

சென்றஇதழில் நாம் கிராம ஊராட்சி மன்றக் கூட்டம் நடப்பது குறித்து அறிந்தோம். இப்போது கிராமசபைக் கூட்டம் எப்படி நடைபெறுகிறது என்பது பற்றி காண்போம். கிராம ஊராட்சி மன்றக் கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவரும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் மட்டும்தான் கலந்துகொள்வார்கள். ஆனால் கிராமசபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி மன்றத்தின் தலைவர், உறுப்பினர்கள் உட்பட அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் கலந்துகொள்வார்கள்.
கிராமசபைக் கூட்டம், ஒவ்வொரு கிராமத்தின் எல்லைக்குள் நடைபெறும். கிராமத்தில் உள்ள ஏதாவது ஒரு பொது இடத்தில்தான் கூட்டத்தை நடத்துவார்கள். அந்தக் கிராமத்தில் உள்ள வாக்காளர்களில் பத்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வந்திருக்க வேண்டும். உதாரணமாக அந்தக் கிராமத்தில் மொத்த வாக்காளர்கள் ஆயிரம் பேர் இருந்தால், அதில் நூறுபேராவது கூட்டத்திற்கு வருவது அவசியம். அப்போதுதான் கூட்டத்தில் கிராமத்திற்கான பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசி முடிவு எடுக்க முடியும்.
அதனால், கிராமசபைக் கூட்டம் நடக்க இருக்கிறது என்பதை அந்தக் கிராமத்தின் எல்லாத் தெருக்களிலும் தமுக்கு அடித்துத் தெரிவிப்பார்கள். அல்லது பொது இடங்களில் கூட்டம் பற்றிய அறிவிப்புகளை எழுதி வைப்பார்கள். அதாவது, பள்ளிக்கூடம், கோயில், பொது தொலைக் காட்சி அறை, கடைவீதி, நீர்த் தேக்கத் தொட்டி இங்கெல்லாம் கிராமசபைக் கூட்டத்திற்கான அறிவிப்பை எழுதி ஒட்டி வைப்பார்கள்.
கிராமசபைக் கூட்டத்தில் எதைப் பற்றிப் பேசப் போகிறார்கள் என்பதை தலைவர், கிராம ஊராட்சியுடன் கலந்துபேசி முடிவு செய்வார். அது பற்றிய குறிப்புகளைத் தயார் செய்வார். இந்தக் கூட்டத்தை மேற்பார்வை செய்வதற்காக வட்டார வளர்ச்சி அலுவலரும் வருவார்.
கிராமசபைக் கூட்டத்தில் என்னென்ன விஷயங்களைப் பேசுவார்கள்? ஒரு பொதுக் கட்டடம் கட்டுவதற்காக திட்டமிடுகிறார்கள் என்றால், அதை கிராமத்தில் எந்த இடத்தில் கட்டலாம் என்று பேசி முடிவு செய்வார்கள். ஒரு பள்ளிக்கூடம் அல்லது ஒரு நூலகம் கட்டுகிறார்கள் என்றால், அதை எல்லோருக்கும் வசதியான இடத்தில் கட்டுவதுதானே நல்லது?
அதைப்போல கடந்த வருடம் செயல்படுத்தப்பட்ட பணிகளைப் பற்றிப் பேசுவார்கள். அதாவது, அந்தத் திட்டம் சரிவர நடைபெற்று இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வார்கள். பிறகு, நடப்பு வருடம் அந்தக் கிராமத்தில் என்னென்ன பணிகளைச் செய்யலாம் என்பதைப் பற்றிப் பேசுவார்கள்.
ஒரு கிராமத்தில் பல வகையான சமூகப் பிரிவைச் சேர்ந்த மக்களும் இருப்பார்கள். அந்த மக்களிடையே சமூக நல்லிணக்கம் ஏற்படுத்தவும் கிராமசபைக் கூட்டம் கூட்டப்படும்.
சில சமயங்களில் ஒரு கிராமத்தின் பொது வேலைகளை மக்களே கூடிச் செய்யத் திட்டமிடுவார்கள். எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்க முடியுமா? மண் சாலை அமைத்தல், வாய்க்கால் வெட்டுதல், குளம் தூர் வாருதல், பொது இடங்களில் உள்ள முட்செடிகளை அழித்தல் போன்ற வேலைகளை அந்தந்த கிராமத்தில் உள்ள மக்களே செய்து முடித்துவிடுவார்கள். இதுபோன்ற விஷயங்களைப் பற்றிப் பேசவும் கிராமசபைக் கூட்டத்தைக் கூட்டுவார்கள்.
மேலும், கிராம ஊராட்சியின் வரவு செலவுகளைப் பற்றிப் பேசுவார்கள். குளத்தைக் குத்தகைக்கு விடுவது, திருவிழாக் காலங்களில் சச்சரவு வராமல் இருப்பதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை எடுப்பது, மரங்கள் நடுவதைப் பற்றியெல்லாம்கூட கிராமசபைக் கூட்டத்தில் பேசி முடிவு செய்வார்கள்.
கிராமசபைக் கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கலந்துகொள்வார் என்று படித்தீர்கள் அல்லவா? அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களைப் பற்றி ஒரு அறிக்கையை கூட்ட முடிவில் அவர் தயார் செய்வார். அதை அவர் மேலதிகாரிக்கு (ஆய்வாளருக்கு) அனுப்பி வைப்பார்.
அதுபோல, கூட்ட நடவடிக்கை பற்றிய விவரங்களை அதன் தலைவர் வருகைப் பதிவேட்டில் பதிவார். கூட்டத்திற்கு வந்திருக்கும் மக்களுக்கு அந்த அறிக்கையை கடைசியாக ஒரு முறை படித்துக் காட்டுவார். அனைவரும் அதற்கு ஒப்புதல் அளித்ததும் அதில் அவர் கையொப்பமிடுவார்.
கிராம ஊராட்சி மன்றத் தலைவரும், இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்களைப் பற்றிய அறிக்கையை ஆய்வாளருக்கு அனுப்பி வைப்பார். இதை கூட்டம் முடிந்த மூன்று நாட்களுக்குள் அவர் அனுப்பவேண்டும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.