கருவூலம்: வெள்ளியின் கதை!
உலகில் சென்ற 5000 ஆண்டுகளில் வெட்டி எடுக்கப்பட்ட வெள்ளியின் முக்கால் பங்கு வடதென் அமெரிக்கா, ராக்கீஸ் மலைப்பகுதிகள், மெக்ஸிகன் சீராஸ், ஆண்டீஸ், கனடா முதலிய நாடுகளிலிருந்து கிடைத்திருக்கிறது!


உலகில் சென்ற 5000 ஆண்டுகளில் வெட்டி எடுக்கப்பட்ட வெள்ளியின் முக்கால் பங்கு வடதென் அமெரிக்கா, ராக்கீஸ் மலைப்பகுதிகள், மெக்ஸிகன் சீராஸ், ஆண்டீஸ், கனடா முதலிய நாடுகளிலிருந்து கிடைத்திருக்கிறது! ஆஸ்திரேலியாவிலும், சோவியத் யூனியனிலும் அதிக வெள்ளிப்படிவம் காணப்படுகிறது!
1980, 81ஆம் ஆண்டுகளில் 12000, மெட்ரிக் டன் வெள்ளி உலகில் தேவைப்பட்டதாம்! இதில் 4000 மெட்ரிக் டன் வெள்ளி பழைய வெள்ளி நாணயங்களையும்,நகைகளையும், கம்ப்யூட்டர் கம்பிகளையும், உபயோகப்படுத்தப்பட்ட ஸில்வர் அயோடைட் கரைசல்களிலிருந்தும் (பெரும்பாலும் போட்டோ தொழிலில் உபயோகப் படுத்துவர்!) சேதாரமான தூள்களையும் உருக்கியதன் மூலம் கிடைத்திருக்கிறது!
இந்தியாவுக்கு வியாபார நிமித்தம் வந்த போர்ச்சுகீசியரும், பிரெஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயரும் வெள்ளி நாணயங்களைக் கொடுத்து நம் நாட்டிலிருந்து ஏலம், லவங்கம் போன்ற வாசனைப் பொருட்களையும் பட்டு, டீ போன்ற பொருட்களையும் பண்டமாற்று முறையில் வாங்கித் தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்றார்கள்
இந்தியாவில் வெள்ளிச் சுரங்கம் ஒன்று கூட இல்லாமலிருந்தும் உலகில் உள்ள வெள்ளியில் 15சதவிகிதம் இந்நாட்டில் இந்திய மாதர்களின் மேனியில் நகைகளாக அலங்கரித்துக் கொண்டிருக்கிறது!
வெள்ளியின் தேய்மான சக்தி தங்கத்துக்கு சமமாக இருப்பதால் இரண்டு உலோகங்களும் நாணயங்கள் தயாரிக்க உபயோகப்பட்டன!
தங்கத்தைப்போல் வெள்ளியையும் உருக்கி கம்பியாக நீட்டலாம்! தகடாக அடிக்கலாம்! .002 அவுன்ஸ் எடையுள்ள வெள்ளியை 120 மீட்டர் கம்பியாக நீட்டலாம். அல்லது புத்தகம் அச்சிடும் காகிதத்தைப் போல 150 பங்குக்கு மெல்லிய தகடாக தட்டலாம்!
மற்ற உலோகங்களைக் காட்டிலும் வெள்ளி ஒளியை ஒரே மாதிரி பிரதிபலிக்கிறது. மிகவும் மெல்லியதான வெள்ளித் தகடு அதன்மீது விழும் ஒளியை 95 சதவிகிதம் பிரதிபலித்துக் காட்டும்.
சூரியக் கதிர்களைக் கிரகித்து தன்னுள்ளே சேர்த்து வைக்க வெள்ளி பெட்டி உபயோகப் படுத்தப்படுகிறது! கண்ணாடிக்கு பின்புறம் வெள்ளி முலாம் பூசி முகம் பார்க்கும் கண்ணாடியாக மாற்றுகிறார்கள்!
நோய் கிருமிகளை அழிக்க பிராண வாயுவை வெள்ளியிலிருந்து தயாரிக்கிறார்கள். மருத்துவமனைகளில் குடிநீரை வெள்ளி முலாம் பூசப்பட்ட கார்பன் வடிகட்டிகள் மூலம் சுத்தம் செய்கிறார்கள்! நெருப்புக் காயங்களை குணமாக்குவதற்கு வெள்ளி மிகவும் பயன்படுகிறது. எலும்புகளை ஒட்ட வைக்க நோய் கிருமிகள் அண்டாத வெள்ளி உப்பு கலந்த சிமென்ட் கலவையை உபயோகிக்கிறார்கள்.
மற்றெந்த உலோகமும் வெள்ளியைப் போல உஷ்ணத்தையும் மின்சாரத்தையும் பரப்ப இயலாது. சில்வர் ஆக்ஸிடைட் பேட்டரிகள் காது கேட்கும் கருவிகளுக்கும், கால்குலேட்டர்களுக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் உபயோகப்படுகிறது!
கார்களிலும், டெலிபோன்களிலும், கம்ப்யூட்டர் இயந்திரங்களிலும் கம்பிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்க சிறிய வெள்ளித் தகடுகளை உபயோகிக்கின்றனர். ஏவுகணைகளை விண்வெளியில் தள்ள உபயோகப்படும் திரவ ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் வாயுக்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து வெடிக்காமல் பாதுகாக்க வெள்ளித் தடுப்பு உபயோகப்படுகிறது.
வெள்ளியை சில்வர் அயோடைட் துகள்களாக மாற்றி மேகங்களின் மீது தூவி செயற்கையாக மழை வரவழைக்கலாம்.
ஜெய்பூர் மகாராஜா 1902 ஆம் ஆண்டில் ஏழாம் எட்வர்ட் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு இங்கிலாந்து நாட்டுக்குச் செல்லும்போது புனித கங்கை நீரை 183 சென்டிமீட்டர் உயரமுள்ள இரண்டு வெள்ளிக் குடத்தில் தன்னுடன் கப்பலில் எடுத்துச் சென்றார். இவ்வளவு பெரிய வெள்ளிக் குடம் வேறு யாரிடமும் இருந்ததாகத் தெரியவில்லை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...