"பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் தீபிகா. அவர் தனது திரைப்பயணம் குறித்து பகிர்ந்து கொண்டவை:
""எத்தனையோ போராட்டங்களுக்குப் பிறகுதான், விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரின் மூலம் நல்லதொரு வாய்ப்பு கிட்டியது. ஆனால், அதுவும் எனக்கு நிரந்தரமாக இருக்கவில்லை. சில காரணங்களால் தொடரை விட்டு வெளியே வர வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.
அப்பா, அம்மாவை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு இருப்பதால, வேலை எனக்கு ரொம்ப முக்கியம். இந்தச் சூழலில் வேலை போனதும் ரொம்பவே கஷ்டப்பட்டேன். அடுத்து என்ன செய்யப்போறோம்னு தெரியாம விழிபிதுங்கி நின்றேன். அதே சமயம், என் பெற்றோர் எனக்கு பலமாக இருந்தார்கள். அவர்களது எந்த கஷ்டத்தையும் என்னிடம் காட்டியதில்லை. நானும் என் கஷ்டத்தை அவர்களிடம் சொன்னதில்லை. பரஸ்பரம் சோகத்தை வெளிக்காட்டாமல் சந்தோஷத்தை மட்டுமே பகிர்ந்து கொள்வோம்.
இந்நிலையில், எனக்கு வேலைப் போனதும், "பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் என் கூட இருந்து இன்ஸ்டாகிராம், யூடியூப்னு எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணார். அவரை மாதிரி ஒரு நண்பன் கிடைச்சது என்னுடைய அதிர்ஷ்டம்.
இப்போ யூடியூப் சேனல், இன்ஸ்டாகிராம் என முழுக்க முழுக்க சோசியல் மீடியாவில்தான் கவனம் செலுத்தி வருகிறேன். அதிலிருந்து இருந்து வரும் வருமானத்தை வச்சு தான் சமாளிச்சிட்டு இருக்கேன்.
சமீபத்தில், இரண்டு சேனல்களில் இருந்து நெகட்டிவ் கேரக்டர்களுக்கான வாய்ப்பு வந்தது. நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க எனக்கும் ஓகே தான். ஆனாலும் அந்த கதைக்களம் எனக்கு பொருத்தமானதாக தோணல அதனால் வேண்டாம் என்று சொல்லிட்டேன்.
தொடரில் இருந்து வெளியே வந்த பிறகும், ரசிகர்கள் எனக்கு அதே அளவுக்கு அன்பையும், ஆதரவையும் இன்னமும் கொடுத்து வருகிறார்கள். அந்த அன்புக்காகவும், ஆதரவுக்காகவுமே விரைவில் நல்லதொரு புராஜக்ட்டில் நிச்சயம் எல்லாரையும் மீண்டும் சந்திப்பேன்'' என்றார்.