சேமிக்கலாம் வாங்க..!

''சிக்கனம் வீட்டைக் காக்கும்.  சேமிப்பு நாட்டைக் காக்கும்''  என்பது பழமொழி. பெண்கள்தான் வீட்டின்  நிதியமைச்சர்கள்.
சேமிக்கலாம் வாங்க..!
Published on
Updated on
1 min read


''சிக்கனம் வீட்டைக் காக்கும். சேமிப்பு நாட்டைக் காக்கும்'' என்பது பழமொழி. பெண்கள்தான் வீட்டின் நிதியமைச்சர்கள். ஆனால், இவர்களோ குடும்பத்தாரின் நலன்களில் அக்கறையைக் கொண்டு, தங்களது எதிர்கால நலன்களைக் கருத்தில் கொள்வதில்லை. இவர்களின் நலனுக்காக, பல்வேறு சேமிப்புத் திட்டங்களை மத்திய, மாநில அரசு அவ்வப்போது அறிவித்துவருகின்றன.

இப்படிப்பட்ட திட்டங்களில் மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியதுதான் 'மகளிர் சம்மான் சேமிப்புப் பத்திரம்'. தொடங்கிய சில நாள்களிலேயே பெண்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

இந்திய சுதந்திரத் தினத்தின் 75ஆவது நிறைவு விழாவையொட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டத்துக்கு 'மகளிர் மதிப்புத் திட்டம்' என தமிழில் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் குறித்து தாம்பரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மேஜர் மனோஜ் கூறியதாவது:

''அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர் இந்தக் கணக்கைத் தொடங்கலாம். இது ஒரு புதிய சிறு சேமிப்புத் திட்டமாகும். 2025ஆம் ஆண்டு மார்ச் 31 வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். இந்தத் திட்டத்தின்படி, ஒரு பெண் தனக்காகவோ அல்லது மைனர் பெண் குழந்தை சார்பாக பாதுகாவலரால் கணக்கைத் தொடங்கலாம். 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

இது காலாண்டுக்கு ஒருமுறை கூட்டப்பட்டு கணக்கில் வரவு வைக்கப்படும்.குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயில் கணக்கைத் தொடங்கலாம். நூறு ரூபாய்களின் மடங்குகளில் என அதிகபட்சம் ரூ.2 லட்சத்துக்கு உள்பட்டு எத்தனை கணக்குகளையும் திறக்கலாம்.

ஏற்கெனவே இருக்கும் கணக்குக்கும் மற்ற கணக்கைத் திறப்பதற்கும் இடையே மூன்று மாத கால இடைவெளி பராமரிக்கப்படும். கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து ஒரு ஆண்டு கழித்து, கணக்கில் இருந்து 40 சதவீதம் வரை பகுதி அளவு திரும்பப் பெறலாம். கணக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடையும்.

கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்கள் கழித்து, எந்த நேரத்திலும் கணக்கை முன் கூட்டியே முடித்து 5.5 சதவீதம் வட்டியில் பணத்தைத் திரும்பப் பெறலாம். இந்தத் திட்டம் பெண்களுக்கு அதிகாரம்அளிக்கவும், அவர்களின் நிதிச் சுதந்திரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு மேற்கொண்டுள்ள பாராட்டுக்குரிய முயற்சியாகும்.

2 ஆண்டு குறுகிய காலத்தில், அதிக முதலீட்டில் வருமானத்தை ஈட்டுவதால் , நிச்சயமாக பெண் முதலீட்டாளர்களை அதிக அளவில் ஈர்க்கும். குறிப்பாக, கிராமப்புறங்களில் அதிகரிக்கும். இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 10 நாள்களில், சென்னை மாநகரில் ரூ.11.72 கோடி முதலீட்டுத் தொகையுடன் 840 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

பெண்கள், பெண் குழந்தைகளின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் தங்கள் அருகிலுள்ள அஞ்சல் நிலையத்தை அணுகி இந்தத் திட்டத்தின் பிரத்யேகப் பலன்களைப் பெறலாம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com