கதைப்பாடல்
அரை பவுன் மோதிரம் விரலினிலேஅழகாய் வாங்கிப் போட்டுக்கணும்கரடியின் ஆசை! சேர்த்த பணம்கையில் இருந்ததோ பத்தாயிரம்!


அரை பவுன் மோதிரம் விரலினிலே
அழகாய் வாங்கிப் போட்டுக்கணும்
கரடியின் ஆசை! சேர்த்த பணம்
கையில் இருந்ததோ பத்தாயிரம்!
"எடையில் சற்றே குறைத்தேனும்
இருக்கும் பணத்தில் வாங்கிடலாம்
கடைக்குப் போவோம்' என்றெண்ணி
கரடி நடந்து போனதுவாம்!
""அண்ணா!... என்ற குரல் கேட்டு
அங்கே பார்த்ததாம் கரடியுமே!
கொன்றை மரத்தின் பின்இருந்து
குள்ள நரியும் வந்ததுவாம்!
""கரடி அண்ணா!... என்தம்பி
காலையில் மயங்கி விழுந்திட்டான்!
மருத்துவ மனையில் சேர்த்துள்ளேன்
மருந்து வாங்கிடப் பணம் வேண்டும்!
ஒரு பவுன் மோதிரம் இருக்கிறது
உடனே எனக்குப் பணம் தேவை
இருபது ஆயிரம் தயவுடனே
எனக்கு நீங்கள் கொடுத்திடுங்கள்!''
என்றே சொல்லி குள்ளநரி
எடுத்ததாம் அந்த மோதிரத்தை!
கண்ணைப் பறித்திடும் பளபளப்பில்
காட்டிய மோதிரம் இருந்ததுவாம்!
""தம்பி, நரியா!... அரை பவுனில்
தங்க மோதிரம் வாங்கிடத்தான்
இன்று நானும் புறப்பட்டேன்
என்னிடம் இருப்பது பத்தாயிரம்!''
என்றதாம் கரடி. அதைக்கேட்டு
""இருப்பதைக் கொடுங்கள் அவசரமாய்
மருந்தை வாங்கிச் சென்றிடணும்
மருத்துவ மனைக்கு'' என்றேதான்
குள்ள நரியும் மோதிரத்தைக்
கொடுத்ததாம். வாங்கிய கரடியுமே
உள்ள பணத்தைக் கொடுத்ததுவாம்
ஓட்டம் பிடித்ததாம் அந்த நரி!
"அரை பவுன் வாங்கிடும் பணத்தினிலே
அழகிய மோதிரம் ஒரு பவுனில்!'
கரடியும் மகிழ்ந்தே யானையாரின்
கடைக்குப் போனதாம் எடை பார்க்க!
உரைத்துப் பார்த்த யானையுமே
""உனக்கிது எப்படிக் கிடைத்த''தென
கரடியைப் பார்த்து கேட்டதுவாம்
கரடியும் நடந்ததைச் சொன்னதுவாம்!
""மின்னுவ தாலே பொன்னல்ல
மெருகு போட்ட பித்தளைதான்!
உன்னிடம் உள்ள பேராசை
உனக்குத் தந்த இழப்பு இது''
என்றதாம் யானை. "அறிவிழந்தே
இருந்த பணத்தை இழந்தேனே!...
கண்ணை மறைத்ததே பேராசை'
கண்ணீர் விட்டதாம் கரடியுமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...