பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிறுகதை: அன்னலட்சுமி!

அன்று கேதார கெüரி விரதம். விடியற்காலை 3 மணிக்கு எழுந்து, குளித்து முடித்து, பெருக்கி மெழுகி, வேலைகளைத் தொடங்கி இருந்தாள் அம்மா. நான் நான்காம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி. அம்மா என்னை 5 மணிக்கே எழு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:49 pm

மயிலை.சிவ.மாசிலாமணி

ன்று கேதார கெüரி விரதம். விடியற்காலை 3 மணிக்கு எழுந்து, குளித்து முடித்து, பெருக்கி மெழுகி, வேலைகளைத் தொடங்கி இருந்தாள் அம்மா. நான் நான்காம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி. அம்மா என்னை 5 மணிக்கே எழுப்பிவிட்டாள்.

  அம்மாவுக்கு ஒத்தாசையாக சிறு சிறு வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன். காலை 8 மணி வரை அப்பா தூங்கிக்கொண்டே இருந்தார். முந்தையநாள் இரவு 2 மணி வரை எப்போதோ நடந்த இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்த்துக்கொண்டிருந்ததன் விளைவு, விடிந்தும் கலையாத தூக்கம்.

  ""என்னங்க... எழுந்திருங்க. நாளும் கிழமையுமா என்ன தூக்கம்? எழுந்து குளிச்சிட்டு கடைக்குப் போய் வாழை இலை, பழம் வாங்கிட்டு வாங்க.'' -அம்மா சமையலறையில் இருந்து உரக்கக் கட்டளையிட்டாள்.

  அப்பாவின் காதில் அது எங்கே விழப்போகுது? நான் ஒரு ஐடியா செய்தேன். டி.வி.யை ஆன் செய்து ஈஎஸ்பிஎன் சேனலை ஒளிரவிட்டேன். ஏதோ ஒரு கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்தது. எவனோ ஒருத்தன் சிக்ஸர் அடித்ததும் மைதானத்தில் "ஓ...' வென ரசிகர்கள் ஆரவாரம்!

  டி.வி.யில் சப்தத்தை கூட்டியதும் அப்பா துள்ளியெழுந்தார். ""அடடே... இன்னைக்கு காலை 9 மணிக்கு இந்தியா-ஆஸ்திரேலியா ஒன்டே மேட்ச் இருக்கே...'' என்றவாறே அவசரமாக பல் தேய்த்துக் குளித்துவிட்டு காபி டம்ளருடன் டி.வி. முன் உட்கார்ந்துக் கொண்டார். அம்மா கடைக்குப் போய் வரும்படி பலமுறை சொல்லியும் அவர் கேட்கவில்லை.

  எனக்கு அப்பா மீது ஆத்திரமாகவும், அம்மாவை நினைக்கும் போது பாவமாகவும் இருந்தது.

  ""பாவனா... நானே கடைக்குப் போய்ட்டு வந்துடறேன்.''

  அம்மா கைப் பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

  அப்பா அதையெல்லாம் கண்டுக் கொள்ளவில்லை. 9.45 மணிக்கு அம்மா கடையில் இருந்து திரும்பினாள்.

  ""ஏங்க... இன்னுமா டி.வி. பார்த்துக்கிட்டிருக்கீங்க. பிள்ளையாருக்கு அபிஷேகம் பண்ணி சந்தனப் பொட்டு வச்சு விடக் கூடாதா? கல்யாணத்துக்கு முன்பு நீங்கதான் பிள்ளையார் பூஜை பண்ணுவீங்கன்னு உங்க அம்மா சொன்னாங்களே.''

  ""ஆமா... இப்ப அதெல்லாம் மறந்து போச்சுடி.''

  ""ஆமா... டி.வி. பார்க்க மட்டும் மறக்க மாட்டீங்களாக்கும். எல்லா வேலையையும் நானே பார்க்க வேண்டிருக்கு.''

  அம்மா சலிப்புடன் சமையலறைக்குச் சென்றாள். வடை, பாயசம், நெய் அதிரசம், சர்க்கரைப் பொங்கல் என சமையல் முடித்து பூஜை அறைக்குள் சென்றாள். நானும் அம்மாவுக்கு உதவியாக சந்தனம் அரைத்து, மஞ்சள் குழைத்து, சிறிய உபகாரங்களைச் செய்து கொண்டிருந்தேன்.

  11.30 மணி ஆகிவிட்டது. 12 மணிக்கு கோயில் நடை சாத்திவிடுவார்களே என்ற பரபரப்பு அம்மாவிடம் தொற்றிக் கொண்டுவிட்டது. நோன்புத் தட்டில் கோயிலுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பட்சணங்கள், பழம், பூ இதெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு பட்டுப் புடவையைக் கட்டிக் கொண்டாள் அம்மா. நானும் புதிய கவுனை அணிந்து கொண்டேன்.

  ""ஏங்க... கோயிலுக்காவது கூட வருவீங்களா, மாட்டீங்களா?'' -அம்மாவின் குரலில் எரிச்சலுடன் கூடிய கோபம் தென்பட்டது..

  ""ஆங்... வர்றேனே. ஆனா ஒண்ணு இப்ப டீ பிரேக். பிளேயர்ஸ் மறுபடியும் கிரவுண்டுக்கு வர்றதுக்குள்ளே நாம திரும்பி வந்துரணும்'' என்று கண்டிஷன் போட்டவராக அப்பா புதுச் சட்டை, பட்டு வேட்டியுடன் கிளம்பினார்.

  கோயிலுக்குப் போனோம். காலையில் இருந்து ஓடியாடி வேலையில் மூழ்கிய அம்மா, கொடி மரத்தடியே விழுந்து கும்பிட்டுவிட்டு சம்பிரதாயப்படி சற்று அமர்ந்தாள். "அப்பாடா.. தரையில் உட்கார எவ்வளவு சுகமாக இருக்கிறது' என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே... அப்பா அவசரப்படுத்தினார்.

  ""ஏண்டீ... மேட்ச் ஆரம்பிச்சுடும்.. வா வீட்டுக்குப் போகலாம்''

  ""தலையெழுத்து..'' -அம்மா நெற்றியைப் பிடித்துக் கொண்டே எழுந்தாள்.

  வீட்டுக்கு வந்தவுடன் சாமிக்கு படையல் போட்டாள். கற்பூரம் ஏற்றினாள். கற்பூர ஆரத்தித் தட்டை அப்பா அருகே எடுத்துச் சென்ற போது கற்பூர ஜோதியை கைகளால் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்ட அப்பாவின் பார்வை அடுத்த நொடியே மீண்டும் கிரிக்கெட் மீது தாவியது.

  அடுத்து..

  ""சரி... சரி... சீக்கிரம் சாப்பாடு பரிமாறு காஞ்சனா...'' என்று அப்பா அதட்டினார்.

  காலையில் இருந்து ஒரு வாய் காப்பி கூட குடிக்காம விரதம் இருந்த அம்மா, மறுப்பேதும் சொல்லாமல் அப்பாவுக்கு ஆசையுடன் பரிமாறினாள். என்னையும் சாப்பிடச் சொன்னாள்.

  ""காலையில் இருந்து எதுவும் சாப்பிடாம இருப்பது நீங்கதான். நீங்க முதல்ல சாப்பிடுங்க. நான் அப்புறமா சாப்பிடுறேன்'' என்றேன்.

  நான் இப்படிச் சொன்னதும் அம்மா முகத்தில் திடீர் வெளிச்சம். அவள் களைப்பெல்லாம் காணாமல் போய்விட்டது. ""இல்லம்மா... நீ சின்னப் பொண்ணு. உனக்குத்தான் அதிகம் பசிக்கும். நீயும் அப்பா கூட சேர்ந்து சாப்பிடு'' என்றாள் அம்மா.

  ""இல்லேம்மா... அப்பா சாப்பிட்டுப் போனதும் நான் உங்கூட சேர்ந்து சாப்பிடறேன்'' என்றேன் நான்.

  ""சரி..!'' என்றாள் அம்மா புன்னகையுடன்.

  டி.வி. பார்க்கும் அவசரத்தில் அப்பா விரைவாக சாப்பிட்டு எழுந்தார்.

  அம்மா எனக்கு அன்போட பரிமாறினாள். வகை, வகையான பதார்த்தங்கள். சுவையும் மணமுமே வயிற்றை நிரப்பி விடும் போலிருந்தது. ஒரு வடையைப் பிட்டு வாயருகே கொண்டு சென்றேன்.

  அம்மா என்னைத் தடுத்தாள். ""என்ன பாவனா... மறந்து போச்சா? சாப்பிடும் முன் கண்ணை மூடிக்கிட்டு அன்ன லட்சுமிக்கு நன்றி சொல்லும் ஸ்லோகம் சொல்வியே... இன்னைக்கு ஏன் சொல்லலை?'' என்று கேட்டாள்.

  ""சாரி!'' என்ற நான் கண்களை அகலத் திறந்து கொண்டு அம்மாவையை ஆசையாக உற்றுப் பார்த்து ""தேங்க்ஸ்ம்மா!'' என்றவாறே சாப்பிட ஆரம்பித்தேன்.

  ""என்னம்மா? ஸ்லோகம் மறந்து போச்சா..? கடவுளுக்கு நன்றி சொல்லலையே..!'' என்று மீண்டும் கேட்டாள் அம்மா.

  ""அம்மா.. நான்தான் உங்களுக்கு "தேங்க்ஸ்' சொல்லிட்டேனே.. பிறகு என்ன? காலையில் இருந்து ஓய்வு ஒழிச்சல் இல்லாம அருமையா பலகாரங்களை செஞ்சு வைச்சது நீங்கதானே! அந்த அன்ன லட்சுமியா செஞ்சு வெச்சா? அதனால, நீங்கதான் எனக்கு அன்னலட்சுமி, அன்னை லட்சுமி எல்லாமே. கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு "தேங்க்ஸ்' சொல்றதைவிட, கண் எதிரே இருக்கற என் அம்மாவுக்கு நன்றி சொல்றதுதானே சரி..!'' என்றவாறே இலையில் இருந்த சர்க்கரைப் பொங்கலை சிறிது எடுத்து வாயில் போட்டேன்.

  ""அம்மா சர்க்கரைப் பொங்கல் தேனாக இனிக்குதும்மா..''

  ""என்னடி... என்னை ரொம்பதான் புகழறே..?'' என்றவாறே அம்மா என்னை வைத்தக் கண் வாங்காமல் நான் சாப்பிடுவதையே ரசித்துக் கொண்டிருந்தாள்.

  நான் தொடர்ந்தேன்.

  ""அம்மா... நான் பரீட்சையில நல்லா மார்க் வாங்கினா நீங்க என்னைப் பாராட்டி, மேலும் ஊக்கப்படுத்துவீங்களே.  அதுமாதிரி, நீங்க அற்புதமா சமையல் பண்ணினா அதை எப்படிம்மா என்னால பாராட்டாம இருக்க முடியும்?''

  நான் கூறிக்கொண்டு இருக்கும் போதே அம்மா என்னை நெருங்கி வந்து அப்படியே கட்டி அணைத்து உச்சந்தலையில் முத்தமிட்டார்.

  ""என் தங்கமே... என் மனசும், வயிறும் சாப்பிடாமலே நிரம்பிப் போச்சுடி உன் வார்த்தையாலே...'' என்று ஆனந்தித்தாள். அவள் கண்களில் கண்ணீர் சுடர்விட்டது.

  அப்பாவோ காம்பீர், கம்பீரமாக எகிறிப் பிடித்த ஒரு கேட்ச்சில் மெய்மறந்து சோபாவில் அமர்ந்தபடியே கைகளைத்தட்டி குதித்துக் கொண்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.