நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரங்கம்: நான்தான் ராஜா!

வல்லவன் ஒரு பலாமரத்தில் இருந்த பலாப்பழத்தைத் தன் துதிக்கையால் இழுத்துக் கீழே போடுகிறது!

News image
Updated On :3 அக்டோபர் 2015, 10:24 am

பூதலூர் முத்து

காட்சி-1

இடம்-காடு

விலங்குகள்- யானை வல்லவன், குரங்கு வேலப்பன்.

(வல்லவன் ஒரு பலாமரத்தில் இருந்த பலாப்பழத்தைத் தன் துதிக்கையால் இழுத்துக் கீழே போடுகிறது! அதைக் காலால் பிளந்து உண்கிறது. அப்போது குரங்கு கோலப்பன் அங்கே வருகிறது.)

வல்லவன்: என்ன, கோலப்பா, பழம் வேண்டுமா? அதோ அங்கே சுளைகள் சிதறிக் கிடக்கின்றன. அவற்றை எடுத்து உண்!

கோலப்பன்: வல்லவா, மிகுந்த நன்றி! நான் மரம் ஏறும் வேலை இல்லை. அப்படி ஏறினாலும் இவ்வளவு பெரிய பழத்தைப் பறிக்க முடியாது. பழுத்த பழம் கீழே விழுந்து கிடந்தாலும், அதைக் கீறி சுளையை எடுப்பது பெரிய தொல்லை! இப்படி யாராவது கொடுத்தால்தான் உண்டு!

வல்லவன்: உனக்கென்று உள்ள பழம் உனக்குக் கிடைக்கும். கவலைப்படாதே!

கோலப்பன்: நானும் அதைத்தான் சொல்ல நினைத்தேன். உன் தகுதிக்கு ஏற்ற சிறப்பு உனக்கு காத்திருக்கிறது.

வல்லவன்: நீ என்ன சொல்கிறாய்? விளங்கும்படி சொல்!

கோலப்பன்: ஒரு யானைக் கூட்டத்துக்குத் தலைவனாக இருக்கிற நீதான் இந்தக் காட்டுக்குத் தலைவன்!(இந்த வல்லவனை எப்படியாவது மடக்கி நாம ஒரு மூணு நாளைக்காவது இந்தக் காட்டுக்கு ராஜாவா ஆகணும்)

வல்லவன்: ஏற்கெனவே சிங்கராஜா தலைவராக இருக்கும்போது நான் எப்படி அந்த பதவிக்கு வரமுடியும்?

கோலப்பன்: இவ்வளவு பெரிய உடம்பு!...,இரண்டு பெரிய தந்தங்கள்!...,நீண்ட தும்பிக்கை! இவ்வளவு இருந்தும் உனக்குத் தன்னம்பிக்கை இல்லை! உன் கூட்டத்துக்கும் அது இல்லை. ...பயம்!....அதனால் நீங்கள் ஆள முடியவில்லை. நான் இந்த நிலைமையை மாற்றிக் காட்டுகிறேன்....

நீயும் உன் கூட்டமும் இந்தக் காடு உள்ளவரை ஆட்சி செய்யலாம். நீதான் இனிமேல் ராஜா! எத்தனை வலிமையுடைய புலியாக இருந்தாலும், சிங்கமாக இருந்தாலும் அவை உங்களுக்கு அடங்கி நடக்க நான் வழி சொல்கிறேன்.

வல்லவன்:  நீ மதி மிகுந்தவன். நீ சொல்வதில் உண்மை இல்லாமலா இருக்கும்? இந்தக் காட்டின் தலைவனாக வேண்டும் என்று எனக்கும் நெடுநாளாக ஆசை! உன்னிடம் உள்ள திட்டத்தை எனக்கு உடனே சொல்!

கோலப்பன்: (மனதிற்குள்-யப்பா! என்னோட ராஜா ஆசை நிறைவேறப்போகுது)நான் அந்தத் திட்டத்தை கவனமாகத் தீட்டி இருக்கிறேன். இதற்காக பல இரவுகள் நான் உறங்கவே இல்லை! இன்னும் மூன்று நாட்கள் பொறு!

வல்லவன்: எதற்கு அந்த மூன்று நாள்?

கோலப்பன்: அந்த மூன்று நாளும் நான் சொல்வதை நீ கேட்க வேண்டும். நாம் இருவரும் என்ன ஒப்பந்தம் செய்தோம் என்பது உன் கூட்டத்துக்கோ, பிற விலங்குகளுக்கோ தெரியக்கூடாது. மூன்று நாட்களுக்குப் பின் அந்தத் திட்டத்தை உன்னிடம் சொல்வேன்.

வல்லவன்: சரி, இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

கோலப்பன்: (மனதிற்குள்-நம்ம ராஜா கனவு வெற்றிதான்)

(கோலப்பன், வல்லவனின் காதில் ஏதோ சொல்கிறது)

காட்சி-2

இடம்- ஆலமரம்.

விலங்குகள்- வல்லவன், கோலப்பன்.

-மறுநாள். வல்லவன் ஓர் ஆலமரத்தின் அடியில் நிற்கிறது. கோலப்பன் அந்த மரத்தின் கிளையிலிருந்து வல்லவனின் பிடரியில் குதிக்கிறது....கோலப்பனின் தலையில் காட்டுப் பூக்கள்! கொடியில் ஆன் கிரீடம்! காதில் இரண்டு வளையங்கள்! கழுத்தில் மாலை! ஒரு கோல்!(செங்கோல்)-

கோலப்பன்: (அதிகாரமான குரலில்) இந்த மூணு நாளுக்கு நான்தான் ராஜா! நான் சொல்வதை மட்டும் நீ கேட்க வேண்டும்! ஆனால் பதில் எதுவும் சொல்லக் கூடாது! பார்க்கும் எந்த விலங்குகளிடமும் பேசக்கூடாது! இது என் உத்தரவு! நீ இதை மீறினால் நான் அந்தத் திட்டத்தைக் கூறமாட்டேன்! பிறகு நீ ராஜாவாக ஆக முடியாது!

வல்லவன்: (தனக்குள்) அட கடவுளே! பதவியைப் பிடிப்பது சாதாரண விஷயம் இல்லை போலிருக்கிறதே!.....கண்ட சிறுசுகளும் ஆட்டம் போடுகின்றனவே! அதுஅது ஒரு சூட்சுமத்தையும் தந்திரத்தையும் வைத்துக் கொண்டு அலைகிறதே! என்ன செய்வது...? காட்டுக்கு ராஜாவாக ஆக வேண்டும் என்ற என் ஆசையை, இந்தக் குரங்கு நெய் ஊற்றி வளர்த்து விட்டதே! சரி, என்னதான் நடக்கிறதென்று பார்ப்போம்!

காட்சி-3

இடம்- காடு

விலங்குகள்- வல்லவன், கோலப்பன், மான், முயல்.

(வல்லவன் காதுகளை ஆட்டியவாறு அசைந்து நடந்து வருகிறது. அதன் மீது குரங்கு கோலப்பன் ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறது...., இந்தக் காட்சியைக் கண்ட காட்டு விலங்குகள் சிரிக்கின்றன. மறுபுறம் வியப்பு!)

கோலப்பன்: (கோலை அசைத்தவாறு) காட்டின் புதிய ராஜா வருகிறார் பராக்...பராக்...!

மான்: யார் ராஜா...? யானையா?

கோலப்பன்: யானை என்று நான் சொன்னேனா? நான்தான் ராஜா! இந்த யானைக்குப் பேசத் தெரியாது! நான் சொல்வதை மட்டுமே கேட்கும்!

(வல்லவன் அதை ஆமோதிப்பது போல் தலையை ஆட்டுகிறது.... எதிரே ஒரு முயல் வருகிறது.)

முயல்:  ராஜா என்றால் சும்மாவா? கோணங்கித்தனம் பண்ணும் உனக்கு எதர்கு இந்த வேண்டாத வேலை?

கோலப்பன்: நாவை அடக்கிப் பேசு! நான் ஏறி வரும் வாகனத்தைப் பார்த்த உடனே நீ ஓடி ஒளிந்திருக்க வேண்டும்...., உனக்கு இவ்வளவு துணிச்சல் எப்படி வந்தது?

முயல்: உனக்கு இவ்வளவு பெரிய யானை மீது ஏறி பவனி வரும் துணிச்சல் வந்தபோதே எனக்கும் அந்தத் துணிச்சல் வந்துவிட்டது!

கோலப்பன்: எனக்கு இனிமேல் யானை, புலி, சிங்கம் என்றுதான் நட்பு! உன்னைப் போன்ற எறும்பு துரும்போடெல்லாம் நட்பு இல்லை! நான் ஆட்சி நடத்தும் அழகைப்பார்! பிறகு நீ வாயை மூடிக்கொள்வாய்!

முயல்: சிங்கத்தின் ஆட்சியைப் பார்த்துவிட்டோம்! எங்கே பார்த்தாலும் எலும்பு! இனிமேல் உன் ஆட்சியில் எதைப் பார்க்கப்போகிறோமோ...

கோலப்பன்: என் ஆட்சி உன்னைப் போன்ற குறும்பர்களால் கவிழாமல் இருந்தால் நான் எத்தனையோ திட்டங்களை அறிவிப்பேன்!!

(தூரத்தில் சிங்கத்தின் கர்ஜனை கேட்கிறது. குரங்கின் உடல் நடுங்குகிறது. கூடவே புலியின் உறுமலும் கேட்கிறது. யானையும் அச்சத்திற்கு உள்ளாகிறது. முயல் ஓடிப் புதருக்குள் ஒளிகிறது)

கோலப்பன்: (யானையிடம்) வல்லவா! வடக்கே சகுனம் சரியில்லை. நீ தெற்கே போ! விரைவாகப் போ!

(யானை கோபத்தை அடக்கிக் கொண்டு போகிறது)

காட்சி-4

இடம்- காட்டாறு

விலங்குகள்- வல்லவன், கோலப்பன்.

கோலப்பன்: வல்லவா! இந்தப் பெரிய காட்டாற்றின் அடுத்த கரையில் ஒரு குரங்குக் கூட்டம் இருக்கிறது! அந்தக் குரங்குகள் எங்கள் கூட்டத்துக்கு எதிராகக் கலகம் செய்யத் தயாராக உள்ளன. "காட்டின் ராஜா'வாகிய நான் அவற்றுக்கு ஓர் எச்சரிக்கை விட வேண்டும்! நீ இந்தக் காட்டாற்றைத் தாண்டிப் போ!

வல்லவன்: (தனக்குள்) இந்த ஆற்றில் திடீரென்று வெள்ளம் வருமே...? சனியன் பிடித்த இந்தக் குரங்குக்கு இது தெரியாதே...நான் என்ன செய்வேன்? நான் வாய் திறந்து பேசிவிட்டால் இந்தப் பாழாப்போன வானரம் நான் இந்தக் காட்டுக்கு ராஜாவாகும் திட்டத்தை மறைத்து விடுமே...

கோலப்பன்: என்ன யோசிக்கிறாய்? ஆற்றில்தான் தண்ணீர் இல்லையே..., உனக்கு இயல்பாக உள்ள அச்சம் உன்னைத் தடுக்கிறது! அப்படித்தானே?

வல்லவன்: (தனக்குள்) பாவி! நட்டாற்றில் விடுவது என்பது இதுதானா?...காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு வந்தால் உனக்கும் ஆபத்து..., எனக்கும் ஆபத்து...நீ தந்திரக்காரன்...,வஞ்சகம் நிறைந்தவன்...,நீ ஆற்றில் போவதால் ஒன்றும் இழப்பு இல்லை! நான் என்ன தவறு செய்தேன்?

கோலப்பன்: தயங்கினால் நீ எப்படி ராஜா ஆவது?

வல்லவன்: (தனக்குள்) ஆம்..., அந்த ஆசை..., பேராசைதான் என்னை இந்தச் சிக்கலில் மாட்டிவிட்டிருக்கிறது.....ஆற்றைத் தாண்டி மறுகரைக்குப் போனால் அங்கே என்ன நடக்கப்போகிறதோ? அந்தக் குரங்குகள் எல்லாம் சேர்ந்து எங்களைத் தாக்கினால்...? நினைக்கவே நெஞ்சு பதறுகிறதே...

(அதன் கண்களில் கண்ணீர்)

கோலப்பன்: (தன் கிரீடத்தைச் சரி செய்கிறது. கழுத்தில் உள்ள மாலையைத் தூக்கிப் பார்க்கிறது. கையில் உள்ள கோலை அசைக்கிறது.) அந்தக் குரங்குகளை வென்று அந்தப் பகுதியையும் நாம் பிடித்துக் கொள்ள வேண்டும். அவற்றுக்குத் துணையாக யார் வந்தாலும் நீ உன் கூட்டத்தோடு வந்து அவற்றை துவம்சம் செய்து விடவேண்டும். மூன்று நாட்களுக்குப் பிறகு நீதானே காட்டின் ராஜா! என்ன நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீ ஒன்றுமே பேசாமல் மெளனமாக இருக்கிறாயே.... ஏதாவது வருத்தமா?

(ஒப்பந்தம் நினைவுக்கு வருகிறது) சரி...சரி...நான்தான் உன்னைப் பேசக் கூடாது என்றேன். அதை நானை மறந்து விட்டேனே...

(யானை கண்ணீரைத் துதிக்கையால் துடைத்துக்கொள்கிறது. தான் சொல்வதை ஆமோதிப்பதாக குரங்கு நினைக்கிறது)

காட்சி-5

இடம்- காட்டாற்றின் நடுப்பகுதி

விலங்குகள்- வல்லவன், கோலப்பன்.

(காட்டாற்றில் திடீரென்று பெருவெள்ளம். கரைகளையும்தாண்டி, காட்டுக்குள்ளும் போகிறது)

-குரங்கு கோலப்பனின் கிரீடமும் மாலையும் கோலும் வெள்ளத்தில் மிதந்து ஓடுகின்றன.-

கோலப்பன்: ஐயோ...! மோசம் போனேனே..., என் அல்ப ராஜா ஆசையால இந்த வெள்ளத்துக்கு பலியாக ஆயிடுவேனோ.....

(கோலப்பன் ஒரு புள்ளியாக நீரில் மூழ்குகிறது)

வல்லவன்: (வெள்ளத்தில் தடுமாறிக்கொண்டு)இதோட அல்ப ராஜா ஆசைக்கு என்னை உபயோகப்படுத்திக்கிச்சே!  அதோட வஞ்சகத்தாலயும், ஆணவத்தாலயும் இப்படி வெள்ளத்தோட போயிடுச்சு! பிழைச்சிருக்குமா...? தெரியலியே...,

...நான் இவ்வளவு பருத்த உடல், துதிக்கை, கூர்மையான வலுமிருந்த தந்தம் எல்லாம் பெற்றும் சிந்திக்கும் திறன் இல்லாததால் கேவலம் ஒரு குரங்கின் அடிமையாகிவிட்டேனே!  

எல்லாத்துக்கும் தலையை ஆட்டியதால் எனக்கு இந்த நிலைமை! காட்டுக்கு ராஜா ஆக வேண்டும் என்ற என் ஆசையில் தவறு இல்லை! அதற்கேற்ற துணிச்சலும், செயலாற்றும் திறனும், வலிமையான துணையும் எனக்கு உள்ளதா என்று சிந்தித்துப் பார்க்காமல் அந்தக் குரங்கின் ஏமாற்று வார்த்தையால் மயங்கிவிட்டேனே!  ஐயோ வெள்ளம்! என்னையும் அடிச்சுக்கிட்டு போயிடுமா?

(யானை வல்லவன் தட்டுத் தடுமாறி மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு பெருமூச்சுடன் கரையேறுகிறது. கோலப்பன்...? தெரியவில்லை...!)

-திரை-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.