தீபாவளிக்கு சேலை வாங்கப் போறீங்களா?

பண்டிகைக் காலங்கள் என்றால் புத்தாடைகள் வாங்க அனைவரும் ஆசைப்படுவர். அதிலும், தீபாவளி என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சிதானே.
தீபாவளிக்கு சேலை வாங்கப் போறீங்களா?

பண்டிகைக் காலங்கள் என்றால் புத்தாடைகள் வாங்க அனைவரும் ஆசைப்படுவர். அதிலும், தீபாவளி என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சிதானே.  இந்தப் பண்டிகை நாள்களில் சேலைகள் வாங்குவோர் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மைய அலுவலர்கள் கூறியதாவது:

''கைத்தறி முத்திரை: ஒரு சேலை கைத்தறியில் நெய்யப்பட்டிருந்தால் மட்டுமே இந்த முத்திரை அந்தச் சேலையில் இருக்கும். நுகர்வோர் கைத்தறி ரகங்களை நம்பிக்கையுடன் வாங்குவதற்கு இந்த முத்திரை உறுதி அளிக்கிறது.

புவிசார் குறியீடு பெறப்பட்டிருக்கும் சேலை,  வேட்டிகள்:

நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் தயார் செய்யப்படும் பாரம்பரிய பொருள்கள்,துணிகளுக்கு மட்டுமே ஜி.ஐ. எனப்படும் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.தமிழகத்தில் கோவை கோரா காட்டன் சேலைகள், காஞ்சிபுரம், ஆரணி பட்டுச் சேலைகள், மதுரை சுங்குடி சேலைகள்,கண்டாங்கி சேலைகள், திருபுவனம் பட்டு சேலைகள்,சேலம் வெண்பட்டு வேட்டிகள்,பவானி ஜமக்காளம் ஆகியவை குறியீடு பெற்றவையாகும்.

இந்திய கைத்தறி முத்திரை : இந்த முத்திரையானது கையால் நெய்யப் பட்டும், இயற்கை இழைகளால் ஆனதாகவும் இருக்கும். நச்சுத்தன்மை இல்லாத பாதுகாப்பான சாயங்களை பயன்படுத்தி செய்யப்பட்டிருக்கும். குறைபாடு இல்லாத தயாரிப்புகளாக இருக்கும். உயர் மதிப்பு வாய்ந்த இந்திய கைத்தறி முத்திரையுடன் கூடிய கைத்தறி தயாரிப்புகள் தரத்தின் அடிப்படையில் மற்ற தயாரிப்புகளிலிருந்து வேறுபடுவது இதன் சிறப்பம்சம்.மதிப்பு கூட்டப்பட்ட தரமான பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் நெசவாளர்கள் அதிக கூலி பெறவும் உதவியாக இருக்கிறது.

கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்யும் நேர்மையான நிறுவனங்கள், இந்திய கைத்தறி முத்திரை பெற்ற துணிகளைப் பயன்படுத்தி ஆடைகளையும் மற்றும் பல விதமான தயாரிப்புகளையும் உற்பத்தி செய்பவர்கள், தடை செய்யப்பட்ட அமிலங்கள் இல்லாத சாயங்களைக் கொண்டு சாயமிடுதல் அல்லது அச்சிட்டவர்கள் ஆகியோர் மட்டுமே இந்த முத்திரை பெற விண்ணப்பிக்கலாம்.இந்த முத்திரை இருந்தால் மட்டுமே பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். இந்த முத்திரை பெறுவதற்கான விண்ணப்பங்களை w‌w‌w.‌i‌n‌d‌i​a‌h​a‌n‌d‌l‌o‌o‌m​b‌r​a‌n‌d.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்'' என்றனர்.

 -சி.வ.சு.ஜெகஜோதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com