19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

படிப்பதோ பள்ளியில்; சாதிப்பதோ உலக அரங்கில்..!

பதினொரு வயதான தமிழ் வம்சாவளி மாணவி போதனா சிவானந்தன், மிகக் குறைந்த வயதில் செஸ் ஆட்டத்தில் கிராண்ட்மாஸ்டராகி உள்ளார்.

Updated On :

பதினொரு வயதான தமிழ் வம்சாவளி மாணவி போதனா சிவானந்தன், மிகக் குறைந்த வயதில் செஸ் ஆட்டத்தில் கிராண்ட்மாஸ்டராகி உள்ளார்.

திருச்சியைப் பூர்விகமாகக் கொண்ட, தகவல் தொழில்நுட்பத் துறையில்பணிபுரியும் சிவானந்தன் வேலாயுதம், 2007- ஆம் ஆண்டில் லண்டனில் தனது மனைவியுடன் குடியேறினார். அங்கு 2015- ஆம் ஆண்டில் மகள் போதனா பிறந்தார். வடக்கு லண்டனில் உள்ள பள்ளியில் படித்த போதனா ஐந்து வயதிலேயே சதுரங்கம் (செஸ்) கற்றார்.

சில மாதங்களில் சதுரங்கத்தில் தந்தையைத் தோற்கடித்த போதனா, தொடர்ந்து முன்னேறி தொழில் ரீதியான போட்டிகளில் வெற்றி வாகை சூடினார். அவர் தனது எட்டாவது வயதில், முன்னாள் பிரிட்டிஷ் சாம்பியன் பீட்டர் லீயைத் தோற்கடித்தார். உஸ்பெகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் போதனா சிவானந்தன், மிக இளம் வயதில் 'பெண் கிராண்ட்மாஸ்டர்' பட்டத்தை வென்றார்.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், சதுரங்கப் பலகை வைக்கப்பட்டிருக்கும் மேஜையை எட்டுவதற்காக போதனா ஒரு 'பூஸ்டர் சீட்'டை (உயரத்தை அதிகரிக்கும் இருக்கை) நாற்காலியில் வைத்து அதன் மீது அமர்ந்து விளையாடினார். போதுமான உயரம் இல்லாத போதனா, புகழின் உச்சியைத் தொட்டிருக்கிறார்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சதுரங்க வீராங்கனையாக உள்ள பள்ளி மாணவி போதனா கூறுவதாவது:

'போட்டிகளுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியதும் அடுத்த நாளே பள்ளிக்குச் செல்வேன். விடுப்பு எடுத்து ஆடப் போவதால், வீட்டுப் பாடங்களை ஒரு சில தினங்களில் செய்து முடித்துவிடுவேன். சமூக ஊடகங்களில் நான் பங்கு பெறுவதில்லை.

உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் அண்மையில் கிடைத்த வெற்றிகளின் மூலம், எனது தரவரிசை 2,382- ஆக உயர்ந்துள்ளது. இது 'பெண் கிராண்ட் மாஸ்டர்' அந்தஸ்தைப் பெறுவதற்குத் தேவையான 2,300 புள்ளிகளைவிட அதிகம். 'இன்டர்நேஷனல் மாஸ்டர்' அந்தஸ்தைப் பெற எனக்கு இன்னும் சில புள்ளிகளே தேவைப்படுகின்றன. முழுமையான கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தைப் பெற 2,500 புள்ளிகள் தேவை. அடுத்த 11 மாதங்களுக்குள் அந்தப் புள்ளிகளை ஈட்டியாக வேண்டும். உலகிலேயே மிகச் சிறந்த சதுரங்க வீராங்கனையாக மாற வேண்டும் என்பதே எனது லட்சியம்.

தரவரிசையின் அடிப்படையில் பார்த்தால், சதுரங்கத்தில் ஆண்களே பெண்களை விடச் சிறப்பாக ஆடுகின்றனர். பெண்கள் கடினமாக உழைத்தால், அவர்களாலும் அதே நிலையை அடைய முடியும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், உலகின் தற்போதைய முதன்மை வீரரான மேக்னஸ் கார்ல்சனுடன் வேகமான சதுரங்கப் போட்டியில் விளையாடினேன். அது ஒரு பிளிட்ஸ் ஆட்டம். நான் சுமார் 10 நிமிடங்கள் வரை தாக்குப் பிடித்தேன். யாருக்கும் தோற்பது பிடிக்காது. ஆனால் நான் தோற்றேன். கற்றுக் கொள்வதற்குத் தோல்வி அவசியமானதுதான்.

எனக்கு மிகவும் பிடித்த செஸ் வீரர் ஜோஸ் ரவுல் கபாபிளாங்கா. 1920- ஆம் ஆண்டுகளில் உலக சாம்பியனாக இருந்த கியூபாவைச் சேர்ந்த ஜோஸ் ரவுல் கபாபிளாங்கா எழுதிய புத்தகங்களையும் வாசித்துள்ளேன். ஜோஸ் விளையாடிய ஆட்டங்களையும் பார்த்து நுணுக்கங்களைக் கற்றேன்.

பியானோ, வயலின் வாசிப்பேன். எனக்கு இனிப்புத் தின்பண்டங்கள் என்றால் உயிர். படிக்க, சதுரங்கப் பயிற்சி செய்யவும் நேரம் சரியாக இருப்பதால், தொலைக்காட்சிகளைப் பார்ப்பதில்லை. இங்கிலாந்து சதுரங்கக் கூட்டமைப்பு, சதுரங்க அறக்கட்டளை ஆகியவற்றின் நிதியுதவியுடன் வாரத்துக்கு எட்டு மணிநேர சதுரங்கப் பயிற்சி எனக்குக் கிடைத்து வருகிறது. துருக்கிய முதலீட்டாளரான எவ்ரென் உசோக், டாங்கிராம் தெரபியூடிக்ஸ், ஜான் ராபின்சன் சதுரங்க அறக்கட்டளையின் நிதியுதவியும் எனக்குக் கிடைத்து வருகிறது. எனது அடுத்த போட்டி, நவம்பர் மாத இறுதியில் நடைபெறும் லண்டன் செஸ் கிளாசிக் போட்டி ஆகும்' என்கிறார் போதனா சிவானந்தம்.

முந்தைய சாதனைகள்

இதற்கு முன் கேடெரினா லாக்னோ என்பவர் தனது 12 வது வயதில் 'கிராண்ட் மாஸ்டர்' பட்டத்தையும், சீனாவைச் சேர்ந்த ஹூ யிஃபான் தனது 12 வது வயதில் 'ஓபன் கிராண்ட்மாஸ்டர்' பட்டத்தையும் பெற்றிருந்தனர். ஹூயிஃபான் தனது 14 வயதில், ஹூ கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்ற மிகக் குறைந்த வயது பெண்மணி என்ற பெருமையை பெற்றார். 'உமன் கிராண்ட்மாஸ்டர்' பட்டத்தை 11 வயதில் போதனா வென்று, கின்னஸ் சாதனை புத்தகத்திலும் மூன்றாவது முறையாக இடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.