எட்டிய கனவு!

சாதாரண ஏழ்மை நிலையில் இருப்பவர்களின் எட்டாத கனவான விமானப் பயணத்தைச் சாத்தியமாக்கியிருக்கிறார்கள் தென்காசி அருகேயுள்ள கல்லூத்துக் கிராமம் கழுநீர்குளத்தை சேர்ந்த சுயஉதவிக்குழு பெண்கள்.
எட்டிய கனவு!

சாதாரண ஏழ்மை நிலையில் இருப்பவர்களின் எட்டாத கனவான விமானப் பயணத்தைச் சாத்தியமாக்கியிருக்கிறார்கள் தென்காசி அருகேயுள்ள கல்லூத்துக் கிராமம் கழுநீர்குளத்தை சேர்ந்த சுயஉதவிக்குழு பெண்கள். ஏழை பீடித்தொழிலாளர்களான இவர்களின் விமானப் பயணம் எப்படி சாத்தியமானது? இந்தக் குழுக்களைத் தலைமையேற்று நடத்தி வரும் மெர்சியிடம் பேசினோம்:

""தன்னம்பிக்கையுடன் உழைப்பும், நேர்மையும் இருந்தால் எதுவுமே சாத்தியம் என்பதற்கு உதாரணம் தான் எங்கள் குழுவைச் சேர்ந்த பெண்கள்.   அன்னை தெரசா, அன்னை இந்திரா, சிவகாமி என்ற பெயரில் மூன்று சுயஉதவிக்குழுக்களை நடத்தி வருகிறேன். குழுவில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் பீடி சுற்றுதல் மற்றும் விவசாய வேலை செய்யும் கூலித்தொழிலாளர்கள்.

பொதுவாக சுயஉதவிக்குழுக்கள் என்பதே கிராமத்துப் பெண்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக அரசால் ஏற்படுத்தபட்டது தான். ஆனால் அவை முறையாகச் செயல்படுவது மிகவும் குறைவு. வங்கிகளில் வாங்கும் கடன்களை யாரும் திரும்பச் செலுத்துவதில்லை. குழு சார்பில் வழங்கப்படும் கடனை, உறுப்பினர்கள் முறையாகக் கட்டாததால் பல குழுக்கள் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

ஆனால் எங்கள் குழுவை பொருத்தவரை வாங்கிக் கடனை சரியான முறையில் திருப்பி செலுத்திவிடுவோம். காரணம் உறுப்பினர் ஒருவர் கடனை வாங்கித் திருப்பிச் செலுத்த முடியவில்லையென்றால் அதற்கான காரணத்தை ஆராய்ந்து அதனை நிவர்த்திச் செய்வதற்கு வழிமுறைகளைச் சொல்லி கொடுத்துத் துணையாக இருந்து அவர்களின் பிரச்னை நிவர்த்திச் செய்து கொடுப்போம். இது போன்ற சிறு விஷயங்களை நாங்கள் 20 ஆண்டுகளாகக் குழுவை வெற்றிகரமாக நடத்த காரணம். குழுவில் வரவு செலவு கணக்குகளை முறையாகப் பராமரிக்கிறோம் எங்கள் குழுவை சேர்ந்த 32 பெண்கள் 50 மற்றும் 60 வயதை கடந்தவர்கள் தான் அதிகம். மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 20 ஆண்டுகளில் இவர்களின் வாழ்க்கை தரம் ஓரளவு உயர்ந்துள்ளது. அதற்குக் காரணம் உழைப்பு தான். கடனை முறையாக செலுத்தி வருவதால் எங்களுக்குக் கிடைக்கும் லாப பணத்தில் சேர்த்து வைத்து இவர்களை டூர் கூட்டி செல்வோம். ராமேஸ்வரம், மதுரை போன்ற இடங்களுக்கு அழைத்துச்சென்றோம். 

அப்படி மதுரை சென்ற போது அங்கு விமானத்தைப் பார்த்து மிகவும் வியந்து போனார்கள். விமானத்தைப் பக்கத்தில் சென்று பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்குமா? என்று அவர்களே பேசி கொண்டார்கள்.  எப்படியாவது இவர்களின் கனவை நனவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக மதுரையிலிருந்து சென்னைக்குச் செல்லும் விமானத்தில்  32 பெண்களுக்கும் விமானத்தில் டிக்கெட் புக் செய்தோம். விமான பயணத்திற்கு ஒருவருக்கு 2984 ரூபாய் செலவானது. மேலும் சென்னையைச் சுற்றி காட்டவும் திட்டமிட்டோம். 

அதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு எங்கள் கல்லூத்து கிராமத்திலிருந்து வேன் மூலம் மதுரை வந்து அங்கிருந்த விமானத்தில் சென்னை வந்தோம். விமானத்தில் ஏறியதும் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார்கள். விமானத்தைப் பக்கத்தில் சென்று பார்ப்போமா என்று நினைத்துக்கொண்டு இருந்தோம். இப்போது விமானத்தில் பறந்துவிட்டோம் என்று மகிழ்ந்தார்கள். தொடர்ந்து சென்னையில் மெட்ரோ ரயில், அரசு அருங்காட்சியம், மெரினா கடற்கரை சுற்றி காட்டினோம். மீண்டும் பொதிகை விரைவு ரயில் மூலம்  ஊர் திரும்பினோம். ஒரு நபருக்கு 6 ஆயிரம் ரூபாய் வரை செலவானது. விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் இந்தப் பெண்களின் ஆசை நிறைவேற்றியது மனதிற்குத் திருப்தி அளிக்கிறது.   அடுத்த ஆண்டு விமானத்தில் வெளிமாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம். நாங்கள் டூர் செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் பஞ்சாயத்துச் கூட்டமைப்பின் அமைப்பாளர் மல்லிகா தான்'' என்றார் மெர்சி.

தொடர்ந்து மல்லிகாவிடம் பேசினோம்.

""எனக்கு 62 வயதாகிறது. சரியாக நடக்க முடியாது.  ஆனால் இந்தப் பஞ்சாயத்துக் கூட்டமைப்பில் பணியாற்றி வருகிறேன். என்னுடைய தலைமையின் கீழ் 43 குழுக்கள் இயங்குகின்றன. இந்த குழுக்களில் உள்ள பெண்களுக்குச் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், கந்து வட்டியிலிருந்து விடுபடவும், நாட்டின் நலத்திட்டங்கள் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், அரசாங்கம் தரும் சலுகைகளைப் பயன்படுத்தி அவர்களின் குழந்தைகளுக்கு வேலை வாய்ப்பு பெறவும் தமிழக அரசின் ஊரக வாழ்வதார இயக்கத்தின் கீழ் இயங்குகிறோம்.

அரசிடம் இருந்து பெற்ற கடனை திருப்பிச் செலுத்தும் குழுக்களை ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் டூர் அழைத்துச் செல்வது வழக்கம். அதன்படி சிறப்பாகச் செயல்பட்ட 3 குழுக்களைச் சேர்ந்த 47 பெண்களை விமானத்தில் பயணம் செய்ய வைக்கத் திட்டமிட்டோம். எங்கள் குழந்தைகளுக்கு விமானத்தில் டிக்கெட் கேட்பார்கள், வயதாகி விட்டதால் நடக்க முடியவில்லை என்று 15 பேர் பயணத்திலிருந்து விலகிவிட்டார்கள். ரயில், பஸ் போன்று விமானத்தில் டிக்கெட் விலை இல்லை. ஒவ்வொரு நாளும் ஏற்றம் இறக்கமாக இருந்தது. இதனைத் தெரிந்து கொண்டு டிக்கெட் போடுவதற்கு 15 நாள்கள் ஆனது'' என்றார் மல்லிகா.

""பீடித் தொழிலாளர்களான எங்களின் ஒரு நாள் ஊதியமே 220 ரூபாய் தான். விமானம் என்பதே எங்களுக்குக் கனவு தான். இதில் எப்படி விமானத்தில் செல்ல முடியும். நாங்கள் சிறுவயதிலிருந்தே விமானத்தை வானில் மட்டும்தான் பார்த்துள்ளோம். எப்படியாவது விமானத்தில் செல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டோம். ஆனால் வாங்கிய கடனை முறையாகத் திரும்ப செலுத்தியதன் காரணமாக எங்களின் இந்தக் கனவு நனவாகி உள்ளது'' என்கிறார் பீடித்தொழிலாளியான செல்வசரோஜா.

""குளத்து வேலை (100 நாள் வேலை) பார்த்துட்டு இருக்குற அப்போ பிளைட் பறக்கும். அண்ணாந்து பார்க்கும் போது, சாகுறதுகுள்ள இதுல ஒரு தடவையாச்சும் போகணும்னு எங்களுக்குள்ள பேசுவோம். இப்போ குழுவுல  கூட்டிட்டுப் போனது சந்தோஷமா இருக்கு'' என்கிறார்கள் டூர் சென்று வந்த பெண்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com