தில்லியிலிருந்து கன்னியாகுமரி வரை

இந்திய நாட்டின் துணை ராணுவ அமைப்பான பி.எஸ். எஃப். என்கிற எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த முப்பத்து ஆறு வீராங்கனைகள் தில்லியில் துவங்கி கன்னியாகுமரி வரை புல்லட் மோட்டார் சைக்கிளில் 5400 கிலோ மீட்டர்
தில்லியிலிருந்து கன்னியாகுமரி வரை


இந்திய நாட்டின் துணை ராணுவ அமைப்பான பி.எஸ். எஃப். என்கிற எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த முப்பத்து ஆறு வீராங்கனைகள் தில்லியில் துவங்கி கன்னியாகுமரி வரை புல்லட் மோட்டார் சைக்கிளில் 5400 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து சாதனை புரிந்திருக்கிறார்கள். வெற்றிகரமாக அகில இந்திய சாலை வழிப்பயணத்தை முடித்த அந்த குழுவினர் அண்மையில் சென்னை வந்திருந்தனர். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராயல் என்ஃபீல்டு தொழிற்சாலை வளாகத்தில் அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா நடைபெற்றது. அந்த 36 பெண்கள் கொண்ட குழுவின் கேப்டன் பி.எஸ்.எஃப். இல் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றுபவர் இமான்ஷு. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான இவர் 2004-இல் எல்லைப் பாதுகாப்புப் படையில் சேர்ந்தார். இவர் தன் அகில இந்திய புல்லட் பயண அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்:

எதற்காக இப்படி ஒரு நெடும் பயணம்?

பெண்களின் சக்தியும், திறமையும் அளவிட முடியாதது. பெண்களால் சாதனைகள் புரிய முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதுதான் இந்த அகில இந்தியப் பயணத்தின் நோக்கம்.

பயணத்துக்கான எண்ணம் எப்படி வந்தது?

எல்லைப் பாதுகாப்புப் படையில் உள்ள சீமா பவானி என்ற பெயர் கொண்ட பெண்கள் யூனிட், வழக்கமாக குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்று மோட்டார் சைக்கிளில் சாகசங்கள் செய்து காட்டுவதைப் பார்த்திருப்பீர்கள். நிறைய பெண்கள் இருக்கிறார்கள். 2018-ஆம் ஆண்டில் முதல் முறையாக குடியரசு தின அணிவகுப்பில் நாங்கள் பங்கேற்றோம். அதன்பிறகு இந்த வருட குடியரசு தின அணிவகுப்பிலும் எங்கள் மோட்டார் சைக்கிள் சாகசங்கள் செய்து காட்டப்பட்டன. அது போன்ற சாகசங்களிலிருந்து வேறுபட்டு, பெண்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் ஏதாவது செய்ய விரும்பினோம். அப்போதுதான் நாங்கள் பயன்படுத்தும் புல்லட் மோட்டார் சைக்கிளிலேயே இப்படி ஓர் அகில இந்திய பயணம் மேற்கொள்ளும் எண்ணம் ஏற்பட்டது.

அது என்ன சீமா பவானி பெண்கள் யூனிட்?

பி.எஸ்.எஃப். இன் பல்வேறு படைப்பிரிவுகளிலும் பணியாற்றும் பெண்களில் இருந்து ஆர்வமும், விருப்பமும் உள்ள பெண்களைத் தேர்ந்தெடுத்து, உருவாக்கப்பட்டதுதான் சீமா பவானி பெண்கள் யூனிட்.

எங்களுக்கு, மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியர் அருகில் இருக்கும் தேகன்பூரில் இருக்கும் பி.எஸ்.எஃப். மோட்டார் வாகன மத்தியப் பயிற்சி மையத்தில் மோட்டார் சைக்கிள் சாகசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் குடியரசு தின அணிவகுப்பிலும், அவ்வப்போது இதர இடங்களிலும் எங்களுடைய சாகசப் பயிற்சிகளை செய்து காட்டிவருகிறோம்.

பயணம் எப்படி இருந்தது?

எங்களுக்கு, புல்லட் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்வதற்குத்தான் பயிற்சி தரப்பட்டிருக்கிறது என்பதால் நீண்ட தூரம் சாலைகளில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய அனுபவம் கிடையாது. ஆனாலும், துணிச்சலுடன் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு, நாங்கள் எங்களை அதற்கு தயார்ப்படுத்திக் கொண்டோம். தில்லியில் இந்தியாகேட்டில் இருந்து நாங்கள் புறப்பட்டோம்.

பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள அட்டாரி வரை சென்றோம். அதன்பிறகு ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வழியாக மொத்தம் 5400 கி.மீ. தூரம் சாலை வழியே பயணம் செய்து கன்னியாகுமரியை அடைந்தோம்.

சராசரியாக ஐம்பது, அறுபது கிலோமீட்டர் வேகத்தில் புல்லட்டை ஓட்டிச் சென்ற நாங்கள், ஒரு நாளைக்கு நானூறு, ஐநூறு கிலோ மீட்டர்கள் கூட பயணம் செய்தோம்.

மோட்டார் சைக்கிளில் சாகசங்கள் செய்யும்போது, மணிக்கு இருபது கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே சென்று பழக்கப்பட்ட எங்களுக்கு, பலவகைப்பட்ட சாலைகளில் அறுபது கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது த்ரில்லான ஓர் அனுபவம்தான்!

நீங்கள் சந்தித்த சவால்கள்?

இந்த நெடும்பயணத்தின்போது, தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், மலைப்பகுதிகளில், காட்டுப் பகுதிகளில் உள்ள சாலைகள், பள்ளத்தாக்குகள், கரடுமுரடான சாலைப் பகுதிகள், போக்குவரத்து நெரிசலான சாலைகள் என பலதரப்பட்ட இடங்களில் நாங்கள் புல்லட் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்ல வேண்டி இருந்தது.

குறிப்பாக, மலைப்பகுதிகளில் உள்ள சாலைகளில் செல்வது பெரும் சவாலாக இருந்தது. முன்னால் செல்கிற ஒருவர் ஏதாவது சிறு சிக்கல் காரணமாக தடுமாறி, திடீரென பைக்கை நிறுத்தினால் கூட, பின்னால் வருகிறவர் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும், விபத்து ஏற்பட்டு, அதன் காரணமாக அடுத்தடுத்து பின்னால் வரும் வாகனங்களும் விபத்துக்குளாகிவிடும். எனவே, மிகுந்த கவனத்துடன் புல்லட்டை ஒட்டிச் சென்றோம். வழியில், நிறைய பள்ளிகள், கல்லூரிகளுக்குச் சென்று ஏராளமான மாணவிகளை சந்தித்தோம். அவர்கள் மத்தியில் பெண்களாலும் சாதனைகள் புரிய முடியும் என்று எடுத்துச் சொல்லி, அவர்களை ஊக்குவித்தோம்.

36 புல்லட் மோட்டார் சைக்கிள்களை பெண்கள் ஓட்டிச் செல்வதைப் பார்த்த மக்களின் பார்வை எப்படி இருந்தது?

அவர்களுக்கு ஒரே ஆச்சர்யம். தெருவில் நின்று எங்களை வியப்போடு பார்த்துக் கைத்தட்டி உற்சாகப்படுத்தினார்கள். குடி தண்ணீர், டீ, பிஸ்கட், ஜூஸ், மோர், இளநீர் என்று உபசரித்து, வழி அனுப்பி வைத்தார்கள்.

அவர்கள் காட்டிய அன்பில் நாங்கள் நெகிழ்ந்து போனோம். ஆங்காங்கே, நான் பாரத் மாதா கீ! என்று உரக்க குரல் கொடுக்க, புல்லட் வீரங்கனைகள் அனைவரும் ஜெய்! என ஒருமித்த குரலில் சொன்னபோது, பொதுமக்களும் அதில் சேர்ந்துகொண்டனர்.

பயணத்தின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருந்தது?

எல்லைப்புற மாநிலங்களில், எங்களுடைய பி.எஸ்.எஃப். முகாம்களிலேயே தங்கினோம். இதர ஊர்களில் ஓட்டல்களில் தங்கினோம். எங்களுடன் கூட ஒரு ஆம்புலன்ஸூம் வந்தது. அதில் ஒரு டாக்டர் தலைமையிலான மருத்துவக் குழு இருந்தது. குஜராத்தில் வந்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட ஒரு சிறு விபத்தில் ஒரு பெண்ணுக்கு அடிபட்டதும், அவருக்கு டாக்டர் உடனடி சிகிச்சை அளித்தார். அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. நாங்கள் இன்னும் இரண்டு வீராங்கனைகளை ரிசர்வ் ஆக உடன் அழைத்து வந்தோம். அவர்களில் ஒருவர் எங்களோடு சேர்ந்துகொண்டு, பைக் பயணத்தைத் தொடர்ந்தார்.

நினைவில் நிற்கும் தருணம்?

சென்னைக்கு வந்தவுடன், ராயல் என்ஃபீல்டு தொழிற்சாலைக்குச் சென்று, அங்கே புல்லட் மோட்டார் சைக்கிள்கள் எப்படி உருவாக்கபப்டுகின்றன என்று பார்த்தோம். அங்கே எங்கள் குழுவினருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தி, நினைவுப் பரிசும் கொடுத்தார்கள். எங்களின் இந்த சாகசப் பயணம், லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெறப் போகிறது.

அடுத்த திட்டம்?

ஒரு சர்வ தேசப் பயணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com