touch ஸ்க்ரீன்
வெள்ளை நிற முகம் கொண்ட கபூச்சின் குரங்குகள் மிகவும் நட்பு பாராட்டி ஒன்றுடன் ஒன்று பழகுபவை. இந்தக் குரங்குகள் நதி, நீரோடை போன்ற நீர் நிலைகளில் நனைந்து,


டி.எஸ்.ஆர். வெங்கட்ரமணா
அவனா நீ?
வெள்ளை நிற முகம் கொண்ட கபூச்சின் குரங்குகள் மிகவும் நட்பு பாராட்டி ஒன்றுடன் ஒன்று பழகுபவை. இந்தக் குரங்குகள் நதி, நீரோடை போன்ற நீர் நிலைகளில் நனைந்து, மண்ணில் புரண்டு, உடம்பெல்லாம் சேற்றைப் பூசிக்கொண்டுவிட்டால் இவற்றின் நடத்தை ரொம்பவே வித்தியாமாக மாறிவிடுகின்றது.
இதனால், ஒரு வெள்ளை முக கபூச்சினுக்கு மற்றொரு கபூச்சினை அடையாளம் தெரியாமல் போய்விடும். சற்று நேரம் முன்புவரை, தண்ணீரில் பாய்ந்து, பின்னர் மண்ணில் புரளும் வரையில் நண்பனாக இருந்த குரங்கை அடையாளம் தெரியாமல் இரண்டும் சண்டை போட்டுக் கொள்ளும் அளவுக்குப் போய்விடும்.
இதற்குக் காரணம், முகத்தை மட்டும் வைத்துத்தான் இந்தக் குரங்குகள் அடையாளம் தெரிந்து கொள்கின்றன. முகத்தில் மண்ணும் சேறும் பூசிவிட்டால் சுத்தமாக மாறுவேடமிட்டது போல, முற்றிலும் அடையாளம் மறந்துவிடும்.
முகம் மட்டுமல்லாமல், முகத்தில் காட்டும் உணர்ச்சி மூலமாகவும் பல்வேறு குரங்கு இனங்களைச் சேர்ந்த குரங்குகள் தங்களுக்குள் ஒவ்வொரு குரங்கையும் அடையாளப்படுத்தி வைத்திருக்கின்றன என்று அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பரிணாம உயிரியல் விஞ்ஞானி ஷார்லீன் சான்டானா கூறுகிறார்.
சில குரங்குகளைக் கண்டால் ஐயோ பாவமாக இருக்கும். சில, ஏதோ போக்கிரித்தனம் செய்யத் தயாராக இருப்பது போலத் தோற்றம் அளிக்கின்றன, அல்லவா? பல்வேறு குரங்கு இனங்கள் இடையே முகங்கள் ஏன் இவ்வளவு வித்தியாசமாக இருக்கின்றன என்ற கேள்வி ஷார்லீனை பரவலான ஆராய்ச்சியை மேற்கொள்ளத் தூண்டியது.
குரங்கு இனங்கள் இடையே முகபாவங்களும் அவை ஒன்றுடன் ஒன்று பழகுவதற்கும் முக அமைப்பின் பரிணாமத்துக்கும் தொடர்பு உள்ளதா என்று தீவிரமாக ஆராய்ந்திருக்கிறார் ஷார்லீன்.
இவருடைய ஆராய்ச்சியில் பல ஆச்சரியகரமான விஷயங்கள் தெரிய வந்தன. பெரிய கூட்டமாக வாழும் குரங்கு இனங்களின் முகங்கள் சாதாரணமாக இருந்தன. சிறு எண்ணிக்கையில் கூடி வாழ்ந்த குரங்குகளின் முக அமைப்பு தனித்தன்மை வாய்ந்ததாகத் தோற்றம் கொண்டிருந்தன. பெரிய கூட்டத்தில் வாழும்போது முகபாவங்களுக்கும் உணர்ச்சிகளின் வெளிப்படுத்தலுக்கும் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. சிறு கூட்டத்தில் அடையாளம் கண்டு கொள்வது பெரிய விஷயம் இல்லை. ஒன்றுடன் ஒன்று சுலபமாகக் கூடி, பழகிவிடும்.
மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் வாழும், தனித்தன்மை வாய்ந்த தோல் மற்றும் முடி நிறம் கொண்ட 129 குரங்கு இனங்களை ஆராய்ந்ததில் அடிப்படையாக ஆறு வகை முகபாவ மாறுதல்களைக் காண முடிந்தது.
சிறு கூட்டமாக வாழும் குரங்குகளின் முக அமைப்பு, நிறம் மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது. பெரும்கூட்டமாக வாழுகின்ற குரங்கினங்கள் தங்களின் முகங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்குத் தனியாக முயற்சி எடுக்கின்றன என்பது தெரிய வந்திருக்கிறது.
வழுக்கைத் தலையைக் கொண்டுள்ள உவாக்கரி இனம், 20 முதல் 100 குரங்குகள் கொண்ட கூட்டத்தில் வாழ்கின்றன. முகத்தில் முடி எதுவும் இல்லாமல் சாதாரணமாக இருப்பதால் அதில் உணர்ச்சிகளை அது வெளிப்படுத்துவதன் மூலம் கூட்டத்தில் மற்ற குரங்குகளைக் கவர்ந்து தொடர்பு கொள்கிறது.
பிரேசிலில் வாழும் தங்கச் சிங்க டாமரின் குரங்குகள் சிறு கூட்டமாக வாழ்கின்றன. குளிர் பிரதேசத்தில் வாழ்பவை என்பதால் உடல் முழுவதும் நீண்ட முடியால் போர்த்தியதுபோல உள்ளது. முடியில் முகம் மறைந்திருப்பதால் பிரத்தியேகமான உணர்ச்சிகள் எதையும் முகத்தின் மூலம் வெளிப்படுத்தினால் தெரியாது. ஆனால் குறைந்த எண்ணிக்கை கொண்ட கூட்டத்தில் வாழ்வதால் இந்த இனக் குரங்குகள் இடையே தொடர்பு கொள்ள பெரிய முயற்சிகளை எடுக்கத் தேவையிருப்பதில்லை.
எம்பரர் டாமரின் அல்லது டாமரின் சக்ரவர்த்தியின் தனித் தன்மை அதன் மீசைதான். முகத்தில் எந்த நேரத்திலும் எந்த விதமான உணர்ச்சியையும் இந்த இனக் குரங்கு வெளிப்படுத்துவதில்லையாம். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என்று எல்லா சக்ரவர்த்திகளுக்கும் மீசை உண்டு.
கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் முடி உள்ள கபூச்சினுக்கு தலையில் இரண்டு கொம்பு போன்ற அமைப்பில் குடுமி போல முடி உயர்ந்து நிற்கிறது. கரிய முகத்தைச் சுற்றி வெள்ளை வட்டம் ஒன்று அமைந்துள்ளது. ஒவ்வொரு கூட்டத்திலும் சுமார் 9 குரங்குகள் வாழ்கின்றன. இதன் கூட்டத்தில் ஆண்களை விடப் பெண்கள் எண்ணிக்கை அதிகம். பல வித முகபாவங்கள் மூலம் இவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்கின்றன என்கிறார் ஷார்லீன். அடையாளம் தெரிந்துவிட்டால் ஓர் அலறலுடன் இவை ஒன்றையொன்று அணைத்துக் கொள்ளுமாம்.
வடக்கு ஆந்தைக் குரங்கு என்ற இனக் குரங்கு, அம்மா-அப்பா-குழந்தை என்று குட்டிக் குடும்பத்தோடு வாழ்ந்து வருமாம். இதன் முகம் பல வித உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடியது என்கிறார்கள். அப்போதுதான் ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த நபர்களை, வேறு ஆந்தைக் குரங்கிலிருந்து வித்தியாசப்படுத்தி அடையாளம் கண்டுகொள்ள முடியும் அல்லவா?
வெண்மையான வயிற்றுப் பகுதியைக் கொண்டுள்ள ஸ்பைடர் குரங்கு, 20 குரங்குகள் வரை வாழும் கூட்டமாக வசிக்கின்றன. இவை நடக்கும்போது கை, கால்களைவிட வாலின் பலத்திலேயே ஊன்றி நடக்கின்றன. அத்தனை வலிமையான வால்கள் உள்ள
குரங்கினங்களில் இதுவும் ஒன்று. பலவிதமான முகபாவங்களை இவை வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. மிக நுணுக்கமான விஷயங்களை இதன் மூலம் ஒரு குழுவின் பிற குரங்குகளோடு பகிர்ந்து கொள்ள முடிகிறது.
தென் அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் காணப்படும் இந்த இனத்தின் உட்பிரிவுகள் எல்லாமே போதிய வசிப்பிடம் இன்றி தற்போது அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன என்று ஷார்லீன் சான்டானா கூறுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...