சின்னத்திரை மின்னல்கள்!: விளையாட்டும், நடிப்பும் இரண்டு கண்கள்!

சன் தொலைக்காட்சியில்  தொடர்களில் நடித்திருந்த ஐரா அகர்வால், தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஆரம்பமாகியிருக்கும் "நம்ம மதுரை சிஸ்டர்ஸ்' தொடரில் நடித்து வருகிறார்.
சின்னத்திரை மின்னல்கள்!: விளையாட்டும், நடிப்பும் இரண்டு கண்கள்!
Published on
Updated on
2 min read

சன் தொலைக்காட்சியில் "கண்மணி',  ஜீ தமிழில் "ராஜாமகள்' போன்ற தொடர்களில் நடித்திருந்த ஐரா அகர்வால், தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஆரம்பமாகியிருக்கும் "நம்ம மதுரை சிஸ்டர்ஸ்' தொடரில்  நடித்து வருகிறார்.  ஐராவுக்கு விளையாட்டு வீராங்கனை என்ற இன்னொரு முகமும் உண்டு.  ஆம். இவர்,  மேரிகோம் போன்று குத்துசண்டை  வீராங்கனையாவர்.  ஐரா நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""நான்  பள்ளிபருவத்திலேயே விளையாட்டுகள், பேச்சு போட்டி,  டிராமா என்று அனைத்து போட்டிகளிலும் கலந்து கொள்வேன். என் தோழிகள் எல்லாம், நீ ஏன்  மாடலிங் துறைக்கு போகக்கூடாது என்று கேட்பார்கள்.  மேலும், மால் போன்ற வெளியிடங்களுக்கு செல்லும்போது,  சிலர்  அந்த  விளம்பரத்தில்  வருவது நீங்களான்னு கேட்பார்கள். அப்போ  சினிமா பற்றியெல்லாம்  எனக்கு எதுவும் தெரியாது.  பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன்.

இப்படி அடிக்கடி  பலர் சொல்லுவதைக்  கேட்டு கேட்டு, மாடலிங் முயற்சி செய்து பார்க்கலாமே என்ற எண்ணம் வந்தது.  

அந்த சமயத்தில்,  மிஸ் சவுத் இந்தியா போட்டி நடைபெறவுள்ளதாக பத்திரிகை  ஒன்றில்  விளம்பரம் பார்த்தேன். அதில் கலந்து கொள்ள விண்ணப்பித்திருந்தேன். தேர்வு நடைபெறும் இடத்திற்கு சென்றபோது, முதல் சுற்றிலேயே என்னை ரிஜெக்ட் செய்தார்கள்.  காரணம்  அழகுப்போட்டியில் கலந்து கொள்பவர்கள் குறைந்தபட்சம்  5.6 அடி உயரம்  இருக்க வேண்டுமாம்.  நான் 5.3 தான்  அதனால் என்னை ரிஜெக்ட் செய்தார்கள்.

நானும்  அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.   இருந்தாலும்,  வந்ததுதான் வந்துவிட்டேன்.  ஆடிஷனில் மட்டும் கலந்து கொள்ளட்டுமா என்று கேட்டேன்.  சரி என்று அனுமதித்தார்கள். ஆடிஷன் மட்டும் கொடுத்து விட்டு  கிளம்பிவிட்டேன்.

அதன்பிறகு  ஆறு மாதம் கழித்து  அழகுப் போட்டி நடத்தும் குழுவிடம் இருந்து போன் வந்தது.  என்னை மீண்டும் போட்டியில்  வந்து கலந்து கொள்ள சொன்னார்கள்.  காரணம், ஆடிஷனில் கலந்து கொண்டவர்களில்,  தமிழ்நாட்டில்  இருந்து  சென்றிருந்ததில் நான்தான் எல்லாரையும் விட  அதிக மதிப்பெண் பெற்றிருந்தேன் என்று சொன்னார்கள்.  அதனால் எனக்கு மீண்டும் வாய்ப்பு தருவதாக சொன்னார்கள்.

பிறகு, ஒவ்வொரு கட்டமாக கடந்து பைனலுக்கு வந்தேன். முதல் சுற்றில், எனக்கு,  "அழகான  கண்கள்' என்ற பட்டம் கிடைத்தது.  அதன் பிறகு, மெயின் டைட்டில்  வரும்போது,  மிஸ் தமிழ்நாடாக என்னை அறிவித்தார்கள். அதுதான்  என் வாழ்க்கையில் கோல்டன் டைம்.

அதன்பிறகு,  அங்கேயே விளம்பர படங்களில் நடிக்கவும்,  மாடலிங்கிற்கும் நிறைய வாய்ப்பு வந்தது. அதைத்தொடர்ந்து ரொம்ப பிஸியாக  இருந்தேன்.  

அந்த சமயத்தில் மலையாள படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு  கிடைத்து நடித்தேன்.  ஆனால்,  அந்தப் படம் அவ்வளவாக  ஹிட்டாகவில்லை. அதன்பிறகு,  தொடர்ந்து  பெரியதிரையில்  நடிக்க என் பெற்றோர் விருப்பப்படவில்லை. ஏனென்றால்,  அப்போது நான் 11-ஆம்  வகுப்புதான்  படித்துக் கொண்டிருந்தேன்.

அந்த சமயத்தில், ஒரு சின்னத்திரை ஆடிஷனுக்காக  என் தோழியுடன் துணைக்கு சென்றிருந்தேன். ஆனால், இயக்குநர் என்னைப் பார்த்துவிட்டு நீங்கள் நடிக்கிறீங்களா என்று கேட்டார்.  அப்படித்தான் சின்னத்திரைக்குள்  வந்தேன்.

அதுதான் எனது முதல் தொடரான சன் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பான "கண்மணி' தொடர்.  அதைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான "கடைக்குட்டி சிங்கம்' தொடரில் நாயகியாக நடித்தேன். அடுத்து ஜீ தமிழில் "ராஜாமகள்' தொடர். அது முடித்து தற்போது,  கலர்ஸ் தமிழில் "நம்ம மதுரை சிஸ்டர்ஸ்'  தொடரில் நடிக்க தொடங்கியுள்ளேன்.  

இது நான்கு அக்கா தங்கைகளை மையமாக கொண்ட கதை.  சாயா சிங் லீட் ரோல் செய்றாங்க. தொடர்  இப்போது தான்  தொடங்கியிருக்கிறது  இருந்தாலும் அதற்குள்ளாக  நல்ல வரவேற்பு   கிடைக்கத் தொடங்கியுள்ளது. நிறைய செலவு செய்து சென்னையிலேயே மதுரை மாதிரி  செட்  போட்டிருக்கிறார்கள். பெரியதிரையைப் பொருத்தவரை, பெண்களுக்கான கதையம்சம் கொண்ட கதையில் நடிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது.  விரைவில் பெரியத்திரையில், ஒரு படத்தில் நடிக்கவுள்ளேன்.

பாக்ஸிங் பற்றி சொல்ல வேண்டும் என்றால்,  பாக்ஸிங்  எனது வாழ்க்கை. நடிப்பு எனது காதல் என்று தான் சொல்லுவேன்.  ரெண்டும் என் ரெண்டு கண்கள் மாதிரி.  தினமும் காலை 4  மணிக்கு எழுந்து 7 மணி வரை பாக்ஸிங் பயிற்சி  செய்வேன்.  பிறகு  ஷூட்டிங்கிறகு கிளம்பிச் செல்வேன்.

2019 - இல்  இந்தியா சார்பில் விளையாடி  தங்கப்பதக்கம் வென்றுள்ளேன். கடந்த  எட்டு ஆண்டுகளாக  குத்துசண்டை வீராங்கனையாக இருக்கிறேன்.  உலக அளவிலான  பாக்ஸிங்கில் சாம்பியன்ஷிப்  வெல்ல வேண்டும் என்பதே எனது லட்சியம்'' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.