தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை ஜெல்லி மீன் தாக்கியது!

தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கும், பிறகு தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி நோக்கியும் தொடர்ந்து 17 மணி நேரம் 34 நிமிடங்கள் நீந்தி சாதனை படைத்திருக்கிறார் சுச்சேத்தா தேப் பர்மன்.
தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை ஜெல்லி மீன் தாக்கியது!


தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கும், பிறகு தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி நோக்கியும் தொடர்ந்து 17 மணி நேரம் 34 நிமிடங்கள் நீந்தி சாதனை படைத்திருக்கிறார் சுச்சேத்தா தேப் பர்மன். 38 வயதான சுச்சேத்தா, 42 கிலோ மீட்டர் தூரம் வரை தொடர்ந்து நீந்தி உள்ளார். இதன் மூலம் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு நீந்திச் சென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். பாக் நீர் சந்திப்பை நீந்திக் கடந்த நான்காவது பெண் என்ற சாதனையும் சுச்சேத்தாவுக்கு சொந்தமாகிறது.

தனுஷ்கோடி - தலைமன்னாருக்கும் இடையில் உள்ள கடல் தூரம் 26 கிமீ. உண்மையில் தனுஷ்கோடி - தலைமன்னார் - தனுஷ்கோடி ஆக மொத்தம் 52 கிமீ ஒரே மூச்சில் நீந்திக் கடப்பது என்ற லட்சியத்தில்தான் சுச்சேத்தா நீச்சலைத் தொடங்கினார். அதற்குக் காரணம் உண்டு.

தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் இடையே கடலில் நீந்துவது சாதனை என்று சர்வதேச நீச்சல் வீரர்கள் வீராங்கனைகள் கருதுகிறார்கள். சர்வதேச எல்லை ஒன்றைக் கடப்பது இந்தியாவில் இங்கு மட்டுமே சாத்தியம். பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையில் நட்பு சுமூகமாக இல்லாததால் உள்ள கடலில் நாட்டு எல்லையை கடக்க முடியாது. பங்களாதேஷ் பகுதியில் நில, கடல் நீர் அமைப்பால் இரண்டு நாடுகளுக்கு இடையில் நீந்துவது இல்லை. ஆக இலங்கை இந்தியாவிற்கு இடையில் பாக் நீர் சந்திப்பை கடப்பது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தது. தவிர இந்தப் பகுதியில் தொழிற்சாலைகள் ஏதும் இல்லாததால் கடலில் மாசு குறைவு என்பதால் பல நுண்ணுயிர்கள், மனிதனைத் தாக்கும் சுறா மீன்கள் , கடல் பாம்புகள்.. "சொறி' எனப்படும் "ஜெல்லி' ஜீவிகளும் உள்ளதால் ஆபத்தும் அதிகம்.

இதர கடல் பகுதிகளில் பல்வகை தொழிற்சாலை கழிவுகள் கடலில் சேர்வதால் மனிதனுக்கு அபாயமாக உள்ள கடல் உயிரினங்கள் மிகவும் குறைவு. அபாயமிக்க கடல் பகுதியில் நீந்தி சாதனை புரிவதுதானே உண்மையான சாதனை..!

சுச்சேத்தா தொடர்கிறார்:

""பொதுவாக தனுஷ்கோடியிலிருந்து படகில் தலைமன்னார் சென்று பிறகு அங்கிருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வருவார்கள். நான் மார்ச் 23 அன்று தனுஷ்கோடி அரிச்சல் முனை கடல் பகுதியில் இருந்து காலை எட்டரை மணி அளவில் நீந்தி தலைமன்னாரை அடைந்த போது மாலை ஆகிவிட்டது. உடனே தனுஷ்கோடி திரும்ப நீந்தத் தொடங்கிய சிறிது நேரத்தில் இரவு தொடங்கிவிட்டது. நீந்துபவரைத் தாக்க வரும் கடல் உயிரினங்களை பகலில் கண்டு அவற்றை விளக்கலாம். அல்லது நீந்துபவர் விலகிக் கொள்ளலாம். தலைமன்னார் போகும் போது இப்படி ஒரு நெருக்கடியை எதிர் கொண்டேன். சாமர்த்தியமாக தப்பித்தேன். இருட்டில் நீந்தும்போது கடலில் நீந்துபவரைத் தாக்க என்ன வருகிறது என்று பார்க்க முடியாது. அதனால் இலங்கை-இந்தியா கடல் எல்லையைத் தாண்டும் போது கூட்டமாக வந்த ஜெல்லி உயிரினங்கள் தாக்கியதால் உடலில் அரிப்பு ஏற்பட்டு தடிப்புகள் ஒவ்வாமை வந்துவிட்டது.

தொடர்ந்து 17 மணி நேரம் நீந்தியதால் உடல் சோர்ந்து கடல்நீரைத் துளாவும் கைகளால் தோள்பட்டையில் பிராணன் போகிற வலியும் சேர்ந்து கொண்டது. அதனால் மேற்கொண்டு நீந்த இயலாது என்று நீச்சலை நிறுத்தி படகில் ஏறி தனுஷ்கோடியை மார்ச் 24 அதிகாலையில் வந்து அடைந்தோம்.

"கடலில் நீந்தும் போது பழச்சாறு தரவும், ஆபத்து ஏதும் ஏற்பட்டால் காப்பாற்றவும் போதிய இடைவெளி விட்டு படகில் என்னைக் கண்காணித்துக் கொண்டு நான் நீந்தும் வேகத்துக்கு ஏற்றவாறு படகை வேகம் குறைத்து செலுத்துவார்கள்.

இந்தப் பயணத்திற்காக இந்தியாவின் மத்திய உள்துறை, ராணுவம், கடல் எல்லை பாதுகாப்பு படை , மாநில கடல் காவல்துறையிலிருந்து அனுமதி பெற வேண்டும். அதுபோல் இலங்கை அரசிடமிருந்து அனுமதி பெற வேண்டும். இந்திய எல்லையைக் கடந்து இலங்கை கடல் பகுதியில் நுழைந்ததும் இலங்கை கப்பல் படை எங்கள் இரண்டு படகையும் சோதனை செய்து எங்களுடன் பயணித்தார்கள். அதுபோல திரும்பி வரும் போதும் இலங்கை எல்லை வரையில் எங்களுடன் பயணித்தார்கள். நமது பாதுகாப்பு படைகள் கடலில் வேறு யாரையும் கண்டால் படகில் ஏற்றுக் கொள்ளாதீர்கள் என்று அறிவுறுத்தியிருந்தார்கள். தனுஷ்கோடியில் எங்களுக்கு எல்லா உதவிகளையும் "கடல் ஓசை' மீனவர் வானொலி செய்து கொடுத்ததுடன், எங்களுடன் கடலில் பயணிக்கவும் செய்தார்கள்.

தலைமன்னார் - தனுஷ்கோடிக்கு நீந்துவதை "கச்சான்' காற்று வீசத் தொடங்கு முன் வைத்துக் கொள்ள வேண்டும். மார்ச் மாதம் முடிந்தால் கச்சான் காற்று வீசத் தொடங்கினால் கடலில் நீந்துவதற்கு ஏற்றதாக இருக்காது'' நிச்சயமாக தனுஷ் கோடி- தலைமன்னார் - தனுஷ்கோடி நீந்தல் சாதனையை மீண்டும் நிகழ்த்துவேன் " என்கிறார் சுச்சேத்தா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com