விடுதி வாழ்க்கை நரகம்தான்!

கல்லூரிகளில் புது மாணவர்களை சீனியர் மாணவர்கள் "ராகிங்'  செய்வதைக் கேள்விப்பட்டிருப்போம்.
விடுதி வாழ்க்கை நரகம்தான்!

கல்லூரிகளில் புது மாணவர்களை சீனியர் மாணவர்கள் "ராகிங்' செய்வதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், விளையாட்டிலும் இருக்கிறது என்று தடகள வீராங்கனையான துத்தி சந்த் (26) தெரிவித்திருப்பது, "விடுதி வாழ்க்கை நரகம்' என்று அதிர்ச்சியான தகவலை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஒடிஸ்ஸாவைச் சேர்ந்த இவர், சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். வீட்டுக்கு அருகே இருந்த ஏரி பகுதிகளில் வெறும் கால்களில் ஓடி பயிற்சி செய்து வந்தார். சர்வதேச விளையாட்டு வீராங்கனையாக உயர்ந்திருக்கும் துத்தி சந்த், பல தடைகளைக் கடந்து வந்தவர். தடகளத்தில் பி.டி.உஷா, அஞ்சு பாபி ஜார்ஜ் போன்ற வீராங்கனைகளுக்குப் பின்னர், துத்தியும் பேசப்படுவர்.
துத்திக்கு உடலில் அளவுக்கு அதிகமாக ஆண்டிரோஜன் ஹார்மோன் சுரக்கும். அதனால் ஆண்மைத்தனம் இருப்பதால், "என்னடா பையா..' என்று பலரும் கேலி செய்வார்கள். இதைப் பொருள்படுத்தாமல், சாதித்தவர்.
2014-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இவர் விளையாடவும் தடை விதிக்கப்பட்டது. சட்டப் போராட்டம் நடத்தி, தடையை விலக்கினார்.
கடுமையான பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, தைவான் தடகளப் போட்டியில் 100 மீ., 200 மீ. ஓட்டத்தில் தங்கப் பதக்கம், 2018-ஆம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம், ஓலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பு என சாதனைகளைத் தொடங்கினார். இவருக்கு ஒடிஸ்ஸா அரசு ரூ.3 கோடியை அன்பளிப்பு செய்தது.
இந்த நிலையில், புவனேசுவரம் கல்லூரியில் "ராகிங்' காரணமாக 19 வயது மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர், தனக்குத் தொல்லை கொடுத்த மாணவிகளின் பெயரை எழுதி வைத்திருந்த நிகழ்வு துத்தியை வெகுவாகப் பாதித்துவிட்டது.
2022-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக தயாராகிக் கொண்டிருக்கும் துத்தி, தனக்கு நேர்ந்த நிலை கூறியதாவது:
""விளையாட்டு விடுதியில் நான் தங்கியிருந்தபோது, சீனியர்கள் உடம்புகளை அமுக்கிவிடச் சொல்வார்கள்; பிடித்துவிட சொல்வார்கள். அது போதாது என்று அவர்கள் அணிந்த உடைகளைத் துவைக்கச் சொல்வார்கள். மூன்று ஆண்டுகள் இந்தச் சித்திரவதை தொடர்ந்தது. அதை பொறுத்துக் கொண்டேன்.
நான் ஜூனியர் என்பதால் எங்களை சித்திரவதை செய்வதையே சீனியர்கள் லட்சியமாகக் கொண்டிருந்தனர். நான் மன உளைச்சலிலேயே இருந்தேன்.
தொடர்புடைய அதிகாரிகளிடம் புகார் செய்தாலும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனக்குதான் திட்டுகள் விழுந்தன. அடிமை மாதிரி அடங்கிப் போனேன். இப்போது நினைத்தாலும் விடுதி வாழ்க்கை நரகமாகத் தோன்றும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com