மோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

மாடித்தோட்டத்தில் மடிநிறைய காய்கறிகள்!

பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரங்களின் பயன்பாட்டால் தமிழ்நாட்டில் மண்வளம் பாதிக்கப்படுவதால், பல்லாயிரக்கணக்கான விவசாயிகளைச் சந்தித்து, இயற்கை விவசாயத்தின் அவசியத்தை வலியுறுத்தியவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்.

News image

மகள் கிருத்திகாவுடன் சுதாகர் கிருஷ்ணன்

Updated On :8 ஆகஸ்ட் 2026, 8:00 pm IST

பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரங்களின் பயன்பாட்டால் தமிழ்நாட்டில் மண்வளம் பாதிக்கப்படுவதால், பல்லாயிரக்கணக்கான விவசாயிகளைச் சந்தித்து, இயற்கை விவசாயத்தின் அவசியத்தை வலியுறுத்தியவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார். பாரம்பரிய இயற்கை விவசாயம் தொடர்பாக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வுக்கும், வரவேற்புக்கும் அவரும் ஒரு காரணம்.

இன்றைக்கு சென்னை உள்ளிட்ட நகரங்கள் அசுர வளர்ச்சியடைந்துள்ளன. இயற்கையோடு இயைந்து வாழ ஆசைப்படும் சென்னைவாசிகளுக்கு வரப்பிரசாதமாக விளங்குகிறது மாடித் தோட்டமும், வீட்டுத் தோட்டமும். இதுகுறித்து, மாடித்தோட்டம், வீட்டுத் தோட்ட விதைச் சேகரிப்பாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்

சுதாகர் கிருஷ்ணனிடம் பேசியபோது:

'கடலூர் மாவட்டத்தில் உள்ள மலையப் பெருமாள் அகரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் நான். அடிப்படையில் எங்கள் குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம். ஆவடியில் உள்ள பீரங்கித் தொழிற்சாலையில் எனக்கு வேலை கிடைக்க, அதன் பின்னர் நாங்கள் சென்னைவாசியாகி விட்டோம். இங்கு வந்தாலும் விவசாயத்தை ஓய்வு நேரத்தில் தொடர விரும்பினேன். அதற்குரிய இடம் கிடைக்கவில்லை. எனவே மாடித் தோட்டம் போட ஆரம்பித்தேன். அதற்கு இயற்கை உரங்களைப் பயன்படுத்தினேன். நல்ல விளைச்சல் கிடைக்க, அதில் வெற்றி பெற்றேன்.

எனக்குப் பக்கபலமாக என் மனைவி ராதிகாவும், மகள்கள் கிருத்திகாவும், அபிநயாவும் இருக்கிறார்கள். மாடித்தோட்டம் என்றாலும் வீட்டுத்தோட்டம் என்றாலும் அதன் பராமரிப்புக்குக் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். யூ டியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, எப்படி எல்லாம் மாடித்தோட்டம் போடலாம்? அதில் என்னென்ன பிரச்னைகள் வரும்? அதை எப்படிச் சமாளிக்கலாம்? என்று என்னுடைய கருத்துகளைப் பதிவு செய்தேன். அதன் பின்னர் மாடித்தோட்டத்தை அடுத்தக்கட்டத்துக்குக் கொண்டு செல்ல விரும்பினேன்.

முதல் விழா

சென்னையில் வசிக்கும் மக்கள் மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டம் அமைத்து, அவர்களுக்கு உண்டான காய்கறிகளை அவர்களே விளைய வைத்து, பயன்படுத்தி, ஆரோக்கியமாக வாழவேண்டும் என்ற நோக்கத்தில், மாடித் தோட்டம் மற்றும் வீட்டுத் தோட்டம் விதைச் சேகரிப்பாளர் கூட்டமைப்பு சார்பில், சென்னை தாம்பரத்தில் உள்ள வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விழாவை நடத்தினோம்.

அதைத்தொடர்ந்து சென்னை தி.நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் ஜூலை 26 -ஆம் தேதி இரண்டாவது விழாவை நடத்தினோம். இதில் 300-க்கும் மேற்பட்ட காய்கறிகள், மரபு ரகக் கிழங்குகள் காட்சிப்படுத்தப்பட்டன. சுமார் 300-க்கு மேற்பட்ட மரபு ரக விதைகளையும் விற்பனைக்கு வைத்திருந்தோம். 70- க்கு மேற்பட்ட இயற்கை அங்காடிகள் இந்த விழாவில் பங்கு வகித்தன. மாடித் தோட்டம் மற்றும் வீட்டுத் தோட்டம் சம்பந்தமான கருத்தரங்கமும் நடைபெற்றது.

வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜ் கலந்துகொண்டு உரையாற்றினார். தோட்டக்கலை உதவி இயக்குநர் அருள்மணி, மாடித்தோட்டத்தில் வரும் பூச்சிகளும் மாடி தோட்டத்துக்குத் தேவையான உரங்களைப் பற்றியும் பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார். 'மாடித்தோட்டத்தில் மகத்தான விளைச்சல் சாத்தியமே' என்ற தலைப்பில் ஒருங்கிணைப்பாளரான நான் உரையாற்றினேன். சுமார் ஆறாயிரம்பேர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

மாடித் தோட்டம்

பொதுவாக வீட்டில் கீழே இடம் இல்லாதவர்கள் மாடித்தோட்டத்தில் எல்லாவிதமான செடிகளையும் வளர்க்கலாம். கீரைகளில் இருந்து பழ மரங்கள் வரை நடவு செய்யலாம். செடிகளை நடவு செய்யும்போது, அந்தந்த பட்டத்தில் நன்றாக வளரக் கூடியவற்றைத் தேர்வு செய்து வளர்த்தால், நல்ல அறுவடையை எதிர்பார்க்கலாம். குளிர்காலப் பயிர்களான கேரட், பீட்ரூட், பிரக்கோலி, முட்டைக்கோஸ், காலிபிளவர் இவையெல்லாம் கார்த்திகை மாதத்தில் நடவு செய்தால், நமக்கு நல்ல அறுவடை கிடைக்கும். அதிக வெயில் இருந்தால், நிழல் வலை அமைத்து மாடித்தோட்டம் அமைக்கலாம்.

வீட்டுத் தோட்டம்

வீட்டில் இடம் இருப்பவர்கள் வீட்டுத்தோட்டம் அமைத்து பயிர் செய்யலாம். அனைத்து வகையான பயிர்களையும், பழ மரங்களையும் தாராளமாகப் பயிர் செய்யலாம். சரியாகத் திட்டமிட்டுப் பயிர் செய்யும்போது நமக்கு நல்ல அறுவடை கிடைக்கும். வீட்டுத் தோட்டத்தில் பயிர் செய்யும்போது பராமரிப்பு குறைவாக இருக்கும். மண்ணை நன்றாகக் கொத்திக் கிளறிவிட்டு உரங்கள் போட்டு செடிகளை நடவு செய்யலாம். நேரடியாக விதைகள் போடும் செடிகளை விதைகள் போட்டு வளர்க்கலாம்.

இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு

மாடித்தோட்டம் என்பது பிறந்த குழந்தையைப் போன்றது. அதுவே வீட்டுத் தோட்டம் என்பது கொஞ்சம் நன்றாக வளர்ந்த குழந்தையைப் போன்றது. மாடித் தோட்டத்தில் செடிகளுக்குத் தேவையான உரங்கள், தண்ணீர், வெளிச்சம் இதுபோன்ற எல்லாவற்றையும் நாம் பார்த்து பார்த்து கைக்குழந்தைக்கு என்ன செய்கிறோமோ அதுபோலத்தான் செய்ய வேண்டும். ஏனென்றால், அந்தத் தொட்டிக்குள் இருக்கும் உரத்தைக் கொண்டே இது வளரும்.

எனவே, உரங்கள் கொடுப்பது, தண்ணீர் விடுவதில் இருந்து அதற்கு என்ன குறைபாடு என்று பார்த்து பார்த்து நாம்தான் செய்ய வேண்டும். நன்கு வளர்ந்த குழந்தை பசி எடுத்தால் தானாகவே உணவை எடுத்துச் சாப்பிடும். அதுபோல வீட்டுத் தோட்டத்தில் செடிகளுக்குத் தேவையான சத்துகளை அது மண்ணிலிருந்து தானாகவே எடுத்துக் கொள்ளும்.

மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைத்து ஒவ்வொருவரும் தற்சார்பாகப் பயணிக்க வேண்டும் என்பதை பறைசாற்றும் விதமாகத் தொடர்ந்து காய்கறிக் கண்காட்சி மற்றும் மரபு விதைத் திருவிழாவை பல ஊர்களில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். நாளைய தலைமுறைக்கு மரபு விதைகளைக் கொடுத்து நல்லது செய்வோம்' என்கிறார் சுதாகர் கிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.