எகிப்து, வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடு. இந்த நாட்டின் தலைநகர் கெய்ரோ. இது உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் பதினைந்தாவது இடத்தில் இருக்கிறது. இந்த நாட்டின் மக்கள் தொகை 79,089,650 ஆகும். பரப்பளவு ஏறத்தாழ 1,002,450 சதுர கிலோ மீட்டர். எகிப்தின் மேற்கே லிபியாவும், தெற்கே சூடானும், கிழக்கில் காசாக்கரை மற்றும் இஸ்ரேலும் எல்லைகளாக உள்ளன. எகிப்தின் ஆட்சி மொழியாக உள்ளது அரபு மொழி. ஆங்கிலம், பிரெஞ்சு ஆகியன துணை மொழிகள். இங்கு ஃபவுண்ட் என்ற நாணயம் பயன்படுத்தப்படுகிறது. எகிப்தில் அரை அதிபர் குடியரசு அரசியல் அமைப்பு பின்பற்றப்படுகிறது. இந்த நாட்டின் தற்போதைய அதிபர், முகம்து ஓஸ்னி முபாரக். பிரதமர், அகமது நசீஃப்.
உலகின் மிக நீளமான நதிகளில் ஒன்றான நைல் நதி எகிப்தின் வழியாகப் பாய்கிறது. இந்த நாட்டில் நைல் நதிக் கரைகளில் மட்டுமே விவசாய நிலங்கள் உள்ளன. மற்ற பெரும்பாலான நிலங்கள் சகாரா பாலைவனமாக உள்ளன. சகாரா பாலைவனம் உலகின் மிகப் பெரிய சுடு பாலைவனம் ஆகும். 1922-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி எகிப்து பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது. இது 1953-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு அங்கே மன்னராட்சி முடிவுக்கு வந்தது.
எகிப்துப் பிரமிடுகள் உலகப் புகழ் பெற்றவை ஆகும். பட்டைக் கூம்பு வடிவத்தில் அமைந்த கல்லறைக் கட்டடங்களே பிரமிடுகள். எகிப்தில் உள்ள "கிசா' பிரமிடு எனப்படும் பெரிய பிரமிடு, உலக அதிசயங்களில் ஒன்றாகும். இது எகிப்து மன்னர் "கூபு' என்பவரின் சமாதி ஆகும். இது கி.மு. 2570-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கிசா பிரமிடு கெய்ரோ நகரின் புறப் பகுதியான "கிசா நெக்ராபோலிஸில்' அமைந்துள்ளது. இதன் உயரம் 481 அடி. 13.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
எகிப்தின் முக்கிய விளைபொருட்கள் பருத்தி, அரிசி,கோதுமை,கரும்பு,சோளம்,பீட்ரூட்,உருளைக் கிழங்கு,வெங்காயம், தக்காளி ஆகியன. இந்த நாட்டின் முதன்மை மதம் இஸ்லாம். மிலாது நபி, ரமலான் ஆகிய முக்கிய இஸ்லாமியத் திருநாட்கள் இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
அரபு இலக்கியத்தில் முன்னோடியாக விளங்குகிறது எகிப்து. நகிப் மஹ்ஃபூஸ் என்பவர் எகிப்து நாவலாசிரியர். இவருக்கு 1988-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. கால் பந்து விளையாட்டுதான் எகிப்தின் தேசிய விளையாட்டு. நீச்சல், ஹாக்கி, பேஸ்கட்பால், ஆகியன முக்கிய விளையாட்டுகள். எகிப்திய தாமரையே தேசிய மலர். வேக வைத்த முட்டை, மொச்சை, பூண்டு, ஆலிவ் ஆயில், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்துத் தயாரிக்கப்படும் ""முடாமஸ்''ஸýம், கொண்டைக் கடலை, துவரம் பருப்பு, மக்ரோனி, அரிசி ஆகியவை சேர்த்துத் தயாரிக்கப்படும் ""குஷாரி''யும் முக்கியமான உணவுகள். ""ஹாய்'' எனும் பானம் மக்களின் விருப்பத்திற்குரிய பானம். இது, இஞ்சி சாறு, எலுமிச்சைத் தோல், தேயிலை ஆகியன சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






