞ்சை மண்ணில் பிறந்து வளர்ந்தவர். காஞ்சி மடத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். சென்னையில், தனியார் பள்ளி ஒன்றில் நூலகராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் நாட்டின் பல்வேறு கோயில்களையும் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்து வைக்கும் பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். இதுவரை 180-க்கும் அதிகமான கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கும் வாய்ப்பினை இறைவன் எனக்கு வழங்கி இருப்பது நான் பெற்ற பெரும் பாக்கியம்'' என்று நெஞ்சம் நெகிழக் கூறும் மகாலட்சுமி சுப்ரமணியத்துடன் ஒரு பேட்டி:
உங்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் வந்தது எப்படி?
எங்களுக்கு கும்பகோணத்துக்குப் பக்கத்தில் ஒரு கிராமம்தான் பூர்வீகம். எங்கள் தாத்தா காலத்தில் இருந்தே காஞ்சி மடத்தோடு எங்களுக்கு நெருக்கமான தொடர்பு உண்டு. வீட்டில் எந்த ஒரு விஷயமானாலும், மகாபெரியவரை தரிசனம் செய்து, அவரது அருளாசியோடுதான் ஆரம்பிப்போம். திருமணமாகி, சென்னை வந்தபோது, என் கணவர் பணியாற்றிய தனியார் நிறுவனத்தில் திங்கட்கிழமை வார விடுமுறை. எனவே, திங்கட்கிழமை என்றால் காஞ்சிபுரம் சென்று மகா பெரியவரை தரிசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டோம்.
மகாபெரியவர் அருளை உணர்ந்த அனுபவம் இருக்குமே! அதைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?
"அவரிடம் ஏராளமான விஷயங்கள் பற்றிகேட்டு, தெளிவு பெற்றிருக்கிறோம். ஒரு நாள், அவரை தரிசனம் செய்ய ஒரு சில பக்தர்கள் மட்டுமே காத்திருந்தனர். அன்றைய தினம், நம் புராதனமான கோயில்களின் பெருமைகளையெல்லாம் விளக்கிச் சொல்லிவிட்டு, தொடர்ந்து பல கோயில்களில் ஒரு வேளை பூஜைக்குக் கூட வழி இல்லாத நிலைமை இன்று நிலவுகிறது.
கோயிலில் தெய்வப் பணியில் ஈடுபட்டிருக்கும் அர்ச்சகர்கள் மிகவும் ஏழ்மையில் இருக்கிறார்கள். ஆகவேதான், அவர்களின் அடுத்த தலைமுறையினர், வேறு வேலை தேடி, வெளியூர்களுக்குப் போகும்படியான சூழ்நிலை நிலவுகிறது. அர்ச்சகர்களுக்கு மாதாமாதம் ஓர் உதவித்தொகை கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்காக, நான் இங்கே இருப்பவர்களிடம் உதவி கேட்டு ஒரு கோரிக்கை வைக்கிறேன். யார் யாரெல்லாம் மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறீர்களோ அவர்கள் எல்லோரும் எனக்கு உங்கள் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாகக் கொடுங்கள்' என்று கூறினார்.
உடனே நான், "என் கணவருக்கு மாசம் 750 ரூபாய்தான் சம்பளம். நான் என்ன செய்யவேண்டும்?' என்று கேட்டேன். அவர், "நீ உன் கணவரின் ஒரு மாச சம்பளத்தைக் கொடுக்காதே. உனக்குத் தெரிதவர்களிடமெல்லாம் என் ஒரு மாத சம்பள கோரிக்கையைப் பற்றி சொல்லி, ஆயிரம் ரூபாய் மாச சம்பளம் வாங்குகிறவர்களை ஒரு மாச சம்பளம் கொடுக்கும்படி செய்' என்று சொன்னார்.
அதன் படி நான் நிறையபேர்களை சந்தித்து, மகாபெரியவரின் ஒரு மாச சம்பள கோரிக்கை பற்றி சொன்னேன். அவர்கள் உடனே, நன்கொடை கொடுத்தார்கள். அது பற்றி, எப்போது இதை நினைத்தாலும், என் நெஞ்சம் நெகிழ்ந்து போகும்.
கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்து வைக்கும் பணியில் ஈடுபட உங்களைத் தூண்டியது எது?
2004-ஆம் ஆண்டு நான் கைலாஷ், மானரோவர் புனிதப் பயணம் முடித்துவிட்டுத் திரும்பினேன். என் அம்மாவை சந்தித்து, அவருக்கு பிரசாதங்கள் கொடுத்தேன். அப்போது, அவர், கைலாஷ், மானசரோவர் சென்று கடவுளை தரிசிப்பது எல்லாம் சரிதான். ஆனால், நம் சொந்த கிராமத்தில், இருக்கும் புகழ்பெற்ற வானமுட்டி பெருமாள் கோயில் எவ்வளவு சிதிலமடைந்து இருக்கிறது தெரியுமா? அங்கே ஒரு நடை போய், பெருமாளை தரிசனம் செய்துவிட்டு, உன்னாலான உதவியை செய்துவிட்டு வா!' என்று சொன்னார்.
உடனே, நான் கும்பகோணம் சென்றேன். அங்கிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் காவிரிக்கரையில் உள்ளது கோழிக்குத்தி கிராமம். அங்கேதான் இருக்கிறது வானமுட்டிப் பெருமாள் கோயில். கி.பி.ஏழாம் நூற்றாண்டு கல்வெட்டு இங்கே இருக்கிறது. அந்த அளவுக்குப்பழைமையான கோவில். ஆனால், கோயில் முற்றிலுமாக சிதிலமடைந்து இருந்ததைப் பார்த்து கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. நம்மை செளகரியமான வீடு, இதர வசதிகளோடு வாழ வழி செய்திருக்கும், பெருமாளின் கோயில் இப்படி இருகிறதே என்று மனம் வருந்தினேன். அந்தக் கோயிலை சிறப்பாக திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் செய்து வைக்கவேண்டும் எனத் தீர்மானம் செய்து
கொண்டேன்.
அந்தக் கோயிலை சீர்செய்து, கும்பாபிஷேகம் நடத்தி முடிக்க நான்கு வருடம் ஆனது. இடிபாடுகளுக்கு மத்தியில் இருந்த அத்தி மரத்தால் ஆன பிரம்மாண்டமான பெருமாள், இப்போது கம்பீரமாக பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார். பார்க்கவே மனசுக்கு நிறைவாக உள்ளது.
அடுத்தடுத்து கோயில் கும்பாபிஷேகங்களை எடுத்து நடத்தி வைக்தது எப்படி?
கோழிக்குத்தில் கும்பாபிஷேகம் முடிந்த கையோடு, பக்கத்தில் குத்தாலத்திலிருந்து நான்குபேர்கள் என்னை வந்து சந்தித்து, தங்கள் ஊரிலும் கோயிலை சீரமைத்து, கும்பாபிஷேகம் செய்ய உதவ வேண்டும் என்று கோரினார்கள். இப்படியே அடுத்தடுத்து ஒவ்வொரு ஊர்க்காரர்களாக அணுக, ஆண்டவன் சித்தப்படி அனைத்தும் நடந்து வருகின்றன. இதுவரை சுமார் 180 கோயில்கள் சீர் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
கோயில் திருப்பணி, கும்பாபிஷேகம் எல்லாம் பெரும் செலவு பிடிக்கும் விஷயங்களாயிற்றே? நிதி ஆதாரங்களைத் திரட்ட என்ன செய்கிறீர்கள்?
முதலில். அந்தந்த ஊர்க்காரர்கள் தங்கள் ஊரில் உள்ள சிதிலமடைந்த கோயிலை, சரி செய்து, கட்டி முடித்து, கும்பாபிஷேகம் செய்வதில் ஆர்வக் கொண்டிருக்க வேண்டும். அந்தந்த ஊரில் உள்ள அனைத்து பிரிவினரும் ஒன்றிணைந்து, முழுமூச்சாய் இந்தப் புனிதப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முன்வரவேண்டும்.
அடுத்து, ஓர் எஞ்சினீயரைக் கொண்டு, மொத்த செலவு எவ்வலவு ஆகும் என ஒரு மதிப்பீடு பெறப்படும், பணிகளை மேற்கொள்ள, உள்ளூர் பிரமுகர்கள்கொண்ட கமிட்டி அமைக்கப்படும், மேலும், அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இப்போது எந்தெந்த ஊர்களில் எல்லாம், நாடுகளில் எல்லாம் இருக்கிறார்கள் என விவரங்களை சேகரித்து, உள்ளூர் கோயில் திருப்பணி, கும்பாபிஷேகம் குறித்த தகவல்களை அவர்களுக்கெல்லாம் அனுப்பிவைத்து, அவர்களிடம் உதவி கோருவோம்.
பல்வேறு நிறுவனங்கள், இது போன்ற பணிகளுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் மூலமாகவும் நிதி கிடைக்க வழி செய்யப்படும். என் அனுபவத்தில் சொல்கிறேன். கோயில் நற்பணிகளுக்காக உதவி செய்ய நிறையபேர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் அவர்களைப் போன்றவர்களின் ஒத்துழைப்பில்தான் என்னால் இந்தப் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடிகிறது என்கிறார் மகாலட்சுமி.
திருமதி. மகாலட்சுமி சுப்ரமணியம், கோயில் கும்பாபிஷேகங்கள் தவிர, காவிரி புஷ்கரம், தமிரபரணி புஷ்கரம், பிரம்மபுத்ரா புஷ்கரம், துங்கபத்ரா புஷ்கரம் போன்ற புனித நிகழ்வுகளை, காஞ்சி மடத்தின் ஸ்ரீ ஜயேந்திரர் மற்றும் விஜயேந்திரரின் வழிகாட்டுதல் படி சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினார்
என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...