பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கருவூலம்: மன்னார் வளைகுடா!

பூமியின் மேற்பரப்பில் உள்ள மொத்த நீரில் 71% கடலாகவே உள்ளது. பூமியில் உள்ள மொத்த நீரில் 97% கடல் பகுதியிலேயே உள்ளது!

News image
Updated On :21 நவம்பர் 2015, 11:55 am

பூமியின் மேற்பரப்பில் உள்ள மொத்த நீரில் 71% கடலாகவே உள்ளது. பூமியில் உள்ள மொத்த நீரில் 97% கடல் பகுதியிலேயே உள்ளது! இக்கடல் பகுதியானது பெருங்கடல், கடல், வளைகுடா, விரிகுடா என்று பலவாறாக அதன் அமைப்பையும் பரப்பளவையும் பொருத்து அழைக்கப்படுகிறது.

மிகப் பெரிய அளவில் பரந்து விரிந்து இருக்கும் உப்பு நீர் பரப்பே பெருங்கடல் ஆகும். குறைந்த அளவு நீர்ப்பரப்புடன் சுற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட கடல் விரிகுடா, என்றும் வளைகுடா என்றும் அழைக்கப்படும்!

நாம் காணும் கடற்கரைப் பகுதியிலிருந்தே கடல் தொடங்கிவிடுகிறது. கரையினை ஒட்டிய கடல் பகுதி குறைந்த ஆழத்துடன் சிறிது தூரத்திற்கு இருக்கும். பின் கடல் அடி நிலமானது செங்குத்தான சரிவுடன் கீழே இறங்கும். ஆழமற்ற பகுதிகள் "கண்ட விளிம்பு' (CONTINENTAL MARGIN)  அல்லது "கண்டதிட்டு' எனப்படுகிறது. அதன் பின் ஆழமான கடலாக மாறிவிடுகிறது. ஆழ்கடலின் தரைப் பகுதியானது கடலடி குன்றுகள், மலைகள், மலைத்தொடர்கள் மற்றும் சமவெளி பகுதிகளாகவும் அமைந்துள்ளது.

Story image

உலகில் வாழும் உயிரினங்கள் 25 குழுக்களாக (PHYLA) வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றுள் நான்கு வகைகள் மட்டுமே நிலப்பகுதியில் வாழ்கின்றன. கடலில் 25வகைகளும் வாழ்கின்றன.

 இராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள தமிழக கடற்கரைப் பகுதிக்கும், இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதிக்கும் இடையில் உள்ள கடற்பரப்புதான் மன்னார் வளைகுடா பகுதி. இது 200கி.மீ வரை அகலும் 160கி.மீ நீளமும் கொண்டது.

ராமர் பாலம்!

Story image

மன்னார் வளைகுடாவின் வடகிழக்கு பகுதியில்தான் தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னார்க்கும் இடையில் உள்ள "ராமர் பாலம்' உள்ளது. தென்பகுதியில் இந்தியப் பெருங்கடல் உள்ளது.

தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் இடையில் சுமார் 30கி.மீ நீளத்திற்கு கற்பாறைகளுடன் கூடிய 13 மணற்திட்டுகள் தாழ்வான தீவுகளைப்போல் அடுத்தடுத்து உள்ளன. இந்த மணல் திட்டுகள்தான் ராமர் சீதையை மீட்க இலங்கைக்குச் சென்றபோது கட்டிய பாலத்தின் மீதமுள்ள பகுதிகள் என்று கூறப்படுகிறது. இது "ஆதாம் பாலம் என்றும் "சேது பாலம்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதிகளில் கடலின் ஆழம் மிகவும் குறைவு. அதிகபட்சமே 12 அடிதான்! இந்தப் பாலம்தான் மன்னார் வளைகுடாவையும் பாக் வளைகுடாவையும் பிரிக்கிறது. 

கடல் செல்வங்கள்!

Story image

10,500ச,கி.மீ பரப்பளவு கொண்ட இவ்வளைகுடா பகுதி உலகளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த கடல் வாழ் பல்லுயிர் பகுதிகளில் ஒன்றாகும். இங்கு 4223 வகையான கடல்வாழ் உயிரினங்களும், தாவரங்களும் இருக்கிறது.

 இங்கு இந்திய கடல் பகுதியில் வாழும் மீன் வகைகளில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மீன் வகைகள் வாழ்கிறது. மேலும் 104வகை பவளத்திட்டுகள், 160 வகையான கடல் பாசிகள், 13வகையான கடல் புற்கள், அபூர்வ கடல் சங்குகள், அபூர்வ வகை கடல் ஆமைகள், கடல் குதிரைகள், கடல் அட்டைகள், கடல் பசு, கடல் செவ்வந்தி, கடல் பாம்புகள், டால்பின்கள், முத்துகள் விளையும் சிப்பிகள், கிளிஞ்சல்கள், 35 வகையான இறால் மீன்கள், 280 வகையான கடற்

பஞ்சுகள், சுமார் 17வகையான நண்டுகள், 40க்கும் மேற்பட்ட கடல்தாவரங்கள், என பலதரப்பட்ட உயிரின வகைகள் மன்னார் வளைகுடாவில் உள்ளன.

கடல் வாழ் உயிர்கோளக் காப்பகம்!

Story image

பல்வகை கடல்வாழ் உயிரினங்களின் புகலிடமாக இவ்வளைகுடா விளங்குவதால் மத்திய அரசு 1989-இல் இக்கடல் பகுதியினை "மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிர்கோள காப்பகம்' என அறிவித்துள்ளது. இதுவே தென்கிழக்கு ஆசியாவின் முதல் உயிர்கோள காப்பகமாகும். இதற்கு ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பும் அங்கீகாரம் அளித்துள்ளது.

பவளப்பாறைகள்!

Story image

மன்னார் வளைகுடாவின் பவளப்பாறைகள் பிரசித்தமானவை! இவை பாம்பன் முதல் தூத்துகுடி வரையிலான 160கி.மீ நீள கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள வான் தீவு, முயல் தீவு உள்ளிட்ட 21குட்டித் தீவுகளின் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இக்கடல் பரப்பினை "மன்னார் வளைகுடா கடல் வாழ் தேசிய பூங்கா' வாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இராமேஸ்வரத்தில் கடல் வாழ் தேசிய பூங்காவைப் பார்ப்பதற்கு கண்ணாடிப் படகுகள் உள்ளது!

ஆறுகள் சங்கமம்!

Story image

தமிழகத்தின் தாமிரபரணி ஆறும் இலங்கையின் அருவி ஆறும் இப்பகுதியில்தான் கடலில் சங்கமிக்கிறது! தூத்துகுடி துறைமுகமும், திருச்செந்தூர் முருகன் கோயிலும் இக்கடற்கரைப் பகுதியில் உள்ள முக்கிய இடங்களாகும்!

பவளத்திட்டுகள்!

Story image

ஆழமற்ற வெப்பநீர் கடல்பகுதிகளில் காணப்படும் பவளத்திட்டுகள் கல் போன்ற பொருளல்ல. இவை சுண்ணாம்பு கூட்டின் மீது ஒட்டிக் கொண்டு கூட்டம் கூட்டமாக வாழும் பவளப்பூச்சிகளினால் உருவாக்கப்படுபவை. பவளப்பூச்சி மென்மையான ஒளி ஊடுருவும் தன்மையுடைய சிறிய உயிரினமாகும்.

இவற்றின் கூடானது இப்பூச்சிகளினால் சுரக்கப்படும் கால்சியம் கார்பனேட்டினால் உருவாக்கப்படுகிறது. முதலில் கால்சியம் கார்பனேட்டைக் கொண்டு கடினமான எலும்புக் கூடு போன்ற ஓர் அமைப்பைத் தோற்றுவிக்கிறது. இவை பல கிளைகளைக் கொண்ட மரங்களைப் போன்ற தோற்றம் கொண்டிருக்கும். இதனைப் பவளக்கொடி என்றும் சொல்வார்கள்! இந்தப் பவளக்கொடித் திட்டுகள் இறுகும்போது பாறைகளாகிவிடும்!

கடற்கரையோரப் பகுதிகளில் சூரியவெளிச்சம் படும் தெளிவான நீர்ப் பகுதிகளில் மிதமான வெப்பநிலையில்தான் பவளத்திட்டுகள் செழித்து வளரும்! இவை உருவாக நீண்ட காலமாகும்! உயிரிழந்த பவளத் திட்டுகளிலிருந்துதான் நகைகளில் பதிக்கப்படும் நவரத்தினங்களில் ஒன்றாகிய பவளம் எடுக்கப்படுகிறது. முளைப்பவளம், மான்கொம்புப் பவளம், தட்டுப் பவளம் என பவளத்திட்டுகளில் பலவகை உண்டு!

பவளப்பூச்சிகள் வாழ்நாள் முழுவதும் கூட்டில் ஒட்டிக்கொண்தான் வாழ வேண்டும்! சந்ததிகள் கூடப் பிரிந்து செல்ல முடியாது. மிதக்கும் நுண்தாவரங்களே இதன் உணவாகும்! பவளத்திட்டுகள் உள்ள கடல் பகுதிகளில் பலவகையான கடல் உயிரினங்கள் வாழ்கின்றன.

மன்னார் வளைகுடாவில் 2005ஆம் ஆண்டு முதல் பவளப்பாறைகள் வெட்டியெடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன் சுமார் 30ஆண்டு காலம் தொடர்ந்து அளவுக்கு அதிகமாகப் பவளப்பாறைகள் வெட்டியெடுக்கப் பட்டதாலும் முறைகேடாக குறிப்பிட்ட சிலவகை மீன்களும் தாவரங்களும் புற்களும் அதிகமாக எடுக்கப்படுவதாலும் இப்பகுதியின் உயிர்வளம் குறையத் தொடங்கியுள்ளது!

இனியாவது நாம் சுயநலமின்றி, அலட்சியப் போக்கின்றி, பேராசையின்றி நமது கடல் வளத்தைப் பாதுகாக்க முயற்சி செய்வோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.