பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

நாடுகள் அறிவோம்... நெதர்லாந்து

ஐரோப்பிய யூனியனிலேயே மிகவும் அதிகமான, நெருக்கமான மக்கள் தொகையைக் கொண்ட நாடு. மிகவும் சிறிய நாடும்கூட! பெல்ஜியத்துக்கும் ஜெர்மனிக்கும் இடைப்பட்ட நாடு. நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள வடகடல் இந்த நாட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:02 am

அபி

ஐரோப்பிய யூனியனிலேயே மிகவும் அதிகமான, நெருக்கமான மக்கள் தொகையைக் கொண்ட நாடு. மிகவும் சிறிய நாடும்கூட! பெல்ஜியத்துக்கும் ஜெர்மனிக்கும் இடைப்பட்ட நாடு. நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள வடகடல் இந்த நாட்டை ஆண்டு முழுவதும் வெள்ளத்தால் துன்புறுத்திக் கொண்டே இருக்கின்றது! இந்த நீர்வெள்ளத்தைத் தடுக்க நெதர்லாந்து மக்கள் பெருமுயற்சி செய்து வருகின்றனர்.

 "கடவுள் உலகைப் படைத்தார் ஆனால் மக்கள் ஹாலந்தைப் (நெதர்லாந்துக்கு மற்றொரு பெயர் ஹாலந்து) படைத்தனர்' என்பது இங்கு வழிவழியாக வழங்கப்படும் பொன்மொழி.

 இந்த மக்கள் ஏராளமான தடுப்புச் சுவர்களையும் அணைகளையும் கட்டிவைக்காமல் இருந்திருந்தால், வடகடல் என்றோ நெதர்லாந்தை நீரில் மூழ்கடித்திருக்கும். அந்த அளவுக்கு நீர் சூழ்ந்த நாடு.

 கடல்நீர் மட்டத்துக்கு மிகவும் கீழே நாடு அமைந்திருப்பதால் நாட்டில் எங்கு பார்த்தாலும் தடுப்புச் சுவர்களும் அணைகளும்தான்! ஏறக்குறைய 2,400 கி.மீட்டருக்கு மேல் தடுப்புச் சுவர்கள் இங்கு உள்ளன.

 இத்தனையையும் மீறி இங்கு மக்கள் தொகையும் அதிகம், விலங்குகள் பறவைகளும் அதிகம். அவற்றைப் பாதுகாப்பதற்காக அரசு ஏராளமான வனவிலங்கு சரணாலயங்களைக் கட்டி வைத்திருக்கிறது.

 மேலும் இங்கு காற்றாலைகளையும் அதிகம் காணலாம். காற்றாலைகளும் நீரை வாரியிறைத்து வெளியேற்றுவதற்காகவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. 600 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு காற்றாலைகள் தொடர்ந்து இருந்து வந்திருக்கின்றன.

 நெதர்லாந்தைப் பாதுகாப்பதற்கு பெரிய மலைத் தொடர்களோ இயற்கை அரண்களோ இல்லாத காரணத்தால் ஏராளமான படையெடுப்புகளுக்குள்ளாகி பாதிப்படைந்த நாடு. பெரும்பாலும் வெளிநாட்டு அரசுகளால் ஆக்ரமிக்கப்பட்டு வந்த நாடு.

 ரோமானியர்கள், செல்டிக் இனம், ஜெர்மனித் துருப்புகள், ஸ்காண்டிநேவியன் கொள்ளைக்காரர்கள், ஆஸ்திரியர்கள் மற்றும் ஸ்பெயின் தேசத்தவர்களால் ஆளப்பட்ட நாடு.

 1500-ம் ஆண்டில் மக்கள், தங்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஸ்பெயின் அரசை வீழ்த்த முயற்சித்தார்கள். 80 ஆண்டுகளாகப் போரிட்டு 1648-ல் சுதந்திரம் பெற்றார்கள்.

 நெப்போலியன் காலத்தில் அவருடைய ஆக்ரமிப்புக்குள்ளானது. அவர் தனது சகோதரனை நெதர்லாந்து மன்னராக முடிசூட்டி வைத்தார். 1814-ம் ஆண்டில் அவரிடமிருந்தும் விடுதலை பெற்றது இந்நாடு.

 இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியின் ஆதிக்கத்தின்கீழ் வந்தது நெதர்லாந்து. 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சுதந்திரம் பெற்றது.

 இங்குள்ள மக்கள் சைக்கிள் பிரியர்கள். ஆம்ஸ்டர்டாம், ராட்டர்டாம் போன்ற நகரங்களில் ஏராளமான சைக்கிள்களைப் பார்க்கலாம். நாட்டில் எந்த அளவுக்கு கார்கள் உள்ளனவோ அந்த அளவுக்கும் மேலாக சைக்கிள்கள் உள்ளன.

 நெதர்லாந்து மக்கள் சட்டத்தை மிகவும் மதிப்பவர்கள். இதனால் இங்கு குற்றங்கள் நடைபெறுவது மிகவும் அபூர்வம்.

 உலகிலேயே மிக அதிக அளவு உயரமான மனிதர்களைக் கொண்ட நாடு. சராசரி ஆணின் உயரம்: 6 அடி. பெண்கள் 5 அடி 7 அங்குலம் உயரம் இருப்பார்கள். சரிவிகித உணவும் சத்தான ஆகாரங்களுமே இவர்களின் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்குக் காரணம் என்கிறார்கள். மேலும் சிறந்த மருத்துவ வசதிகளுக்கும் பெயர் பெற்ற நாடு.

 பெருமளவு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்துள்ள நாடுகளில் ஒன்று. இங்குள்ள புராதன கட்டிடங்களுக்காகவும் அழகிய டுலிப் மலர்களுக்காகவும் இங்கு வருவதை சுற்றுலாப் பயணிகள் விரும்புகின்றனர். டுலிப் மலர்கள் பெருமளவில் பிற நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

 டச்சுக்காரர்கள் கால்பந்து ரசிகர்கள்.

 குடியரசாட்சியும் மன்னராட்சியும் கலந்த அரசியலமைப்பைக் கொண்ட நாடு. இன்றும் இங்கு மன்னர் உள்ளார்.

 மக்கள் தொகை: 16,783,092.

 தலைநகரம்: ஆம்ஸ்டர்டாம்.

 மொழி: டச்சு, ஃபிரிசியன்.

 நாணயம்: யூரோ.



 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.