

கிராம உள்ளாட்சி அமைப்பைப் பற்றிய அடிப்படையான சில விஷயங்களை இந்த வாரம் நாம் அறிவோம்.
500 அல்லது அதற்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட ஒரு கிராமத்தை ஊராட்சி என்று சொல்லலாம். மக்கள் தொகை, 500 - க்கும் குறைவாக இருந்தால் அந்த ஊரில் எப்படி ஊராட்சி மன்றம் அமைப்பது என்று உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். மக்கள் தொகை 500 - க்கும் குறைவாக உள்ள இரண்டு மூன்று குக்கிராமங்களை ஒன்றாக இணைத்து ஒரு ஊராட்சி மன்றமாக அமைப்பார்கள். அருகருகே இருக்கின்ற சிறுசிறு கிராமங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு அது ஒரு ஊராட்சியாகச் செயல்படும்.
"கிராமங்கள்தான் நம் நாட்டின் முதுகெலும்பு' என்று மகாத்மா காந்தி கூறியிருக்கிறார். அதாவது, சிறுசிறு செங்கற்களை அடுக்கி வைத்துதானே பெரிய வீடு கட்டுகிறார்கள்? அதுபோல, லட்சக்கணக்கான கிராமங்கள் ஒன்று சேர்ந்ததுதான் நம் மிகப் பெரிய இந்திய நாடு!
"கிராம ஊராட்சி அமைப்பு' எனும் நிலையிலிருந்துதான் மக்களாட்சி தொடங்குகிறது. உங்கள் கிராமத்தையே எடுத்துக்கொள்வோமே. அங்கே தலைவராகவும், துணைத் தலைவராகவும், உறுப்பினர்களாகவும் இருப்பவர்கள் யார்? நீங்கள் சற்று யோசித்துப் பார்த்தால், அவர்கள் எல்லாம் உங்களுக்குத் தெரிந்தவர்களாகத்தான் இருப்பார்கள்!
இங்கே இன்னொரு வியப்பிற்குரிய செய்தியும் உண்டு. இதுபோன்ற சிறுசிறு கிராமங்களில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஊராட்சி மன்றத் தலைவர்களாக இருந்த பலர், பிற்காலங்களில் படிப்படியாக உயர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களாகவும், மாநில மற்றும் மத்திய அமைச்சர்களாகவும், கட்சித் தலைவர்களாகவும் ஆகியிருக்கிறார்கள்!
அது எப்படி?
முதலில் தெரு அளவிலான ஒரு போட்டியில் கலந்துகொள்ளும் நீங்கள் அதில் சிறப்பாகச் செயல்பட்டு வென்று ஊர் அளவிலான போட்டியில் கலந்துகொள்கிறீர்கள்! அதிலும் வெற்றி பெற்று பின்னர், மாவட்ட அளவுப்போட்டி, மாநில அளவுப் போட்டி, தேசியப் போட்டி என்றெல்லாம் வளர்வதுபோலத்தான்.
கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் எல்லாம் அந்தந்த கிராம மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். வெற்றி பெற்ற உறுப்பினர்கள் சேர்ந்து கிராம ஊராட்சியின் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். இதற்காக ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. அப்போது அந்தக் கட்சி, இந்தக் கட்சி எனும் பாகுபாடு பார்க்காமல், அந்தந்த ஊர்களில் இருக்கும் ஒரு நல்ல தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு மக்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது.
நாடெங்கிலும் இருக்கும் இதுபோன்ற கிராம ஊராட்சி அமைப்புகளில், பெண்கள் மட்டும் போட்டியிட்டுத் தலைவர்கள் ஆவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. மொத்தத்தில் மூன்றில் ஒரு பங்கு கிராமங்களில் பெண்கள் மட்டும்தான் போட்டியிட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. அதாவது ஒரு மாவட்டத்தில் 100 கிராம ஊராட்சிகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்ளுங்கள்.
அதில் ஏறத்தாழ 33 கிராம ஊராட்சிகளில் பெண்கள் மட்டும்தான் தலைவராக வர முடியும். பிற்காலத்தில் பெண்களும் பெரிய தலைவர்களாக வருவதற்கான பயிற்சியை இந்தக் கிராமங்களிலிருந்து தொடங்கலாம் அல்லவா! உண்மையில் இது மிகச் சிறந்த ஏற்பாடுதானே!
இதேபோல, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர் மட்டும் போட்டியிட்டுத் தலைவர்கள் ஆவதற்கும் பல கிராம ஊராட்சிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதுவும் மிக அருமையான திட்டம்தான். பெண்களும், ஒடுக்கப்பட்டவர்களும் தலைவர்களாக ஆவதற்கு ஒரு பயிற்சிக்களமாகவும் இந்தக் கிராம ஊராட்சி இருக்கிறது.
ஊராட்சி மன்றத் தலைவரையும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்கு ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தேர்தல் வரும் என்று அறிந்தோம். இந்தத் தேர்தலில் கலந்துகொண்டு போட்டியிடுவதற்கு 21 வயது ஆகியிருக்க வேண்டும்.
இவர்களைத் தேர்ந்தெடுக்க நாம் ஓட்டுப்போடவேண்டுமே, அதற்கு நமக்கு 18 வயது ஆகியிருக்க வேண்டும்.
தம்பி தங்கைகளே, நீங்களெல்லாம் ஓட்டுப்போட வேண்டும் என்றால் இன்னும் எத்தனை வருடங்களைத் தாண்ட வேண்டும்! மனதிற்குள் கணக்குப்போட்டுப் பாருங்கள்! கிராம ஊராட்சி செயல்படும் விதத்தையும், கூட்டங்கள் நடைபெறும் விதத்தையும், அதன் கடமைகளையும் குறித்து அடுத்த வாரம் பார்க்கலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.