மரபணு ஜோதிடத்தில் வாழ்வியல் பலன்கள்...

'மனிதர்களின் உயிர் செல்லைக் கொண்டு ஆராய்வதல்ல மரபணு முறை ஜோதிடம்.
மரபணு ஜோதிடத்தில் வாழ்வியல் பலன்கள்...
Published on
Updated on
1 min read

'மனிதர்களின் உயிர் செல்லைக் கொண்டு ஆராய்வதல்ல மரபணு முறை ஜோதிடம். நட்சத்திரங்களின் செல்களை அடிப்படையாகக் கொண்டு ஆராய்வது' என்கிறார் நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரைச் சேர்ந்த சங்கீதா ராம்குமார்.

கிளி ஜோதிடம், கைரேகை ஜோதிடம், நாடி ஜோதிடம், பிறந்த நேரம், நாள் கொண்டு கணிக்கும் ஜோதிடம், கணினி முறை ஜோதிடம்... என்று ஜோதிடத்தில் பலவகைகள் உள்ளபோது, இவற்றையெல்லாம் கடந்து மரபணு(டி.என்.ஏ.) ஜோதிடம் என்பது உருவெடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கீதா ராம்குமார் கூறியதாவது:

'ஜோதிடத்தில் உயர்கல்வியில் ஜோதிடவியல் துறையை எடுத்து பயின்று பட்டம் வாங்கினேன். தனியார் ஜோதிட பயிற்சி மையங்கள் நடத்திய போட்டிகளிலும் வென்று, 'ஜோதிட அமுது' என்ற பட்டத்தையும் பெற்றுள்ளேன். இணையவழியில் மரபணு ஜோதிடம் பற்றி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.

பாரம்பரிய ஜோதிடத்துக்கும், மரபணு ஜோதிடத்துக்கும் அதிக வேறுபாடு உண்டு. பிறந்த நட்சத்திரம் என்பது 24 மணி நேரம் இருக்கக் கூடியது. இதில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் லக்கினம் என்பது இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை மாறிக் கொண்டிருப்பது. இதில் கடைசி ஒரு நிமிடம், ஏன் ஒரு விநாடியில் கூட லக்கினம் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. லக்கினம் மாறிவிட்டால், தவறான பலன்களை நாம் அறிந்து கொண்டு குழப்பத்தில் தவிக்கும் நிலைதான் ஏற்படும்.

இதனை தெளிவுப்படுத்தவும், நட்சத்திரப்படி மிக துல்லியமான பலன்களை பெறவும் உருவாக்கப்பட்டது தான் மரபணு ஜோதிடம். ஒரு ஜாதககாரரின் எதிர்காலத்தை மட்டுமல்ல; முன்ஜென்மத்தில் அவருக்கு ஏற்பட்ட தோஷம், அது தற்போதும் தொடர்வதற்கான காரணம், அதில் இருந்து விடுபடும் வழிமுறைகள் போன்றவற்றையும் இதன்மூலம் அறிய முடியும்.

மரபணு ஜோதிடப்படி குறிப்பிட்ட ஜாதகம் மனிதனின் ஜாதகமா? அல்லது மிருகத்தின் ஜாதகமா? ஆண் அல்லது பெண்ணின் ஜாதகமா? என்பதை துல்லியமாக கணிக்க முடியும். பாரம்பரிய ஜோதிடமானது 'எக்ஸ்ரே ரிப்போர்ட்' என்றால், மரபணு ஜோதிடம் 'ஸ்கேன் ரிப்போர்ட்'. முன்ஜென்மத்தில் என்ன கர்மவினைகளைச் செய்துள்ளோம், எதனால் இப்பிறவி எடுத்துள்ளோம், தற்போது ஏற்படும் இன்ப, துன்பங்களுக்கான காரணம் என்ன? வாழ்வில் பிரச்னைகள் தொடராமல் இருக்க என்ன செய்வது? போன்றவற்றையும் கூறிவிட முடியும்.

எதிர்வரும் ஆபத்துகளில் இருந்து நம்மை பாதுகாத்துகொள்ள வழியும் இதன்மூலம் தெரிந்து விடும். இந்த ஜோதிடத்தில் ஒரு ஜாதககாரரின் நேற்றைய, இன்றைய, நாளைய வாழ்வியல் பற்றி ஆய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் செலவிட வேண்டும். அப்போதுதான் முழுமையான தகவல்களை அறிய முடியும். இதற்கு ஜாதகம் தேவையில்லை. பிறந்த தேதி, நேரம் தெரிந்து வைத்திருந்தாலே போதுமானது. இந்த ஜோதிடக் கலையை விரும்புவோருக்கு இணையவழி வாயிலாக கற்றுக்கொடுக்கிறேன்' என்கிறார் சங்கீதா ராம்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com