டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

யௌவன மயக்கம்

ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாய், அதிகாலை நான்கு மணிக்கு, தூத்துக்குடியிலிருந்து லோடு ஏற்றிக் கொண்டு வந்த லாரி, வாசலில் வந்து நின்று கொண்டு "டுர் டுர்' என்று இரைச்சலிட்டபோது, கோபாலுக்கு முழிப்பு வந்து விட்டது.

News image
Updated On :12 டிசம்பர் 2015, 10:09 am

ஜோதி

ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாய், அதிகாலை நான்கு மணிக்கு, தூத்துக்குடியிலிருந்து லோடு ஏற்றிக் கொண்டு வந்த லாரி, வாசலில் வந்து நின்று கொண்டு "டுர் டுர்' என்று இரைச்சலிட்டபோது, கோபாலுக்கு முழிப்பு வந்து விட்டது. இன்றையப் பொழுது சரியாக விடியவில்லை என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே படுக்கையில் இருந்து எழுந்தான். அதற்குள் சிவசு அண்ணன் எழுந்து, சட்டையை மாட்டிக் கொண்டு வாசலுக்குப் போய்விட்டது. தூத்துக்குடியிலிருந்து, ஜிப்சம் லோடு வந்திருக்கும். இந்தத் தடவை, ஒரு மூட்டைக்குத்தான் பணம் கட்டியதாக அப்பா சொல்லிக் கொண்டு இருந்தார். மூன்று லோடாவது கொண்டு வந்தால்தான், லாரிச் சத்தம், ஏற்றி இறக்குகிற கூலி எல்லாம் கட்டுபடியாகும். ஒரு லோடு கணக்கில் அவ்வளவையும் ஏற்றினால், கையை இறுக்குகிற விஷயம்தான். ஆனால் என்ன செய்ய? சிவசு அண்ணனின் வியாபாரம் சற்று மந்தப்பட்டு வருகிறது. அண்ணனின் அவ்வளவு உழைப்புக்குத் தகுந்த கைவரவு இல்லை. அம்மா சொல்வது போல, அண்ணன் அதிர்ஷ்டக் கட்டையோ என்று கோபாலுக்கும் சந்தேகம் வந்தது.

வாசலுக்கு கோபால் வந்த போது "நச நச' வென்று வானம் மெல்லிசாக அழுது கொண்டிருந்தது. லாரி ஆட்களில் இருவர் முன்னும் பின்னுமாக மூட்டையைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு பின்புறம் இருந்த கட்டிடத்தில் கொண்டு வைத்தனர். அண்ணன் வீட்டுக்குள் போய் அப்பாவிடமிருந்து அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய கூலியை வாங்கிக் கொடுத்து விட்டு வந்தது.

சிவசு அண்ணனுடன், கோபாலும் உள்ளே வந்தான். இரும்புக் கட்டிலில் சாய்ந்திருந்த அப்பா அண்ணனைப் பார்த்து, ""ரொம்ப ஈரமாயிருச்சோ, மூட்டை எல்லாம்?'' என்று கேட்டார். அவன் பதிலை எதிர்பார்க்காமல், ""இன்னிக்கே வேலையை ஆரம்பிக்கலாம்னு பாத்தா, இந்த விளங்காத மழெ வேற வந்து உயிரே எடுக்குறேங்குது. என்னிக்குடா செயலச்சுமிக்காரருக்கு சரக்கு குடுக்கணும்?''என்று கேட்டார்.

அண்ணன் அவர் முகத்தைப் பார்க்காமலே, ""நாளைக்கு'' என்றது.

""விடிஞ்சாப்பிலதான்'' என்று அலுத்துக் கொண்டார் அப்பா. என்னவோ மழை வருவதும், வெய்யில் அடிப்பதும் அண்ணன் கையில் இருப்பது போல. கோபாலுக்கு சற்றுக் கோபம் வந்தது.

இந்த மழையில், கடல் மண் அழுக்குப் போக, ஜிப்சம் பொடிக் கற்களை நீரில் நனைத்து, அலசி, உலர்த்தி முடிப்பது ஆகாத காரியம். உலருவதற்கு நல்ல வெய்யில் வேண்டும். அப்புறம் காய்ந்த பொடிக்கற்களை அடுப்பில் போட்டு வறுக்க வேண்டும். பழுப்பு நிறத்து ஜிப்சம் கற்களை வெள்ளை வெளேரென்ற நிறத்துக்குக் கொண்டு வர, சிவப்பும், நீலமுமாய் கோட்டை அடுப்பில் பளீரென்று எரியும் தீயின் உக்கிரம் தேவை. ஆள் உயரத்துக்கு எழுந்து சீறும் நெருப்பின் சூடு தோலைப் பொசுக்கி விடும். ஆனால் ஒற்றை ஆளாக சிவசு அண்ணன்தான், அடுப்பின் முன் நின்று, நாலுக்கு ரெண்டு வாணலியை அடுப்பில் ஏற்றி, பெரியமுறத்தால் ஓர் இருபது தடவை, மூட்டையிலிருந்து ஜிப்சத்தை அள்ளி வாணலியில் போடும். ஐந்து நிமிஷத்துக்கு ஒரு தடவை, பெரிய இரும்புக் கரண்டியால், அடுப்பில் உள்ள கற்களை புரட்டிப் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். நல்ல வெயில் நாள்களில், இரண்டு மணி, மூன்று மணி நேரம் வேலை வாட்டி எடுத்து விடும். மழை நாளிலோ, கேட்கவே வேண்டாம். இரு மடங்கு நேரம் ஆகி விடும்.

"" ரெடியா இருக்குற சாக்பீûஸ பெட்டில அடுக்கி பேக்கிங் பண்ணினா பாதி ஆர்டரை நாளைக்கு குடுத்திரலாம்'' என்றது சிவசு அண்ணன்.

""அவ்வளவுதானே? ரவைக்கு உக்காந்து முடிச்சிரலாம்'' என்றான் கோபால். முதுகைப் பிளக்கும் வேலைதான் அது. இருந்தாலும், சிவசு அண்ணனுக்குச் செய்யாமல் அவன் எதற்கு இருக்கிறான்?

""ஆமா, நீ ஊர ரவுண்டு அடிச்சிட்டு, ஒம்பது மணிக்கு வந்து சாப்பிட்டு விட்டு தூங்கப் போகாம இருந்தா சரி'' என்றார் அப்பா சிரித்தபடி.

பிறகு, ""கோவிச்சுக்காதே. சும்மா சொன்னேன். உங்க அண்ணனுக்காகத்தான் நீ உயிரையே குடுப்பியே'' என்றார்.

இதெல்லாம் அப்பாவுக்கு நன்றாகத் தெரிந்த விஷயங்கள்.

என்றாலும், சிவசு அண்ணன் என்றால் அவருக்கு இளக்காரம். குட்டிக் கொண்டே இருப்பார். கோபால் மீது அப்பாவுக்கு இருக்கும் பிரியம், பெரியவன் மீது இல்லை என்று அம்மா குற்றம்சாட்டும்போதெல்லாம் அவர், கோபாலைப் பார்த்துக் கண்ணடிப்பார். அண்ணனுக்கு மறதி ஜாஸ்தி. அது அவன் வாங்கி வந்த வரம் என்று அம்மா வக்காலத்துக்கு வருவாள். அவளுக்கு சிவசு மீது கொள்ளைப் பிரியம். நன்றாகப் படிக்கவில்லை என்றுதான் அப்பாவுக்கு சிவசு அண்ணன் மீது குறை என்று கோபால் தெரிந்து வைத்திருந்தான். மறதியின்காரணமாகத்தான் அண்ணனால் ஆறாம் வகுப்பைக் கூடத் தாண்ட முடியவில்லை. அதனால்தான், அப்பா முதலில் வேலைக்குச் சேர்த்து விட்டார். அதன் பிறகு, ஒரு பாக்டரியை அண்ணன் பெயரில் ஆரம்பித்து வைத்தார். கோபால் படிப்பில் கெட்டிக்காரன். இருந்தாலும், சிவசு அண்ணன் மாதிரி, அவனுக்கு ""கடை, கண்ணிக்குப் போகத் தெரியுமா, புளிக் குழம்பும், கத்திரிக்காய் வதக்கலும் செய்யத் தெரியுமா?'' என்று அம்மா சண்டைக்கு வரும் போது, அப்பா தினமணியில் முகத்தைப் புதைத்துக் கொள்வார்.

அண்ணனும், அம்மாவிடம் பேசும் அளவுக்கு அப்பாவிடம் வைத்துக் கொண்டதில்லை. கேட்ட கேள்விக்கு பதில். மறதி காரணமாக, செய்ய வேண்டியது எதையாவது செய்யாமல் சிவசு அண்ணன் விட்டு விடும். சில சமயம், வசூல் கணக்கை ஒப்புவிக்கையில், கணக்கு தகராறு பண்ணும். அப்போதெல்லாம் அப்பாவின் கோபத்தை யாரும் தடுக்க முடியாது. சிவசு அண்ணன் பேசாமல் நின்று கொண்டே இருக்கும். அப்பா அந்தப் பக்கம் நகர்ந்து போன பின்பு, இவன் அண்ணனிடம் கேட்பான், ""எதற்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு நிற்க வேண்டும்?'' என்று.

""திட்டறது யாரு, நம்ம அப்பாதானே, நானும் சரியில்லைதானே?'' என்று லேசான சிரிப்புடன் சொல்லும். சிவசு அண்ணனுக்கு கோபம் வந்து கோபால் பார்த்ததில்லை. சிவசு அண்ணனுக்கு கோபால் என்றால் உயிர். தினமும், மாலையில் சைக்கிளில், சாக்பீஸ் அடுக்கிய பெட்டிகளை டெலிவரி கொடுக்க எடுத்துச் சென்று விட்டு திரும்ப வீட்டுக்கு வரும்போது, மறக்காமல், தின்பதற்கு ஏதாவது ஒரு பண்டத்தை வாங்கி வராமல் இருக்காது.

கோபால் அவ்வப் போது நினைத்துக் கொள்வான். படித்து முடித்து நல்ல வேலையில் சேர்ந்த பின், வரும் பணத்தில், அண்ணன் பிசினஸ்சை மேலேற்றி விட வேண்டும். இப்படி ஒற்றை ஆளாய் எல்லா வேலையையும் "மாங்கு மாங்கு' என்று செய்ய விடக் கூடாது. அடுப்பு வேலைக்கென்று ஒரு தனி ஆளைப் போட்டு விட வேண்டியதுதான். அதே போல, இப்போது குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும், வாரத்தில், பாதி நாள்கள், மாலையிலும், இரவிலும், முதுகு ஒடிய உட்கார்ந்து, பெட்டிகளில், சாக்பீசுகளை அடுக்கும் வேலையை, சிறிய வயசுக்காரர்களைக் கூலிக்கு அமர்த்தி செய்து விட வேண்டும். அம்மா சொல்வது போல, சிவசு அண்ணனின் தொழில் கொஞ்சம் முன்னேறினால், ஒரு கலியாணத்தை பண்ணிப் பார்த்துடலாம்.

கோபால் குளித்துவிட்டு, சாப்பிட வரும்போது, சிவசு அண்ணன் கண்ணில் படவில்லை. அவன் கண் சுழற்சியைப் பார்த்து அம்மா, ""அவன் பைக்காராலேர்ந்து மணிவேலை கூட்டிகிட்டு வரேன்னு போயிருக்கான். மோல்டுகள்ளாம், மரக்கட்டை குழிக்குள்ள சரியா பதிய மாட்டேங்குதாமே'' என்றாள். நன்றாக வறுத்தெடுக்கப் பட்ட ஜிப்சம், பாரிஸ் சாந்தாக மாறிய பின், சைனா களிமண்ணைச் சேர்த்து நீரில் நன்றாகக் கரைத்துக் குழைக்க வேண்டும். அதன் பின் கிடைக்கும் சாக் வெண்மைத் திரவத்தை, பதம் பார்த்து பித்தளை மோல்டில் ஊற்ற வேண்டும். எழுபத்தி இரண்டு குழிகள் அடங்கிய ஒவ்வொரு மோல்டும், சாக் மாவு ஊற்றிய பின், ஆடாமல், அசையாமல் இருக்க, மோல்டை மரக் கட்டையால் செய்யப்பட்ட ஃபிரேமில் அடக்கி வைக்க வேண்டும். அந்த ஃபிரேம்களில் சிலது கெட்டுப் போய்விட்டன. அதைச் சரி பண்ண மணிவேல் ஆசாரியைக் கூப்பிட அண்ணன் போயிருக்கிறது.

அவன் பலகாரத்தைச் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தான். வாசலிலும், தெருவிலும், ஆள் நடமாட்டத்தைக் காணோம். இந்த பிசுநாறி மழையிலே எங்கே போக? அவனும் வீட்டுக்கு உள்ளே போகத் திரும்பின சமயம், எதிர் வீட்டு வாசலில் மல்லிகா வந்து நிற்பதைப் பார்த்தான். அவன் வந்து நிற்பதைப் பார்த்துத் தான் அவள் வந்திருக்க வேண்டும். அவன் பார்வை அவள் மீது பட்டதும், அவனைப் பார்த்துச் சிரித்தாள். தெருவைக் கடந்து, அவன் அருகே வந்தாள்.

""இன்னிக்கு கிரிக்கெட்டு பிராக்டிசுல மண்ணு விழுந்திருச்சா?'' என்று சிரித்தாள்.

""உனக்கு சந்தோசம்தானே?'' என்றான் கோபால்.

""எனக்கு என்ன? தலைக்கு மேல வேலை இருக்கு''.

"" ஓ, அதான் இங்க வந்து நின்னுகிட்டு வேலை பாக்கிறியாக்கும்'' என்று சிரித்தான்.

"" சரி, உனக்கு பிடிக்கலையா? நான் போறன்'' என்று திரும்பினாள்.

இரண்டு தப்படி எடுத்து வைத்தவளை, "" ஏய், ஏய் நில்லு'' என்றான். நின்று விட்டாள்.

""அப்பா, ஆட்டி எடுக்குறியே'' என்றான்.

அவள் அவனைப் பார்த்துச் சிரித்தாள். அதில் விகசித்த கனிவு, அவனைத் தொட்டது. அவன் நிற்கச் சொல்லியிருக்க விட்டாலும், அவள் போயிருக்க மாட்டாள் என்று அவனுக்கும் தெரியும், அவளுக்கும் தெரியும்.

""நாளைக்கி, நானு காலேஜுக்கு லீவு'' என்றாள் மல்லிகா.

"" எதுக்கு?''

"" என் ஃபிரண்டு மனோன்மணி இருக்கால்ல, அவளுக்கு கலியாணம்''

""உனக்கு எப்ப?'' என்று கேட்டான், குறும்பாக

அவள் வெடித்தாள்.

""உனக்கு ஆகறப்பதான்''

""நானு இப்ப கட்டிகிறதா இல்ல''

""என்ன வாசல்ல நின்னு கிட்டு கலியாண பேச்சு நடக்குது}பெரிய மனுசங்க ரெண்டு பேருகிட்டயும்'' என்று சிரித்தபடி அங்கே வந்தாள் கோபாலின் அம்மா.

"" இல்ல அத்தே. சும்மா இது வம்புக்கு இழுத்துக்கிட்டு இருக்கு'' என்று நாணினாள் மல்லிகா.

"" உள்ள போய் உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கறதுதானே, எதுக்கு இந்த நசநசப்பிலே நின்னுகிட்டு... தடுமம் பிடிச்சிதுன்னாக்க விடவே விடாது. நானு மளிகை கடைவரைக்கும் போயிட்டு வாரன்'' என்று கையில் வைத்திருந்த குடையைப் பிரித்தபடி தெருவில் இறங்கினாள்.

"" நானு போயி வாங்கியாந்துறட்டா அத்தே?'' என்று மல்லிகா கேட்டாள்.

அவள், ""வேண்டாம்'' என்று தலையை அசைத்தபடி நடந்து போனாள்.

அவர்கள் இரு குடும்பத்துக்கும் இருபது வருஷப் பழக்கம். ஒரே தெருவில் குடியிருப்பு. கோபால் பாதி நேரம் மல்லிகா வீட்டில்தான் வளர்ந்தான். கோபாலின் தாயும், மல்லிகா மீது பாசத்தைப் பொழிந்து கொண்டு இருப்பாள். மல்லிகா இஞ்சினியரிங் முதல் வருஷம் படிக்கிறாள். படிப்பில் கெட்டிக்காரி.

அவர்கள் இருவரும் வீட்டுக்குள் சென்றார்கள். நடு வீட்டில் உட்கார்ந்திருந்த அப்பா அவளைப் பார்த்து, ""மல்லிகாவா? எங்க ஆளையே காணம்?'' என்று கேட்டார்.

""என்ன மாமா, முந்தா நேத்து ரவைக்கு இங்க வந்திருந்தேன்ல'' என்றாள் மல்லிகா.

"" ரெண்டு நாள் ஆயிடிச்சே?'' என்று சிரித்தார்.

""ஒரு காபி போட்டுத் தர்றியா? உங்கத்தே போயிட்டு வந்து போடறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டா.''

""நானு போட்டு தாறன்'' என்று மல்லிகா உள்ளே சென்றாள்.

""எனக்கும் காபி'' என்றபடி கோபால் அவள் பின்னால் சென்றான்.

அவள் அடுப்பை மூட்டி, பாலை ஏனத்தில் விட்டு அடுப்பு மீது வைத்தாள். அவன் அவள் பின்னால் போய் நின்று கழுத்தருகே முகர்ந்து விட்டு, ""அப்பாடா, என்ன வாசனை?'' என்று மூச்சு விட்டான். அவள் ""சே, சும்மாயிரு'' என்று சிரித்துக் கொண்டே அவன் பக்கம் திரும்பி, அவனைத் தள்ளி விட்டாள்.

""யாராச்சும் வரப் போறாங்க'' என்று செல்லமாக அவனை அதட்டினாள்.

""யாரு இருக்காங்க, இப்ப?''என்று நெருங்கி வந்து, அவள் கையைப் பிடித்துக் கொண்டான். அவள் உதற முயலவில்லை. சில விநாடிகள் அவர்களின் நெருக்கத்தில் மூச்சு விட்டன.

அப்போது நடுவீட்டுக்குள்ளிருந்து டெலிபோன் அடித்தது.

""கோபாலு, யாருன்னு பாருடா''என்ற அப்பாவின் குரலைக் கேட்டு, கோபால் விலகி, வெளியே வந்தான்.

போனை எடுத்தான். சிவசு அண்ணன்தான்.

""சொல்லுங்கண்ணே''என்றான்.

""கோபாலு, நா இங்க மணிவேலு அண்ணன் கடையில இருக்கன். போன தடவ பிரேம் போடேல, நாலஞ்சு டிராயிங் பண்ணி வச்சிருந்திச்சு. அதை எடுத்திட்டு வர மறந்து போச்சு. இப்ப கடப் பையன அனுப்பறன். அதுக்குள்ளார, நீ பாக்டரிக்கு போயி, பீரோவ ஓபன் பண்ணி மேல்தட்டுல ரெட் கலர் பையில் ஒண்ணு இருக்கில்ல. அதில அந்த டிராயிங்கு இருக்கு. பாத்து எடுத்து குடுத்தனுப்பறியா?'' அவன் பதிலை எதிர்பாராமல் சிவசு அண்ணன் போனைக் கீழே வைத்து விட்டது.

மல்லிகா காபி எடுத்துக் கொண்டு வந்து அப்பாவிடம் ஒரு கப்பும், அவனிடம் ஒரு கப்பும் கொடுத்தாள். காபி சுவையாக இருந்தது. அப்பா அவளைப் பாராட்டிக் கொண்டே குடித்தார். அவன் அண்ணன் பேசியதை இருவரிடமும் சொல்லி விட்டு பாக்டரி சாவியை எடுத்துக் கொண்டு, வெளியே சென்றான்.

வீட்டுக்குப் பின்புறம்தான் பாக்டரி இருந்தது. கொண்டு உள்ளே போனதும், குப்பென்று, மரத்தூள் மணம் நாசியைத் தாக்கிற்று. மரத்தூள் அடங்கிய மூன்று மூட்டைகள் காலில் இடறின. வழக்கமாக, அவை பாக்டரி வாசலில், வெயிலின் உஷ்ணத்தை வாங்கிக் கொண்டு கிடக்கும். மழை என்பதால் உள்ளே போட்டிருக்க வேண்டும். கார்டு போர்டு டப்பாவில் தலையும், வாலுமாய் மாற்றி மாற்றி சாக்பீசுகளை அடுக்கி விட்ட பின், அவை ஒன்று மேல் ஒன்று பட்டு உடைந்து போகாமல் இருக்க, அவற்றின் இடைவெளிகளில், மரத்தூளை தெளித்து விடுவார்கள்.

அவன் அவற்றைத் தாண்டிக் கொண்டு பீரோ அருகே சென்றான். திறந்து மேல்தட்டில் இருந்த சிகப்புக் கலர் ஃபைலை உருவினான். எடுத்த வேகத்தில், வேறு சில புத்தகங்களும், ஃபைல்களும், வெளியே வந்து விழுந்தன. கோபால், திட்டிக் கொண்டே, குனிந்து அவற்றை எடுத்து மேல் தட்டில் வைத்தான். அப்போது, கையில் மென்மையாக ஏதோ இடறியது. ஆச்சரியத்துடன், அவன் கையை நன்றாக உள்ளே விட்டு எடுத்த போது, ஒரு நீலமும், சிவப்புமாக, ஒரு பை வந்தது.

இதுவரை பார்த்திராத, அந்தப் பையை கோபால் திறந்தான். உள்ளே இருந்த பொருட்களை வெளியே எடுத்தான். நான்காக மடிக்கப் பட்ட ஆர்ட் பேப்பர் தாள் ஒன்று, மஞ்சளும் கறுப்பும் கலந்த நிறத்தில் சில வளையல்கள், ரோஜா வடிவத்தில், தலையில் செருகிக் கொள்ளும் பின் ஒன்று.... கோபால் வியப்புடன் அவற்றைப் பார்த்தபடி மடிக்கப்பட்டிருந்த தாளைப் பிரித்தான். பார்த்ததும், மூச்சு நின்று விடும் போலிருந்தது.

அந்த பேப்பரில், மல்லிகா சிரித்துக் கொண்டிருந்தாள். கீழே அவள் பெயரும், படிக்கும் வகுப்பின் விவரமும் அச்சிடப்பட்டிருந்தன. இது சிவசு அண்ணன் கையில் எப்படி வந்தது? போன வருஷம் மல்லிகாவின் கல்லூரி ஆண்டு மலரில் வந்த படம். அதைப் பெருமையாக அவர்கள் வீட்டில் கொண்டு வந்து மல்லிகா எல்லாரிடமும் காண்பித்தாள். அப்பாதான் அதைப் படித்து விட்டுத் தருவதாக, இரண்டு நாள்கள் வைத்திருந்தார். அதைத் திருப்பிக் கொடுத்த மறுநாள், மல்லிகா அவனைத் தனியாகப் பார்த்து, ""எங்க என்னோட படம் எதுக்காக அத கிழிச்சு எடுத்திருக்கே?'' என்று சண்டை போட்டது இப்போது கோபாலுக்கு நினைவுக்கு வந்தது. அதை சத்தியமாக, தான் எடுக்கவில்லை என்று அவன் திரும்பத் திரும்பக் கூறியும்,அவள் நம்பவே இல்லை. அது எங்கே இங்கே அண்ணனிடம் வந்தது? அப்படியென்றால்... மற்ற பொருட்களையும் அவன் எடுத்துப் பார்த்தான். அவற்றையும் மல்லிகாவிடம் பார்த்ததாகத்தான் தோன்றியது.

அவனுக்கு ஒரு கணம் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. புரிந்த பின், தலையைச் சுற்றுவது போல் இருந்தது.

சிவசு அண்ணனுக்கு மல்லிகா மீது.... அவனுக்கு நினைவு செல்லும் பாதை பிடிக்கவில்லை. இவ்வளவு நாள்கள் எப்படி யார் கண்ணுக்கும் படாமல் போயிற்று அல்லது நான்தான் அண்ணன் மீது இருக்கும், மரியாதையில், பிரேமையில், பாசத்தில் கவனிக்கத் தவறி விட்டேனா? மல்லிகாவுக்கும் அண்ணன் மீது...?

அவன் சட்டென்று அந்த எண்ணத்தைத் தூக்கி எறிந்தான். அவளுக்கே இது தெரியாமல் இருக்க வேண்டும். அவள் தன் மீது உயிரை வைத்திருக்கிறாள் என்பதில் கோபாலுக்கு சந்தேகம் எதுவும் கிடையாது. அவர்கள் இருவரும் நெருங்கிப் பழகுவதில் இரு குடும்பத்துக்கும் ஒரு விதமான மறைமுக ஒப்புதல் இருந்தது. இது எப்படி சிவசு அண்ணனுக்குப் புரியாமல் போயிற்று?

அதற்குப் பிறகு, அண்ணன் அனுப்பிய ஆளிடம் அனுப்ப வேண்டியவற்றைத் தந்து விட்டு அவன் வீட்டை விட்டு வெளியே வந்து நடந்தான். தண்டல்காரன் பட்டிக்குத் திரும்பும் சாலையைக் கடந்து, கல்லுப் பிள்ளையார் சோலைக்குள் புகுந்து, அங்கே கிடந்த கல்படுக்கை ஒன்றில் சாய்ந்து கொண்டான். பட்சிகளின் சப்தம் தவிர, ஆள் நடமாட்டமின்றி இருந்த சூழ்நிலை மனதுக்கு இதமாக இருந்தது.வீட்டில் இருந்தால், முகமே காட்டிக் கொடுத்து விடும், மனதில் பட்ட அடியின் வலி பொறுக்க முடியாமல் இருப்பதை. மல்லிகா பார்த்து விட்டால், உண்மையை வரவழைத்து விடுவாள். அவளிடமிருந்து தப்பிக்க முடியாது.

சிவசு அண்ணனைப் பழைய மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு இப்போது தன்னால் பார்க்க முடியுமா? என்று கோபால் நினைத்தான். தன் மீது உயிரை வைத்திருக்கும் அண்ணனை, இப்போது நினைவுக்குக் கொண்டு வரும் போது, மனதைப் பாரம் அழுத்துகிறது. எவ்வளவோ பெண்கள் இருக்க, உங்களுக்கு இவள்தானா கிடைத்தாள்? படிப்பில் எவ்வளவு வித்தியாசம்? வயதிலும் எவ்வளவு வேறுபாடு? இதையெல்லாம் யோசிக்காமல் கண்மூடித்தனமான ஒருதலைக் காதலா? உங்களைச் சுற்றி இருக்கும் அவ்வளவு பேரும் என்னையும், அவளையும் இணைத்துப் பேசுவதை உங்கள் செவிகள் ஒரு முறை கூடக் கேட்டதில்லையா? நாங்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதையும், பேசிக் கொள்வதையும், சிரித்துக் கொள்வதையும் பார்க்காத அல்லது பார்த்தும் புரிந்து கொள்ளாத நிர்மூடமாக ஆகி விட்டீர்களா நீங்கள்?

அவன் சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்டான்.

"என்ன இது, நானா சிவசு அண்ணனைத் திட்டுகிற அளவுக்குப் போய் விட்டேன்? எனக்கு என்ன ஆகி விட்டது? மல்லிகாவின் மீது எனக்கு இருக்கும் காதல், இந்த விஷத்தைக் கக்குகிறதா? என்மேல் அண்ணனுக்கு உயிர், அண்ணன் மேல் எனக்கு உயிர் என்றெல்லாம் நினைத்த மனமா, இப்படி ஓர் அருவெறுக்கத்தக்க நிலையை அடைந்து விட்டது' . கோபால் தலையை உலுக்கிக் கொண்டான். மனது சமநிலைக்கு வரமாட்டேன் என்றது. அண்ணனை நினைத்தால் பரிதாபமாக இருந்தது. இம்மாதிரி தனக்கு ஓர் ஆசை இருக்கிறது என்பதைக் கூட யாரிடமும் காட்டிக் கொள்ளாத மனிதனாக சிவசு அண்ணனால் எப்படி இருக்க முடிந்திருக்கிறது?

கோபால் எழுந்து உட்கார்ந்து கொண்டான். சற்றுக் கழித்து, மறுபடியும் படுத்துக் கொண்டான் எழுந்து நடந்தான்

மனம் அலை பாய்ந்தது. பசி எடுத்தது. இவ்வளவு நேரமாய் ஆளைக்காணோமே என்று, யாராவது, யாராவது என்ன, சிவசு அண்ணனே தேடிக் கொண்டு வந்து விடும். அவன் வேறு வழியின்றி தோட்டத்திலிருந்து வெளியே வந்து வீட்டைப் பார்க்க நடந்தான். வீட்டில் இன்னும் அண்ணன் வரவில்லை என்று தெரிந்தது. எதிர்ப்பட்ட தாயிடம், ""வயிறு சரியில்லை'' என்று தனது அறைக்குள் சென்று படுத்துக் கொண்டான்.மன உளைச்சலும், உடம்பு அலுப்பும் தாக்கினாலும், தூங்க முடியவில்லை.

திடீரென்று அவனுக்குத் தோன்றிற்று. அண்ணன் மனதில் குடியிருப்பவளை, அவனால் கைப்பிடித்து வீட்டிற்குள் கூட்டிக் கொண்டு வருவது சாத்தியமில்லை. மல்லிகா சிவசு அண்ணனை விரும்பி மணப்பது என்பது, கனவிலும் நடக்காத காரியம். இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஒரே ஒரு முடிவுதான் சாத்தியமானது. அவன் மல்லிகாவிடமிருந்து விலகி விட வேண்டும். இந்த நினைவே அவனைக் கொன்று விடும் போலான வலியைத் தந்தது. ஆனால் வேறு வழியில்லை. இதுதான், அவன் அண்ணன் மேல் வைத்திருக்கும் மரியாதைக்குச் செய்யும் மரியாதை.

அன்றும், அதற்குப் பின் வந்த சில நாட்களிலும், அவன் மல்லிகாவின் கண்ணில் படாமல் இருக்க முயன்றான். இரண்டு மூன்று நாள்கள் இரவில் வெகு நேரம் கழித்து வீட்டுக்கு வந்து, விடிகாலையில், வெளியே போய் விட்டான். இன்னும் சில நாள்கள், வகுப்புத் தோழனுடன், அவனுடைய ஹாஸ்டல் அறையில் படிக்கிறேன் என்று தங்கி விட்டான். மல்லிகா அவனைத்தேடிக் கொண்டு தினமும் வந்ததாக, அம்மாவும் அப்பாவும் மாற்றி மாற்றிச் சொன்னார்கள். அவன் படிப்பின் மேல் பழியைப் போட்டு தப்பித்துக் கொண்டிருந்தான்.

கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்குப் பின் வேறு போக்கிடம் இல்லாமல், வீட்டுக்கு வரவேண்டியதாயிற்று. இருட்டு நன்றாகப் பரவியதும், அவன் தெருவுக்குள் நுழைந்து வீட்டைப் பார்க்க நடந்து வந்தான். சற்றுத் தொலைவில் இருந்தே, மல்லிகா வீட்டைப் பார்த்தான். கதவு சார்த்தியிருந்தது. நல்லவேளை, யார் கண்ணிலும் படாமல் தப்பித்தாயிற்று என்று வேகமாக வீட்டுக்குள் நுழைந்தான்.

""இதோ அவனே வந்தாச்சு'' என்று அம்மாவின் குரல் கேட்டது. பக்கத்தில் மல்லிகா.

""டேய் கோபாலு, இவ வீட்டிலே லைட்டு எரிய மாட்டேங்குதாம். பொம்பளப் புள்ளே தனியா இருட்டுல எப்படி இருக்கறதாம்? நாளைக்கு பரீச்செ வேறயாம்'' என்று அம்மா பேசிக்கொண்டிருக்க, மல்லிகா, அவனை எரித்து விடுவது போல் பார்ப்பதை அவன் கவனித்தான். வேறு வழியின்றி, ஒரு மெழுகு வர்த்தித் துண்டையும், தீப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு, மல்லிகாவைப் பின் தொடர்ந்தான்.

அவள் வீட்டுக் கதவைத் திறந்து, உள்ளே சென்றாள், அவனிடம் ஒரு வார்த்தையும் பேசாது. அவன் மெயின் சுவிட்ச் இருக்கும் இடத்துக்குச் சென்று மெழுகுவர்த்தியை ஏற்றினான். வெளிச்சத்தில் சுவிட்ச் போர்டைத் திறந்து, கனெக்ஷன் சரியாக இருக்கிறதா என்று பார்த்தான். ஒரு வயர் பிய்ந்து கிடந்தது.

அவன் மல்லிகா கண்ணில் படுகிறாளா? என்று பார்த்தான். அவள் இருட்டுக்குள் இருந்து வெளியே வந்தாள். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அழகாக இருந்தாள். கோபால் கண்களைத் தாழ்த்திக் கொண்டான்.

""அடேயப்பா, எப்பேர்ந்து இப்பிடி புது மனுசனா ஆயிட்டே?'' என்று அவனைப் பார்த்துக் கடுமையான குரலில் கேட்டாள்.

"" வயர் அறுந்து கிடக்கு'' என்றான் அவன்.

""நானே அறுந்து கிடக்கன்.. உன் மனசில என்ன நெனச்சுக்கிட்டு இப்படி பண்ணறே?'' என்று கோபமாய்க் கேட்டாள்.

""ஆளையே ஒரு வாரமா காணோம். என் முகத்துலேயே முளிக்கக் கூடாதுன்னு இருக்கியா? நான் என்ன தப்பு செஞ்சேன்?'' அவள் குரல் உடைந்து, விசும்பினாள்.

அவனுக்கு கை பரபரத்தது, அவள் கண்களைத் துடைத்து விடவேண்டும், ஆறுதலாய்ப் பேச வேண்டும் என்று..

ஆனால், மந்திரத்துக்குக் கட்டுப் பட்டது போன்று, அசையாமல் நின்றான்.

""இத பாரு, என்கிட்டே இதெல்லாம் வச்சுக்காத. உனக்கு மனசுல என்ன இருந்தாலும், வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு, பேசிப் போடு. இப்பிடி, ஒளியிறது, ஓடுறது, கண்ணா மூச்சி ஆட்டம் ஆடுறது எல்லாம் வேண்டாம்''என்றாள் மல்லிகா, திடமான குரலில்.

""அவன் நான் போயி வயரு எடுத்துட்டு வாறன். இல்லாட்டா லைட்டு வராது'' என்று நகர்ந்தான்.

அவன் முற்றிலும் எதிர்பாராதவாறு, அவள் அவனருகே வந்து அவன் கையிலிருந்த மெழுகு வர்த்தியை பலமாக வாயால் ஊதினாள். கும்மென்று அவ்விடத்தை இருட்டு சூழ்ந்தது. அவள் அவனை இரு கைகளாலும், வளைத்துப் பிடித்து இறுக அணைத்தாள். "அப்பா, என்ன வலு? என்ன இறுக்கம்? மென்மையான அவள் உடலில் இருந்து எழுந்த வெப்பம் அவனைச் செயலிழக்கச் செய்தது. ஒரு வாரமாக மனதைப் பிசைந்து கொண்டிருந்த எண்ணங்கள் அந்த சூட்டில் இளகி மறைந்தன. சிவசு அண்ணனின் ஞாபகம் வந்தது. ஆனால் அவளது மென்மையான கழுத்தில் அவன் உதடுகள் இறுக்கமாகப் பதிந்த போது அண்ணனின் முகம் கலங்கலாக வந்து மறைந்து போனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.