

மூல நோய் வந்தால் என்னென்ன உணவுகளைச் சாப்பிடலாம்.
தண்ணீர்: பொதுவாக, அனைவருமே ஒரு நாளைக்கு குறைந்தபட்சம், 1-2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். மூல நோய் உள்ளவர்கள் 2 - 3 லிட்டர் தண்ணீரைக் கட்டாயம் குடிக்க வேண்டும்.
நார்ச்சத்தும் - நீர்ச்சத்தும்...
நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த அவரைக்காய், கோவைக்காய், பாகற்காய், வெண்டைக்காய், வாழைத்தண்டு போன்ற காய்கறிகளையும், நீர்ச்சத்து நிறைந்த, சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், சௌசௌ, முள்ளங்கி, முட்டைகோஸ், பூசணிக்காய், வெண் பூசணிக்காய் போன்றவற்றையும் சாப்பிடுவது நல்லது.
கருணைக்கிழங்கு அதிகளவு சூடானது என்பதால், கருணைக்கிழங்குடன் பாசி பருப்பு சேர்த்து சமைத்து ஒருநாள்விட்டு ஒருநாள் சாப்பிடலாம். அதுபோன்று, சமையலில் வெங்காயம், இஞ்சி - பூண்டு ஆகியவற்றை அதிகமாகச் சேர்த்துகொள்ளலாம். பால் சார்ந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஆனால், மோர், தயிராக எடுத்துகொள்ளலாம்.
கீரைகள்: வாரத்துக்கு மூன்று நாள்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு கீரை எடுத்துகொள்ள வேண்டும்.
பழங்கள்: தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைப்பழத்துக்குப் பதிலாக, பப்பாளி பழம் சில துண்டுகள் தினசரி எடுத்துகொள்ளலாம். கொய்யாக் காய், கிர்ணிப்பழம், தர்பூசணி போன்றவற்றை ஜூஸாக அல்லாமல், பழங்களாகவே எடுத்துகொள்ள வேண்டும். மாதுளம் பழம், அன்னாசி, ஆப்பிள், சப்போட்டா மற்றும் உலர் பழங்களான, காய்ந்த திராட்சை, பேரீச்சம் பழம், அத்திப்பழம் போன்றவற்றை எடுத்துகொள்ளலாம்.
சீரகம் கொதிக்க வைத்த தண்ணீரில் பத்து காய்ந்த திராட்சையை இரவே ஊற வைத்துவிட்டு, காலை எழுந்ததும், பல் தேய்த்துவிட்டு தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, காய்ந்த திராட்சை ஊற வைத்த தண்ணீரை குடித்து வந்தால். விரைவில் படிப்படியாக மலச்சிக்கலின்போது ஏற்படும் எரிச்சல், வலி எல்லாம் குறைந்துவிடும்.
மூலிகைகள்: துத்தி இலையை அரைத்து சாறு எடுத்து குடிக்கலாம் அல்லது சின்ன வெங்காயம், சீரகம், இஞ்சி, பூண்டு சேர்த்து துவையலாக செய்து சாப்பிடலாம். இது சதை வளர்ந்து ரத்தம் வடியும் நிலையில் இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிரண்டை துவையல், வாரத்தில் மூன்று நாள்கள் எடுத்துகொள்வதும் பயன்தரும்.கடுக்காய்ப் பொடி அல்லது திரிபலாசூரணத்தை அரை தேக்கரண்டி வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், மலச்சிக்கல் விரைவில் குணமாகும்.
அருகம்புல் வேர்ப்பொடி: மலச் சிக்கல் உள்ளவர்களுக்கு பெரிதும் உதவக் கூடியது. இது ரத்தமாக வருபவர்களும், கொப்புளங்கள் இருப்பவர்களும் இந்தப் பொடியை கஷாயமாகவோ அல்லது அரை தேக்கரண்டியை எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டுவிட்டு வெதுவெதுப்பான தண்ணீர் ஒரு டம்ளர் குடித்து வந்தாலும் நல்ல பலன் தரும். ரோஜா இதழ்களில் தயாரிக்கப்பட்ட குல்கந்து அல்லது ரோஜா இதழ்களுடன் சிறிது பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்: பச்சரிசி சார்ந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மைதா சார்ந்த உணவுகளான பிரெட், பன், பிஸ்கட், ரஸ்க், கேக், பரோட்டா, நூடுல்ஸ், பர்கர் போன்றவற்றை தவிர்ப்பது சிறந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.