நகம்
ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலம் வரும் என்றாலும் இந்த ஆண்டு வரும் குளிர்காலம் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று பாட்டி சொன்னார். பாட்டியைப் போன்ற அனுபவசாலிகளால் எதிர்கால தட்பவெப்பநிலையைப் பற்றிக் கூற முட


ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலம் வரும் என்றாலும் இந்த ஆண்டு வரும் குளிர்காலம் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று பாட்டி சொன்னார். பாட்டியைப் போன்ற அனுபவசாலிகளால் எதிர்கால தட்பவெப்பநிலையைப் பற்றிக் கூற முடியும். ஆகவே வரப்போகின்ற குளிர் காலத்திற்காக பாட்டியும் பேரனும், ஊருக்கு வெளியே உள்ள காட்டிற்கு விறகு சேகரிக்கச் செல்வார்கள். இரவு நேரத்தில் சாப்பிட்ட பிறகு தூங்கப் போவதற்கு முன்பாக பேரனுக்குப் பாட்டி கதை சொல்வார். அப்படி சொன்ன, நகத்தைப் பற்றிய கதைதான் இது...
வீட்டில் வளர்க்கும் பூனை முதல் காட்டில் வாழும் சிங்கம் வரைக்கும் எல்லா விலங்குகளும் தங்களோட நகங்களை பாதத்திற்குள்ளே மறைத்து வைச்சிருக்கும். அதற்குத் தேவை ஏற்படுகிறபோது, நகத்தை வெளியே நீட்டும். ஆனால் சிறுத்தைகளுக்கு மட்டும் எல்லோரும் பார்க்கிற மாதிரி நகங்கள் வெளியே நீட்டிக் கொண்டுதான் இருக்கும். "இது ஏன் தெரியுமா?' பேரனைப் பார்த்துக் கேட்டார் பாட்டி.
"அது தெரிந்தாதான் நான் உங்களை மாதிரி கதை சொல்வேனே!' என்று சிரித்துக் கொண்டே கூறினான் பேரன்.
பாட்டி கதையை ஆரம்பித்தார்...
ரொம்ப காலத்துக்கு முன்னால ஓடம்போக்கின்னு ஓர் ஆறு இருந்துச்சு. வந்த ஆற்றின் கரையோரத்தில் ஒரு அரச மரம் ஓங்கி வளர்ந்திருந்துச்சு. அங்கே உள்ள மரங்களிலே அந்த அரச மரம்தான் பெரிசு. ரெம்ப காலமாக அரச மரம் அங்கே இருந்ததால அதற்கு அனுபவ அறிவு நிறையவே உண்டு.
அந்த ஓடம்போக்கி ஆற்றின் அருகே சின்னதாய் ஒரு காடு இருந்தது. அந்தக் காட்டின் ஒரு பகுதியில்தான் இந்த அரசமரமும் இருந்தது. அந்தக் காட்டில் உள்ள மரங்கள், மிருகங்கள் எல்லாம் இந்த அரச மரத்தை ஒரு பெரியவராக மதிச்சு நடந்தன. இதனால் அரச மரத்தின் பேரும் புகழும் பரவி நிறையப் பேர், தங்களுடைய பிரச்னைகளை தீர்த்துக்க வருவாங்களாம்.
ஒரு நாள் குடியிருக்க மரத்தைத் தேடி ஆவி ஒன்று ஆத்தங்கரைக்கு வந்தது. அந்த ஆவி ரெம்ப நல்ல ஆவி! அதனாலே தகுதியான மரத்தில்தான் குடியிருக்கும். இந்த ஆவி நேரே நம்ம அரச மரத்திடம் சென்று,"அரசமரமே, அரசமரமே! நான் உன்னோட உடம்புக்குள்ளே இருந்துக்கவா?' என்று கேட்டது.
உடனே அரசமரமும், மிகுந்த சந்தோசத்துடன் ஒத்துக்கொண்டது. ஆவியே ஒரு மரத்தை அடையாளம் கண்டு குடியேறுவது பெருமையான விஷயம் அல்லவா?
சிறிது காலத்திற்கு எல்லாம் நல்லபடியாக நடந்தது. ஆவி தன் சக்தியால் அந்தக் காட்டில் உள்ள எல்லோரையும் சந்தோசமாக வைத்துக் கொண்டது.
அரசமரமும் ஆவிக்குத் தேவையான யோசனைகளைத் தேவைப்படும்போது சொல்லி உதவியது.
அப்புறம் ஒரு நாளில் ஓடம்போக்கி நதிக்கரையில் உள்ள எல்லா தாவரங்களையும் ஒரு மோசமான நோய் தாக்கியது. இந்த நோயினால் கிட்டத்தட்ட எல்லா மரங்களும் செடிகளும் கொடிகளும் அழிஞ்சு போகக்கூடிய அபாயம் வந்துடுச்சு. இதனாலே அந்தக் காட்டில் எங்கே பார்த்தாலும் பட்டினியும் கதறலுமாக இருந்தது.
அரச மரம் ஆவிகிட்டே,"இந்தக் காட்டை எப்படியாவது காப்பாத்து'ன்னு கெஞ்ச ஆரம்பித்தது.
உடனே ஆவி யோசனையில் ஆழ்ந்தது. பல நண்பர்களிடம் கலந்தாலோசித்து, ஒரு யோசனையை காட்டில் வாழும் உயிரினங்களிடம் கூறியது.
"இந்த வியாதியை முறியடிக்க ஒரே ஒரு வழிதான் உண்டு. ஆனால் அது அவ்வளவு சுலபம் கிடையாது. அதற்கு ஒரு வகையான மந்திர மருந்து வேணும்' என்று கூறியது ஆவி.
அப்போது அரசமரம், தன்னுடைய காட்டிற்குள் ஆலோசனைக்கூட்டம் ஒன்றைக் கூட்டியது. அந்த நேரத்தில் "உய்...உய்'என்று காற்று வீசுகிற மாதிரி குரலில் ஆவி பேசியது.
அப்போது நம்முடைய காட்டிலிருந்து ரொம்ப தூரத்திலே குசேல நாடு என்ற பிரதேசத்துல ஒரு மலை இருக்கு. நான் உங்க காட்டிற்கு வருவதற்கு முன்னால் அங்கேதான் இருந்தேன். அந்த மலை உச்சில இருக்கிற ரெண்டு பெரிய பாறைகளுக்கு நடுவிலே ஒரு ராட்சஸ மரம் இருக்குது. அங்கதான் ஆவிகளோட தலைவன் இருக்கிறான். நாம் இங்கே இருந்து அனுப்புற ஆளிடம் அந்த மந்திர மருந்தை எப்படிக் கண்டுபிடிக்கிறது என்று எங்கள் தலைவர் சொல்வார். மந்திர மருந்தை மூன்று நாளுக்குள் கண்டுபிடிச்சுப் பயன்படுத்தனும்.
இல்லேன்னா நம்ம காட்டில் எதுவுமே இல்லாம அழிஞ்சிடும். அதுனால உங்களுக்குள்ள யாரு ரெம்ப வேகமாகப் போய் மருந்தை எடுத்து வரமுடியுமோ அவரை உடனே அனுப்புங்க' என்று சொன்னது ஆவி.
அந்தக் காட்டில் உள்ள எல்லா மிருகங்களும் இதைக் கேட்டு கவலையுடன் ஒடுங்கி உட்கார்ந்தன. கூட்டம் முழுதும் உறுமலும் ஊளையும் கூச்சலுமாக இருந்தது. மந்திர மருந்தை யார் கொண்டு வருவது என்று அங்குள்ள மிருகங்களால் தீர்மானிக்க முடியவில்லை. அப்போது மலைப்பாம்பு ஒன்று "உஸ் உஸ்' என்று பேசியது.
அந்தப் பாம்பு,"நமக்குள்ளே படு வேகமாக போகக்கூடிய ஆள் ஒண்ணு இருக்கு' என்று சிறுத்தை உட்கார்ந்திருந்த இடத்தை நோக்கித் தன் கழுத்தை நீட்டிச் சொல்லியது.
"சிறுத்தையே, ஒன்னால மட்டும்தான் இந்த வேலையைக் குறிப்பிட்ட நேரத்துக்குள்ள முடிக்க முடியும். பாரு தம்பி. நீ நல்ல பலசாலி. ஒண்ணுமே கண்ணுக்கு தெரியாத காட்டுல கூட பாதை கண்டுபிடிச்சு கவனமாப் போறதுல உன்னை அடிச்சுக்க இங்கே ஆளே கிடையாது. என்ன நான் சொல்றது? இங்க எல்லோரும் ஒத்துக்கிட்டாங்கனா நீ தான் கிளம்பிப் போகணும்' என்றது சிங்கம்.
சிங்கம் பேசியது அங்குள்ள எல்லா உயிரினங்களுக்கும் சரியாகப்பட்டது. அதோடு எடுத்த காரியத்தை புத்திசாலித்தனமாக முடிப்பதிலும் சிறுத்தை கெட்டிக்காரன்தான் என்று அங்கு எல்லோரும் சொன்னார்கள். அரசமரமும் தன் சம்மதத்தைத் தெரிவித்து, வாழ்த்துகளையும் சிறுத்தைக்கு தெரிவித்தது.
இதைக் கேட்டவுடன் சிறுத்தையோட பெரிய தங்க நிறக் கண்கள் இரண்டும் சந்தோஷத்தில் ஜொலித்தன. இப்படி ஒரு வேலைக்குத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டது பெரிய மரியாதையான விஷயம் என்று நினைத்தது சிறுத்தை.
அப்போதே அதனுடைய நீளமான வாலும் கால்களும் பரபரவென்று துடிக்க ஆரம்பித்தன. உடனே ஒரு பெரிய பாய்ச்சலோடு காடு, மேடு, பள்ளம் எல்லாவற்றையும் மின்னல் வேகத்தில் தாண்டித் தாண்டி சென்றது சிறுத்தை.
ஆனால், சிறுத்தை செல்ல வேண்டிய தூரம் மிகவும் அதிகமாக இருந்தது. சிறுத்தை சோர்ந்து போனது. ஆனாலும் மனசு தைரியமாக இருந்ததால் தன்னால் முடிந்தவரை வேகமாகச் சென்றது சிறுத்தை.
ஒரு நாள் முழுவதும் ஓடிக் களைத்த பிறகு, கண்ணை நிமிர்த்திப் பார்த்தது சிறுத்தை. அப்போது வெளிர் நீல நிறத்தில் ஒரு மலை தெரிந்தது. அந்த மலையோட உச்சியை உற்று உற்றுப் பார்த்தது சிறுத்தை. அப்போது மலையின் உச்சியில் ஒரு மரம் தென்பட்டது. உடம்பில் தெம்பே இல்லை என்றாலும் மூச்சிரைக்க நடந்து, மலையின் உச்சிக்குப் போய்ச் சேர்ந்தது. மரத்தடிக்குச் சென்றதும் அங்கே விழுந்து வணங்கியது சிறுத்தை.
அப்போது வேகமாகக் காற்று அடிக்கிற மாதிரி ஒரு குரல் பேசியது. "என் அருமை சிறுத்தையே! நீ வந்து சேர்ந்துட்டியே! நல்லது. உங்க அரசமரத்தில் இருக்கிற ஆவி என்கிட்டே ஏற்கெனவே சொல்லிடுச்சு.
அப்புறம் இந்த மலைக்குப் பின்னாலே இருக்கிற அந்த மூலிகையை நீ சேகரிக்கணும். அங்க விழுகிற நீர்வீழ்ச்சியோட அடியிலதான் அந்த மந்திர மருந்து இருக்கு. இந்த மந்திர மருந்துச் செடி புள்ளி புள்ளியாய் இருக்கும்.
ஆனா நீ பறிக்கும்போது, அந்த மருந்துச் செடியின் வேர் உடையாமல் முழுசாகப் பறிக்கணும். வேர் உடைந்தால், அந்த மருந்துக்கு சக்தி இல்லாமல் போய்விடும். அதனால் அந்த மந்திர மருந்தை கவனமாக எடுக்கணும். அதை எடுத்து உங்க காட்டுக்குப் போனா, அங்க அரச மரத்துல இருக்கிற ஆவி மருந்தை எப்படிப் பயன்படுத்தனும் என்று சொல்லும். குட்டையிலே இருக்கிற தண்ணியக் குடிச்சிட்டு புறப்படு. தைரியமா இரு, வெற்றி உனக்கே!' என்று சிறுத்தையை வாழ்த்தியது.
படுத்து இருந்த சிறுத்தை இதைக் கேட்டவுடன், உற்சாகமாகத் துள்ளிக் குதித்து எழுந்தது. காலை நீட்டி மடக்கி சோம்பல் முறித்தது.
குட்டையில் கிடந்த தண்ணீரைத் தாகம் தீரக் குடித்தது. இதனால் சிறுத்தைக்கு கொஞ்சம் தெம்பு வந்தது. அந்த மரத்திற்குப் பின்னால் பெரிய ஆழமான பள்ளத்தாக்கு இருந்தது. அதைப் பார்த்தவுடன் "அடேங்கப்பா!' என்று சிறுத்தைக்கு மலைப்பாக இருந்தது. இவ்வளவு நெட்டுக்குத்தான பள்ளத்தாக்கில் தன்னால் இறங்க முடியுமா? என்ற சந்தேகமும் பயமும் உடம்பு பூராவும் அப்பிக்கொண்டது.
ஆனால் என்ன செய்வது? எப்படியாவது போய்த்தானே ஆகனும்... என்று தனக்குள்ளேயே சமாதானம் சொல்லிக்கொண்டது.
நீர்வீழ்ச்சியின் ஓரமாக, மெள்ள மெள்ள அந்த அடிவாரத்தை நோக்கிப் புறப்பட்டது. பள்ளத்தில் இறங்கியபோது ரெம்ப சரிவாக இருந்ததால சிறுத்தை தன்னோட நகத்தினால் அங்கிருந்த சேற்றையும் மரங்களையும் பிடித்துக் கொண்டு மெதுவாக இறங்கியது.
ஒரு வழியாக அந்த பள்ளத்தாக்கிற்கு சிறுத்தை வந்து சேர்ந்தது.
அப்போது இன்னொரு அரைநாள் கழிந்து விட்டிருந்தது. திரும்பக் காட்டிற்குள் செல்ல இன்னும் அரைநாள்தான் இருந்தது.
இந்த நினைப்பு வந்தவுடன் சிறுத்தை மந்திர மருந்தை வேக வேகமாகத் தேடியது. அப்போது நீர்வீழ்ச்சியின் அடிப்பக்கத்தில் ஓரமாக இருந்த மருந்தைக் கண்டுபிடித்தது. வேகமாக அந்த மந்திர மருந்துச் செடியை பிடுங்கச் சென்றது. அப்போது ஆவியின் தலைவர் சொன்னது ஞாபகம் வந்தது.
அதனால் அந்த செடியைச் சுற்றி இருந்த மண்ணை தன்னூடைய நகத்தால் கொஞ்சம் கொஞ்சமாகத் தோண்டியது. ஆனால் நீண்ட தூரம் பயணம் செய்திருந்ததால் சில நகங்கள் உடைந்து போயிருந்தன. இன்னும் சில நகங்கள் வெடிப்பு விட்டிருந்தன. இதோடு சரிவில் இறங்கியபோது, மீதம் இருந்த நகங்களும் உடைபட்டிருந்தன. அதனால் வலி தாங்க முடியாமல் சிறுத்தையின் கண்களில் நீர் வழிந்தது. மற்ற உயிரினங்களைக் காப்பாற்ற வேண்டி உள்ளதே என்ற நினைப்பால் மறுபடியும் வேலையில் மூழ்கியது.
சுற்றி இருந்த மண்ணை ஒரு வழியாகத் தோண்டி எடுத்தது. பிறகு அந்த மந்திரச் செடியை பத்திரமாக வெளியே எடுத்தது. எடுத்த அந்தச் செடியை வாயில் கவ்விக்கொண்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, படாத பாடுபட்டு அந்தப் பள்ளத்தாக்கை விட்டு மேலே ஏறியது.
சிறுத்தை, தன்னால் எவ்வளவு வேகமாகச் செல்ல முடியுமோ அவ்வளவு வேகமாகச் செல்ல முடிவு எடுத்தது. காட்டு நோயை குறிப்பிட்ட நேரத்திற்குள் முறியடிக்க வேண்டுமே என்ற நினைப்பு வேறு அடிக்கடி வந்து கொண்டிருந்தது.
உடம்பு எல்லாம் சோர்ந்து, நாக்கு வறண்டு, நடக்க முடியாமல் தத்தித் தத்திச் சென்றுஅந்த மந்திர மருந்துச் செடியை அரச மரத்திற்கு முன்னால் வைத்தது.
இதைப் பார்த்தவுடன் காட்டில் உள்ள எல்லா உயிரினங்களும் மகிழ்ச்சியில் கூச்சலிட்டன. இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, "அடுத்து என்ன செய்ய வேண்டும்' என்று அரச மரத்தில் உள்ள ஆவியைக் கேட்டார்கள்.
"இந்த மந்திர மருந்தை நன்றாக மைபோல அரைக்கணும். ஓடம்போக்கி ஆற்றில் ஓடும் சுத்தமான தண்ணீரை எடுத்துக் கலந்து, குடுவைக்குள்ள நிரப்பிக்குங்க. எங்கெல்லாம் நோய் தாக்கியிருக்கோ அங்கெல்லாம் இந்த மந்திர மருந்தைத் தெளிங்க. எல்லாம் சரி ஆகிடும்' என்று மரத்திற்குள் இருந்த ஆவி சொல்லியது.
இதைக் கேட்டவுடன், எல்லா விலங்குகளும் வேகமாக வேலை செய்தன. நோய் இருந்த இடங்களில் எல்லாம், மந்திர மருந்தை கவனமாகத் தெளித்தன. உடனே நோய் காற்றில் கலந்து போய்விட்டது.
இதைப் பார்த்த விலங்குகள் உற்சாகத்தோடு அரச மரத்திடம் வந்தன. "இப்படிப்பட்ட ஒரு வேலையைச் செய்து நம்மை எல்லாம் காப்பாற்றிய சிறுத்தைக்கு ஏதாவது மரியாதை செய்யணும்' என்று அரச மரம் கூறியது.
"இன்று முதல் சிறுத்தை, தன்னுடைய இந்த வீரச்செயலுக்குப் பரிசாக தன்னுடைய நகத்தை எப்போதும் வெளியே காண்பித்தே இருக்கலாம். இனிமேல் நகத்தை மறைக்கத் தேவையில்லை. சிறுத்தைத்தம்பியோட நகத்தை நாம் பார்க்கிறபோது, அவனோட வீரமும் நமக்கு ஞாபகம் வரும்' என்று அரச மரம் யோசனை சொல்லியது.
அரசமரம் சொன்ன இந்த யோசனையை காட்டில் உள்ள விலங்கினங்கள் எல்லாம் ஊளையிட்டு சந்தோஷத்துடன் ஆமோதித்தன.
"அப்படியே ஆகட்டும்'என்று அரசமரத்தில் இருந்த ஆவி சொல்லியது.
இதைக் கேட்டவுடன் சிறுத்தை சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, "உண்மையாக இருக்குமா?'என்று ஒருவித சந்தேகத்தோடு தன் கால்களைக் குனிந்து பார்த்தது.
அப்போது நகமெல்லாம் பாதத்தைவிட்டு அழகாக வளைந்து, வெளியே வந்து புத்தம் புதுசான அருமையான நகங்களாக மாறி இருந்தன!
"அன்றிலிருந்து இன்று வரைக்கும் சிறுத்தையின் நகம் அப்படியேதான் இருக்கிறது' என்றார் பாட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...