புதிய தமிழ் எழுத்துரு!

எழுத்தாளர்கள் என்பவர்கள் படைப்பாளர்கள் என்பதை விடப் புதுவிதமான விஷயங்களைக் கண்டுபிடிப்பவர்கள் என்பதைச்  சாத்தியமாக்கி இருக்கிறார் எழுத்தாளரான தேவ சீமா.
புதிய தமிழ் எழுத்துரு!

எழுத்தாளர்கள் என்பவர்கள் படைப்பாளர்கள் என்பதை விடப் புதுவிதமான விஷயங்களைக் கண்டுபிடிப்பவர்கள் என்பதைச்  சாத்தியமாக்கி இருக்கிறார் எழுத்தாளரான தேவ சீமா. தன்னுடைய புத்தகம் வெளியாவதற்குப்  புதிய தமிழ் எழுத்துருவை தன்னுடைய பெயரிலேயே உருவாக்கி,  ஓரிகேமி (ஜப்பானிய முறையப்படி) தனது புத்தகத்தை வெளியிட்டுள்ளார். எப்படி இது சாத்தியமானது அவரிடம் பேசினோம்:

""12-ஆவது வயதில் எனக்கு வாசிப்புப் பழக்கம் தொடங்கியது. காரணம் அம்மா, அப்பா இருவரும் புத்தகம் வாசிப்பவர்கள். அப்பா பாரதி, பாரதிதாசன் புத்தகங்களை விரும்பிப் படிப்பார். அம்மா, பாலகுமாரன், லட்சுமி போன்றவர்களின் புத்தகங்களை வாங்கிப் படிப்பார். இருவரும் பொதுவாகப் படிப்பது ஜெயகாந்தன் படைப்புகளைத்தான். நான் முதலில் படித்தது ஜெயகாந்தனுடைய சிறுகதை தொகுப்பு.  அடுத்தபடியாக "வால்காவிலிருந்து கங்கை வரை'  புத்தகம் எனக்குள் எழுப்பிய கேள்விகள் அதிகம். பள்ளி, கல்லூரி, வேலை எந்நிலையிலும் வாசிப்பினைக் கைவிட்டதில்லை.

தொடர்ந்து குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எழுத்து மூலமாகவும், பேச்சு மூலமாக எடுத்துரைத்தேன். குறிப்பாக அவர்களுக்குப் பிடிக்காத விஷயத்தை ஒருவர் செய்தால் "நோ' எப்படிச் சொல்ல வேண்டும் என்பது தான் நான் குழந்தைகளுக்குச் சொல்லித்தரும் பாடம். 

முன்பு ஆண் குழந்தை போதும் என கள்ளிப்பாலுக்கு இரையான பெண் குழந்தைகள் அதிகம். அதுவும் உருவாகும் தாயின் கருவறையில் அழிக்கப்பட்டன. ஆனால், அதைவிட இன்னும் கொடுமைகள் அனுபவிக்கிறார்கள் குழந்தைகள். இன்று பெரும்பாலான பெண் குழந்தைகள் பள்ளி, பக்கத்து வீடு என எங்கேயோ பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஆனால் வெளியே தெரிவது சிலரின் கதைகள் மட்டுமே. எங்கேயும் அவர்கள் சுதந்திரமாகச்  செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய குழந்தைகள் ஏதோ ஒருவகையில் பெரும்பாலும் உடல், உணர்வு, பாலியல்ரீதியான தொந்தரவுகளை அதிகம் சந்திக்கின்றனர். அவர்கள் எங்கு சென்றாலும் பெற்றோர் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.  இது மிகவும் வருத்தத்திற்குரியது.

மேலும் தனித்து இயங்கும் பெண்கள் சந்திக்கும் சவால்கள், எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றி பேசி வந்தேன். அரசுத்துறையில் பணியாற்றுவதால் கிடைக்கும் நேரத்தில் இது போன்ற விஷயங்களைச் செய்து வந்தேன். வாசிப்பும், பேச்சும் என்னை ஒரு படைப்பாளியாக மாற்றியது. 2020 ஜனவரியில் எனது முதல் படைப்பு வெளியானது. "ஒயின் என்பது குறியீடு அல்ல' என்பது தான் என்னுடைய முதல் படைப்பு. ஒரு தொகுப்பை வாசித்து முடித்து சில நாட்கள் கடந்த பின் மறதியில் எல்லாம் வடிந்துவிடாமல் தங்குபவை கணிசமாய் இருந்தால் அது நல்ல தொகுப்பின் லட்சணம்  என்று எழுத்தாளர்களிடமிருந்து பாராட்டுக் கிடைத்தது. இது சமூகச்  சிந்தனையுடன், உளவியல் ரீதியிலான பிரச்னைகளை அலசியது. 

முதல் படைப்புக்கு இதுவரை நான்கு விருதுகள் (பொதிகை தமிழ் சங்கம், ழகர வெளியீடு, திருப்பூர் இலக்கிய விருது, செளமா இலக்கிய விருதுகள் கிடைத்தன. தொடர்ந்து இரண்டாவது படைப்பும் வெளியிடும் ஆவல் உருவானது. கடந்த பிப்ரவரி மாதம் "நீயே தான் நிதானன்' என்ற பெயரில் புதிய படைப்பை உருவாக்க திட்டமிட்டேன்.  ஆண்களுடைய மூளையின் செயல்பாடு அவர்களையும் மீறி நிதானமாக இருந்தால் எப்படி இருக்கும் என்பது தான் இந்தப் படைப்பு. 

புதுமையான முறையில் என்ன செய்யலாம் என்ற யோசித்தேன். நானா என்ற கலைஞர் புது எழுத்துரு உருவாக்கி தருகிறார் என்று கேள்விபட்டு அவரைத் தொடர்பு கொண்டேன். அவர் என்னுடைய பெயரிலேயே புதிய எழுத்துரு உருவாக்கி தந்தார். என்னுடைய எழுத்துருவை பயன்படுத்தி யூனிகோடில் தமிழ் டைப் செய்யலாம். தொடர்ந்து புத்தகம் தயாரிப்பில் அதிகம் கவனம் செலுத்தினேன். இரண்டு பக்கங்களில் ஓரிகேமி முறையில்  தயாரித்தேன். ஓரிகேமி என்பது ஜப்பானிய முறையாகும். சிறுவயதில் குழந்தைகள் காகிதத்தில் கப்பல் செய்வது போன்றதாகும். இந்த முறையில் பசை, ஸ்டாப்லர் என எதையுமே பயன்படுத்தாமல் கையால் உருவாக்குவது.  எழுத்தை மட்டும் அதாவது என்னுடைய பெயரிலான புதிய தமிழ் எழுத்துருவை மட்டும் பயன்படுத்திக்  கையால் புத்தகத்தைத் தயார் செய்தேன். இது ஒரு கடிதம் போன்று தான் இருக்கும். பிரித்துப் பார்த்தால் தான் புத்தகம் என்பது தெரியும். ஓர்கேமிஸ்ட் ராஜசேகர் என்பவர் இந்தப் படைப்பு உருவாகப் பெரிதும் துணையாக இருந்தார். வாசிப்பது, பேசுவது என்று தொடர்ந்து செயல்படுவதால் புதிய எழுத்துரு, ஓரிகேமி முறையில் படைப்புகளை வெளியிடுவது சாத்தியமானது''  என்றார் தேவ சீமா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com