விக்டோரியா மகாராணி சிலை...
இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்டபோது, இந்தியாவில் நிறுவுவதற்காக இங்கிலாந்து மகாராணியான விக்டோரியாவின் 50 உருவச் சிலைகள் இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்டன.


இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்டபோது, இந்தியாவில் நிறுவுவதற்காக இங்கிலாந்து மகாராணியான விக்டோரியாவின் 50 உருவச் சிலைகள் இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்டன. அப்படி நிறுவப்பட்ட சிலைகளில் ஐந்து மட்டும் இன்னமும் அவை நிறுவப்பட்ட இடங்களிலேயே இப்போதும் இருக்கின்றன.
அவற்றில் ஒன்று பெங்களூரு, மகாத்மா காந்தி சாலையில் காந்தி சிலைக்கு எதிராக, கப்பன் பூங்காவின் நுழைவு வாயிலில் உள்ளது. 1906-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி திறக்கப்பட்ட இந்தச் சிலை 107 ஆண்டுகளாக இதே இடத்தில் உள்ளது.
வேல்ஸ் இளவரசர் ஜார்ஜ் ஃப்ரெட்ரிக் எர்னஸ்ட் ஆல்பர்ட் (பின்னாளில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர்) மூன்று மாத காலம் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஆக்ரா, கொல்கத்தா, ரங்கூன் விக்டோரியா மெமோரியல் நினைவிடங்களிலும் சென்னையில் விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிட்யூட்டிலும் (அண்ணா சாலையில் உள்ளது) பெங்களூருவிலும் விக்டோரியா மகாராணியின் சிலைகளைத் திறந்து வைத்தார்.
1876-ஆம் ஆண்டு முதல் இந்தியாவை ஆட்சி செய்த விக்டோரியா 1901-ஆம் ஆண்டு காலமானார். அவரது நினைவாக சிலைகளை அமைக்கக் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.
அதன்படி சிலை நிறுவும் நகரங்களிலேயே பணம் வசூலிக்கத் தீர்மானிக்கப்பட்டது. பெங்களூருவைப் பொறுத்தவரை எதிர்பார்த்த நிதி வசூலாகவில்லை. அதனால் மைசூர் மன்னர் நான்காம் கிருஷ்ணராஜ உடையார் சிலை நிறுவும் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொண்டார்.
சிலைகளை வடிவமைக்கும் பொறுப்பு இங்கிலாந்திலுள்ள புகழ்பெற்ற சிற்பி தாமஸ் ப்ரூக் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர் ஏற்கெனவே லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை முன்புள்ள விக்டோரியா மெமோரியல் நினைவிடத்தில் சிலையை அமைத்
திருந்தார்.
பெங்களூருவில் உள்ள சிலை பீடத்தின் உயரம் 13 அடி. உருவச் சிலையின் உயரம் 11 அடி. இதற்கான மொத்தச் செலவு 25,500 ரூபாயாகும். இங்கிலாந்திலிருந்து கப்பல் மூலம் 1905-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தச் சிலை இந்தியா வந்தது.
இதைத் தொடர்ந்து ஆக்ரா, கான்பூர், லக்னோ மன்னர்களும் விக்டோரியா சிலை அமைக்க, தாமஸ் ப்ரூக்கிடம் ஆர்டர் கொடுத்தனர்.
1890-ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள வொர்செஸ்டர் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட விக்டோரியா மகாராணி சிலையின் மறுபதிப்புகள்தான் இவை.
தாமஸ் ப்ரூக் அவரது வாழ்நாளில் 14 விக்டோரியா சிலைகளை உருவாக்கினாராம். இங்கிலாந்தின் கார்விஸ்லி, ஹோவ், பெல்பாஸ்ட், கேப்டவுன், பிரிஸ்பன், லண்டன் ஆகிய இடங்களில் நிறுவப்பட்ட விக்டோரியா சிலைகளும் பெங்களூருவில் உள்ள சிலையின் அமைப்பும் ஒரே சாயலில் இருக்கும். மற்ற இடங்களில் உள்ள சிலைகள் சற்று மாறுதலாக இருக்கும். பெங்களூருவில் அமைந்துள்ள சிலை வெள்ளைப் பளிங்குக் கல்லில் உருவாக்கப்பட்டது.
சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் சிலையின் வெண்மை நிறம் மங்கியுள்ளது. கைவிரல்களில் இரண்டு உடைந்துள்ளது. ஆங்கிலேயர்களுக்கு இந்தியா அடிமைப்பட்டிருந்ததை நினைவுபடுத்தும் வகையில் இன்னமும் பெங்களூரு நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்தச் சிலை என்றாவது ஒருநாள் அகற்றப்படலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...