எந்த வயதிலும் சாதிக்கலாம்!

ஆர்வமும், விடாமுயற்சியும் இருந்தால் எந்தத் துறையாக இருந்தாலும் சாதித்துக் காட்ட முடியும் என நிரூபித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பூங்கொடி. 
எந்த வயதிலும் சாதிக்கலாம்!


ஆர்வமும், விடாமுயற்சியும் இருந்தால் எந்தத் துறையாக இருந்தாலும் சாதித்துக் காட்ட முடியும் என நிரூபித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பூங்கொடி.  ஆம், ஆண்களுக்கு மட்டுமே கைவரபெற்ற துறையாக கருதப்படும் வாகனத்துறையில்,  பழைய கார்களை வாங்கி புதுப்பித்து விற்பனை செய்யும் தொழிலில், தனியொருவராக நின்று சாதித்து வருகிறார் பூங்கொடி.  அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:


""எனது தந்தை  தலைமையாசிரியராக இருந்தவர்.  உடன் பிறந்தவர்கள்  5 பேர் எல்லோரும் நன்கு படித்துவிட்டு நல்ல வேலைகளில் இருக்கின்றனர்.  ஆனால்,  யாரும் ஆசிரியர் பணியில் இல்லை இதனால், அப்பாவுக்கு என்னை ஆசிரியராக்க வேண்டும் என்று ஆசை.  பி.ஏ.பிஎட் முடித்துவிட்டு ஆசிரியையாக தனியார் பள்ளி ஒன்றில் வேலை பார்த்து வந்தேன்.  2014-ஆம் ஆண்டு  என் கணவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அவரால் தொழிலைத் தொடர முடிய வில்லை.  இந்நிலையில்தான்,  அவர் செய்து வந்த, பழைய கார்களை வாங்கி புதுபித்து விற்கும் பணியை நான் எடுத்து நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.  ஆனால், எனக்கு இந்தத் தொழிலில் முன் அனுபவம் எதுவும் கிடையாது.

எனவே முறைப்படி ஓர் அலுவலகத்தில் சேர்ந்து வேலை கற்றுக் கொண்டு இந்தத் தொழிலில் இறங்க வேண்டும் என முடிவு செய்தேன்.

அதன்படி கார் விற்பனை செய்யும்  நிறுவனம்  ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். ஆரம்பத்தில் நான் ஆசிரியையாக வேலை பார்த்தவர் என்பதால் அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்யும் பணியை மட்டுமே எனக்கு அளித்தார்கள்.  ஆனால், தொழில் நுணுக்கங்களைக் கற்க வேண்டும் என நினைத்த எனக்கு இது ஏமாற்றமாக இருந்தது. பின்னர், எனது விடாமுயற்சியால் பல விஷயங்களை அங்கு கற்றுக் கொண்டேன்.  அதையடுத்து, களத்தில் இறங்கி வாடிக்கையாளர்களுக்கு கார்களைப் பற்றி எடுத்துக் கூறி, அதனை விற்பனை செய்யும் விற்பனையாளராக செயல்படத் தொடங்கினேன்.

பலரும்  மதிக்கும்படியான ஆசிரியையாக வேலை பார்த்த எனக்கு, ஆரம்பத்தில் இந்த வேலையைச் செய்வது கொஞ்சம் மனதிற்கு கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் தொழில் தொடங்கி, குறைந்தது பத்து பேருக்காவது வேலை தர வேண்டும் என்ற எனது லட்சியம் என்னை விரட்டிக் கொண்டே இருந்தது.

எனவே, தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். மாதம் ரூ.15 ஆயிரத்திற்கு பணியில் சேர்ந்த நான், பத்து மாதங்கள் அங்கு பணி புரிந்தேன். எனக்குத் தேவையான தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்ட பிறகு, தனியே தொழில் தொடங்க முடிவு செய்தேன். அப்போது எனது திறமையால் எனது சம்பளம் ரூ.25 ஆயிரமாக உயர்ந்திருந்தது.

நான் வேலையில் இருந்து நிற்கப் போவதாகக் கூறிய போது, என் முதலாளி எனக்கு சம்பளத்தை ரூ.75 ஆயிரமாக உயர்த்தித் தருவதாகக் கூறினார். ஆனால், ஒரு முதலாளியாக மாற வேண்டும் எனக் கனவு கண்டுக் கொண்டிருந்த எனக்கு அந்த சம்பளத்தைவிட அதிகமாகச் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. வேலையைவிட்டுவிட்டு வெளியே வந்தேன்.

அப்போது  என்  கணவரிடம் 2 லட்சம் மதிப்பில் நான்கு கார்கள் மட்டுமே இருந்தன.

அந்த கார்களை நல்ல முறையில் விற்றேன். அதில் கிடைத்த  வருமானத்தில் அந்த ஆண்டே அலுவலகம் ஆரம்பிக்கும் அளவிற்கு வளர்ந்தேன்.  அதைத்தொடர்ந்து, 2016-ஆம் ஆண்டு ஒரு யார்ட் வாங்கி தொழிலை விரிவு படுத்தினேன்.

இந்த சமயத்தில்தான் ஓன்ஜ்ஹ் பைனாஸ்சுடன் கைகோர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது மாதம் சுமார் 20 முதல் 25 கார்கள் வரை விற்பனை செய்து வருகிறேன்.

கார் என்பது ஒவ்வொருவரின் கனவு. அதை நினைத்த நேரத்தில் வாங்க வேண்டும் என நினைப்பார்கள். ஒரு காரைப் பார்த்துவிட்டு, லோனுக்காக பத்து, பதினைந்து நாட்கள் காத்திருக்க வைத்தால், அவர்களது கார் கனவே வெறுத்துவிடும். இந்த இடத்தில்தான் குவே எனக்கு பெரிதும் உதவியது.

உடனடியாக வாடிக்கையாளர்களின் லோன் தகுதியைச் சரிபார்த்துச் சொல்லி, இரண்டே நாட்களில் அனைத்து வேலைகளையும் முடித்து காரை கையில் ஒப்படைத்து விடுவேன்.

காரை விற்று விட்டதோடு என் வேலை முடிந்து விடாது. செகண்ட் ஹேண்ட் கார் என்பதாலும், வாங்கியவர்கள் அதனை முறையாகப் பராமரிக்காமல் விட்டாலும் அதில் பிரச்னைகள் வருவது இயல்புதான். அப்போது வாடிக்கையாளர்களிடம் அது பற்றி பேசும் அளவிற்கு காரைப் பற்றிய தெளிவு நமக்கு இருக்க வேண்டும்.

பழைய கார்களை வாங்கி நாங்களே சரி செய்து மீண்டும் விற்பதால் ஒவ்வொரு காரைப் பற்றியும் அனைத்து விவரங்களையும் நான் விரல் நுனியில் வைத்திருப்பேன்.எனது இந்த வேகம்தான் தொழிலில் இந்த அளவு நான் வளர முக்கியக் காரணம்.

பொதுவாகவே ஆண்களைவிட பெண்களுக்கு மனபலம் அதிகம். நிர்வாகத்திறமையோடு பிடிவாத குணமும் அதிகம். தாங்கள் நினைப்பதை சாதித்துக் காட்டும் வரை ஓய மாட்டார்கள். நானும் அப்படித்தான். தற்போது, நான் பத்து பேர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளேன். ஆர்வமும், முறையான பயிற்சியும், நேர்மையும் இருந்தால் எந்தத் தொழிலிலும் எந்த வயதிலும் யாரும் சாதிக்கலாம்''  என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com