நடாலின் ரசிகை!

டென்னிஸ் உலக ஜாம்பவான் ரபேல் நடாலின் பரம ரசிகையாக சிறுவயதில் இருந்து, தற்போது உலகின் நம்பர் ஒன் வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் 20 வயதே ஆன போலந்தின் ஐகா ஸ்வியாடெக்.
நடாலின் ரசிகை!


டென்னிஸ் உலக ஜாம்பவான் ரபேல் நடாலின் பரம ரசிகையாக சிறுவயதில் இருந்து, தற்போது உலகின் நம்பர் ஒன் வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் 20 வயதே ஆன போலந்தின் ஐகா ஸ்வியாடெக்.

உலகளவில் பணக்கார விளையாட்டுக்களில் ஒன்றாக டென்னிஸ் உள்ளது. இதில் ஆடவர், ஒற்றையர் பிரிவுகளில் ஆஸி., பிரெஞ்ச், விம்பிள்டன், யுஎஸ் ஓபன் உள்ளிட்ட கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் பட்டம் வென்று உலகின் நம்பர் ஒன் அந்தஸ்தைப் பெறுவது மிகவும் கெளரவமாகும்.

ஆடவரைப் பொருத்தவரை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ரபேல் நடால், ரோஜர் பெடரர், ஜோகோவிச் உள்ளிட்ட மூவரே உலகின் நம்பர் ஒன் வீரர்களாகத் திகழ்ந்து வருகின்றனர். எனினும் மகளிர் பிரிவில் நீண்டகாலம் நம்பர் ஒன் அந்தஸ்தை தக்க வைப்பதில்லை. ஸ்டெஃப்பி கிராஃப், மார்ட்டினா நவரத்திலோவா, செரீனா வில்லியம்ஸ், மார்ட்டினா ஹிங்கிஸ் உள்ளிட்ட சிலரே நீண்டகாலம் நம்பர் ஒன் வீராங்கனைகளாகத் திகழ்ந்தனர்.

இறுதியாக ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பர்டி உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக இருந்தார். இந்நிலையில் அண்மையில் அவர் திடீரென டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் இரண்டாம் இடத்தில் இருந்து வந்த பிரெஞ்ச் ஓபன் முன்னாள் சாம்பியன் ஐகா ஸ்வியாடெக் அந்த இடத்தைப் பெறுவார் எனக் கருதப்பட்டது.

நம்பர் ஒன் வீராங்கனை ஸ்வியாடெக்: ஏப். 4-இல் நடைபெற்ற மியாமி டபிள்யுடிஏ போட்டியில் பட்டம் வென்று உலகின் நம்பர் ஒன் வீராங்கனை அந்தஸ்தைப் பெற்றார் ஸ்வியாடெக்.

போலந்தின் தலைநகர் வார்ஸாவில் 2001-இல் பிறந்த ஸ்வியாடெக்கின் தந்தை டாமஸ் ஸ்வியாடெக் சியோல் ஒலிம்பிக் போட்டியில் படகு பந்தயத்தில் பங்கேற்றவர். ஐகா, அகதா என இரு பெண் குழந்தைகளையும் விளையாட்டு வீராங்கனைகளாக்க அவரது தந்தை தீர்மானித்த நிலையில், இருவரும் டென்னிஸில் ஈடுபாடு காண்பித்தனர்.

நடாலின் பரம ரசிகை: ஜாம்பவான் ரபேல் நடாலின் பரம ரசிகையாக திகழ்ந்தார் ஐகா. அவரைப் போல் தானும் டென்னிஸ் புகழ் பெற்ற வீராங்கனையாக மாற வேண்டும் என்ற உந்துதலுடன் செயல்பட்டார். கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் ஜூனியர் பிரிவில் ஆடத்தொடங்கிய ஐகா, விம்பிள்டன், பிரெஞ்ச் ஓபனில் பட்டம் வென்றார்.

2016-18 ஆண்டுகளில் 7 ஐடிஎஃப் இறுதி ஆட்டங்களில் ஒன்றில் கூட ஸ்வியாடெக் தோற்கவில்லை. 2019-இல் முதன்முதலாக லேடிஸ் ஓபன் லுகானா டபிள்யுடிஏ போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றார். தரவரிசையில் முதல் 50 இடங்களில் நுழந்தார்.

2020 பிரெஞ்ச் ஓபன் சாம்பியன்: 2020 ஆண்டு ஐகாவுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. 54-ஆவது வீராங்கனையாக களமிறங்கிய ஐகா, உலகின் முன்னணி வீராங்கனைகள் சிமோனா ஹலேப், சோஃபியா கெனினை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார். பிரெஞ்ச் ஓ தரவரிசையில் மிகவும் கீழ் வரிசையில் இருந்து பட்டம் வென்ற வீராங்கனை என்ற வரலாற்றைப் பதிவு செய்தார்.

2021 ஆண்டும் ஐகாவுக்கு ஏறுமுகமாகவே அமைந்தது. 2 டபிள்யுடிஏ பட்டங்கள், பிரெஞ்ச் ஓபன் இரட்டையர் இறுதிக்கு தகுதி, உலகின் நான்காம் நிலை வீராங்கனை என்ற சிறப்புகளைப் பெற்றார். களிமண், புல்தரை, கடின தரை என எந்த களத்திலும் ஆடும் திறன் பெற்றவர் ஸ்வியாடெக்.

உலகின் நம்பர் ஒன் அந்தஸ்து: நிகழாண்டு 2022 ஐகா ஸ்வியாடெக்கின் கனவை நனவாக்கியது. ஆஸி. ஓபனில் அரையிறுதி, டோஹா, இண்டியன்வெல்ஸ், மியாமி என 3 டபிள்யுடிஏ பட்டங்கள், சன்ஷைன் டபுள் என பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய ஸ்வியாடெக், உலகின் நம்பர் ஒன் வீராங்கனை அந்தஸ்தைப் பெற்றார். கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற முதல் போலந்து நாட்டவர் என்ற பெருமையும் அவர் வசம் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com