ஒலிம்பிக்ஸில் பதக்கம் பெற்றவர்களில் இருபது பேருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் மூன்று வீராங்கனைகளும் அடக்கம். கிம் நான்காவதாக நடிகையாகிறார். பேஷன் ஐகானாகவும், பிரபல மாடலாகவும் இருக்கும் கிம் யே-ஜிக்கு வயது முப்பத்து இரண்டு.
காதுகளுக்கு பாதுகாப்புத் தரும் கவசங்கள், குறி தவறாமல் இருக்க சிறப்பு மூக்கு கண்ணாடி, தலையில் ஸ்டைலாக தொப்பி ... என்று துப்பாக்கி சுடும் போட்டிகளில் வீரர்கள், வீராங்கனைகள் அணிந்திருப்பார்கள். இவைகளைத் தவிர்த்து 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் துப்பாக்கி சுடும் போட்டிகளில் எந்த மன அழுத்தமும், பதற்றமும் வெளியே காட்டாமல் தங்களது எளிமையான கேஷுவல் தோற்றத்தால் ரசிகர்களை வென்றவர்கள் இருவர்.
துருக்கியைச் சேர்ந்த வீரர் யூசுப் டிகேக். இன்னொருவர் தென் கொரியாவைச் சேர்ந்த வீராங்கனை கிம் யே-ஜி. இந்த இருவரும் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் துப்பாக்கி சுடும் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் பெற்றிருந்தனர்.
உலகப் பணக்காரரான எலான் மஸ்க் ஒலிம்பிக்ஸ் போட்டியில் கிம்மின் 'கூல் கூல்' அணுகு முறையைக் கண்டு, 'கிம் அதிரடி திரைப்படத்தில் நடிக்க வேண்டும். அவர் படத்தில் நடிக்க வேண்டிய அவசியமே இல்லை . பாத்திரமாகவே மாறிவிடுவார்'' என்று புகழ்ந்திருந்தார். எலானின் வார்த்தை உண்மையாகியிருக்கிறது.
ஆம்! கிம் யே-ஜி, யூஸூப்பை பின்னுக்குத் தள்ளி, வெள்ளிப் பதக்கத்தை பெற்ற முகூர்த்தத்தில் 'க்ரஷ்' என்ற சர்வதேச தொடர் ஒன்றில் கொலையாளியாக நடிக்கப் போகிறார்.
கிம்மின் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் அவரை நான்கு கோடி பேர் தொடருகிறார்கள். கிம்முடன் இணைந்து நடிப்பவர் இந்திய தொலைக்காட்சி நடிகையான அனுஷ்கா சென். 'கிம்- அனுஷ்கா கொலைகார இரட்டையர்களாக சக்கை போடு போடுவார்கள்' என்று 'க்ரஷ்' சர்வதேச தொடரைத் தயாரிக்கும் நிறுவனம் கூறுகிறது.
'எனது முக்கிய குறிக்கோள் பதக்கம் பெறும் போட்டிகள்தான். படப்பிடிப்பு ஒருபுறம் நடக்கும். அடுத்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டு போட்டிகள். இன்னும் நான்கு ஆண்டுகளில் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸ் . நான் தொடர்ந்து முன்னேறி என்னைப் புதிய உயரத்துக்கு உயர்த்திக் கொள்ள விரும்புகிறேன்'' என்கிறார் கிம் யே-ஜி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.