அரங்கம்: நினைவு நல்லது வேண்டும்!
அகிலன்: நாளை நடப்பது உனக்கு எப்படித் தெரியும்? நன்றாகப் படித்து...,நல்ல வேலைக்குப் போனால் இதைப்போல வாங்கப் போகிறோம்! அல்லது ஏழைக்கேற்ற எள்


காட்சி-1
இடம்-சாலையோரம்
மாந்தர்-மாணவர்கள் அகிலன், அருணன்.
(இருவரும் மிதிவண்டியில் வருகிறார்கள். சாலையோரம் கிடந்த அந்தப் பொருளைப் பார்த்ததும் அவர்களுக்குத் திகைப்பும் வியப்பும்! கீழே இறங்குகிறார்கள்.)
அகிலன்: அருணன், இதைப் பார்த்தாயா?
அருணன்: (விரைந்து சென்று எடுக்கிறான்) அகிலா! நாம் இன்றைக்கு நரி முகத்தில்தான் விழித்திருக்க வேண்டும். இந்தச் செல்லிடப்பேசியைப்(ஸ்மார்ட் போன்)பார்! நாம் நம் வாழ்நாளில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது!
அகிலன்: நாளை நடப்பது உனக்கு எப்படித் தெரியும்? நன்றாகப் படித்து...,நல்ல வேலைக்குப் போனால் இதைப்போல வாங்கப் போகிறோம்! அல்லது ஏழைக்கேற்ற எள் உருண்டை என்று நமக்குத் தகுந்தபடி வாங்கப்போகிறோம்!
அருணன்: சரி...,இந்தத் தத்துவமெல்லாம் நாம் நாளைக்குப் பேசலாம். வாகனங்கள் வேகவேகமாகப் போகின்றன. நம்மை யாரும் பார்க்கவில்லை. வா! இந்த இடத்தைவிட்டு விரைவில் போய்விடலாம்.
அகிலன்: இதிலும் உன் கருத்துக்கு என் கருத்து மாறானதுதான். நாம் சற்று நேரம் இங்கேயே நிற்போம்!
அருணன்: ஏன்?
அகிலன்: இதைத் தொலைத்தவர்கள் தேடிக்கொண்டு வரலாம். வேறு எவருடைய பேசி வழியாகவும் தொடர்பு கொள்ளலாம். கொஞ்சம் பொறு.
அருணன்: தொலைத்தது அவர்கள் தவறு. அதற்கு நாம் எப்படிப் பொறுப்பாக முடியும்? இப்போது நமக்குச் சொந்தம்! வா...! யாராவது வருவதற்குள் போய்விடலாம்!
(அகிலன் அவனைத் தடுத்து நிறுத்துகிறான். மிதிவண்டியை பக்கத்தில் இருந்த மரத்தில் சாய்த்து நிறுத்துகிறான்)
காட்சி-2
இடம்-சாலையோரம்
மாந்தர்-அகிலன், அருணன்.
(அருணன் பேசியைப் பயன்படுத்தி விளையாடுகிறான்)
அகிலன்: ...நம் பள்ளிப்பேரவையில் அன்றாடம் நேர்மையாக நடப்பதின் மேன்மை...,அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவதன் சிறுமை...,இவற்றைத் தெளிவாக எடுத்துச் சொல்கிறார்களே...அவற்றைக் கேட்டபின்பும் நாம் நம் வழியில் போனால் படிப்பின் பயன் என்ன?
அருணன்: எனக்கு இப்போது அதெல்லாம் நினைவில் இல்லை! இது இப்போது முப்பதாயிரம் ரூபாய் இருக்கும்! எத்தனை விளையாட்டுகள்! ஈ மெயில்...,இணைய தளம்....,போட்டோ எடுத்தல்....,திரைப்படங்கள்....,பாடல்கள்....,வாட்ஸ் ஆப்....,செல்பி....,ஏகப்பட்ட சமூக வலைதளங்கள்...அடேங்கப்பா! எத்தனை வசதிகள்! நமக்குத் தெரியாதது இன்னும் எத்தனையோ!
அகிலன்: அருணன்...,நான் சொல்வதைக்கேள்! வேண்டாம் இந்த ஆசை! இதுவரை யாரும் தொடர்பு கொள்ளவில்லை! அதனால் நாம் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைப்போம்! ....,நமக்குச் சொந்தமில்லாத பொருளை நாம் வைத்திருந்தால் வீண் தொல்லைதான்!
அருணன்: காவல் நிலையத்தில் கொடுத்தால் மட்டும் இதற்கு உரியவரிடம் போய்விடுமா?
அகிலன்: அப்படி நாம் ஒரு பொதுக் கருத்தை உருவாக்க முடியாது. நல்லவர்களும் இருக்கிறார்கள்.......,இதற்கு உரியவர் எவ்வளவு தொகை கொடுத்து இதை வாங்கினாரோ?....., இதனால் அவருக்கு எவ்வளவு பயன்களோ?. தொலைத்தவர் எவ்வளவு மன உளைச்சலில் இருப்பார்? நினைத்துப் பார்! இது உன்னுடையதாக இருந்து நீ தொலைத்திருந்தால் என்ன நினைப்பாய்?
அருணன்: எடுத்தவர் என்னைத் தேடிவந்து தரவேண்டும் என்றுதான் நினைப்பேன்.
அகிலன்: ஆளுக்கு ஒரு நீதியா...? நல்ல எண்ணம்தானே நம்மை உயர்த்தும்?
(அருணன் சிந்திக்கிறான். அந்த நேரத்தில் பேசியில் அழைப்பு வருகிறது. அகிலன் அவனிடமிருந்து அதை வாங்கிப் பேசுகிறான்)
அகிலன்: ஐயா! ....பேசி என்னிடம்தான் உள்ளது. என் நண்பன்தான் இதைக் கண்டெடுத்தான்......உங்கள் முகவரியைச் சொன்னால் நாங்கள் வந்து கொடுத்து விடுகிறோம்!
பேசுபவர்: காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதற்கு முன் முயற்சி செய்யலாம் என நினைத்தேன்! ...இந்தக் காலத்தில் இப்படியும் பிள்ளைகளா? கடவுள் உங்களுக்குத் துணை இருப்பார்! (முகவரியைத் தெரிவிக்கிறார்)
அகிலன்: அருணன், இருட்டுகிறது. நாம் அருகிலுள்ள நம் நண்பன் வேலு வீட்டில் மிதிவண்டியை வைத்துவிட்டு ஓர் ஆட்டோ பிடித்து இந்த முகவரிக்குப் போகலாம்.
அருணன்: வேலுவிடம் இதைக் காட்டி யோசனை கேட்கலாமா?
அகிலன்: வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதைபோல ஆகக் கூடாது. வீணாகக் காவல் நிலையத்தில் போய் நிற்கும் நிலை உன்னால் வரக்கூடாது!......ஆட்டோ பிடிக்கிறோம்! நேராக அவருடைய இடத்துக்குப் போகிறோம்! (ஆட்டோ பிடிக்கிறார்கள்)
காட்சி-3
இடம்- ஒரு பெரிய வீடு
மாந்தர்- தொழிலதிபர் சரவணன், அகிலன், அருணன்.
அகிலன்: ஐயா, சற்றுமுன் உங்களிடம் பேசியில் பேசியது நான்தான்!
சரவணன்: வாங்க! உட்காருங்க!(அவர்கள் இருவரையும் வரவேற்று இருக்கையில் அமர வைக்கிறார். பணியாளர் தேநீர் கொண்டு வந்து தருகிறார்)
அகிலன்: நீங்க தவறவிட்டது இந்தப் பேசிதானே?
சரவணன்: ஆமாம் தம்பி! என் தொழில் தொடர்பான எத்தனையோ முகவரிகள்...,தகவல்கள்...,இதில் உள்ளன. அவை விலை மதிப்பற்றவை! உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை! உங்களைப்போன்ற இளைஞர்களால் இந்த நாடு நல்ல நிலைக்கு வரும்!
அகிலன்: பெற்றோர் இல்லாத....,கல்வி வாய்ப்பில்லாத பல ஏழைகள் வறுமையிலும் நேர்மையாக இருப்பதைச் செய்தியிலும் தொலைக்காட்சியிலும் பார்க்கிறோம்! மாணவர்களாகிய நாங்கள் அந்தப் பண்பில் சிறந்து விளங்க வேண்டாமா?
சரவணன்: நன்றாகச் சொன்னாய்! நேர்மை இருந்தால் தன்னம்பிக்கை, துணிவு, அன்பு, பிறர்க்கு உதவும் பண்பு எல்லாம் அணி வகுத்து வரும் என்பதை நான் என் வாழ்வில் உணர்ந்தேன்....எவர் நேர்மையாக நடக்கிறாரோ அவரைப் பாராட்டுவதிலும், அவருக்குத் தேவையான நியாயமான உதவிகளைச் செய்வதிலும் நான் முன் நிற்கிறேன்.
(இருவரையும் முதுகில் தட்டிக் கொடுத்து, ஆளுக்கு ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாகக் கொடுக்றார்!)
அகிலன்: இப்பொழுது பணம் வேண்டாம் ஐயா! ஒரு நல்ல காரியத்திற்கு ஏதாவது உதவி வேண்டுமெனில் உங்களை அணுகிக் கேட்கிறோம்!
சரவணன்: ரொம்ப சரி!
அருணன்: அப்ப நாங்க வர்றோம்!
அகிலன்: ஐயா!...., வந்து...வந்து...
சரவணன்: சொல்லு தம்பி!
அகிலன்: ஆட்டோவுக்குக் காசு....?
சரவணன்: மறந்தே போயிட்டேன். இந்தாங்க...ஆட்டோவை அனுப்பிட்டு வாங்க...உங்களை எஙகே விடணுமோ அங்கே என்னுடைய காரில் விடச்சொல்றேன்! (டிரைவரைக் கூப்பிடுகிறார்!)
(அகிலன் ஆட்டோவைப் பணம் கொடுத்து அனுப்பி விட்டு வருகிறான்....அருணனை அமைதியாகப் பார்க்கிறான்)
அருணன்:(தனக்குள்)உன்னுடைய நற்பண்பால் பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெற்றதுபோல் நானும் நலம் பெற்றேன்! நீ என்னைக் கடிந்து கொண்டாலும் உன் நட்பை விடமாட்டேன்!
திரை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...