ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கருவூலம்: "கின்னஸ் உலக சாதனைப் புத்தகம்'

அமெரிக்க நூலகங்களில் அதிகம் திருடப்படும் புத்தகம் எது தெரியுமா? கதைகள் போன்ற எந்த பொழுதுபோக்கு அம்சங்களும் இந்தப் புத்தகத்தில் இல்லை. ஆனால் இன்றளவும் அதிகம் விற்பனையாகும் புத்தகம் இதுதான்! ஏறக்குறைய 37 உலக மொழிகளில் பதிப்பாகும் ஒரே புத்தகமும் இதுதான்! அது எது தெரியுமா?

News image
Updated On :4 ஏப்ரல் 2016, 1:49 am

என். பாலசுப்ரமணியன்

அமெரிக்க நூலகங்களில் அதிகம் திருடப்படும் புத்தகம் எது தெரியுமா? கதைகள் போன்ற எந்த பொழுதுபோக்கு அம்சங்களும் இந்தப் புத்தகத்தில் இல்லை. ஆனால் இன்றளவும் அதிகம் விற்பனையாகும் புத்தகம் இதுதான்! ஏறக்குறைய 37 உலக மொழிகளில் பதிப்பாகும் ஒரே புத்தகமும் இதுதான்! அது எது தெரியுமா?

அதுதான் "கின்னஸ் உலக சாதனைப் புத்தகம்' தன் பெயருக்கு ஏற்றார்போல் இது ஒரு சாதனைப் புத்தகம்தான்! ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை இதன் ஒவ்வொரு பதிப்பும் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அண்டார்டிகா தவிர மற்றைய ஆறு கண்டங்களில் உள்ள எல்லா நாடுகளின் தலைநகரங்களிலும் இப்புத்தகம் பதிப்பிக்கப்பட்ட உடனேயே விற்பனை செய்யப்படுவதும் இதன் மற்றொரு சாதனை ஆகும்.

இந்த 2016ஆம் ஆண்டு இப்புத்தகத்தின் 62ஆம் ஆண்டு பதிப்பு வெளிவர இருக்கிறது. இப்புத்தகத்தைப் போலவே இது தோன்றிய வரலாறும் மிகவும் சுவாரசியமானது.

1951ஆம் ஆண்டு "கின்னஸ் பிரீவரீஸ்' என்ற நிறுவனத்தின் பொது மேலாளராகிய "சர்.ஹக் பீவர்' (Sir.Hugh Beaver) அயர்லாந்தில் உள்ள "ஸ்லானி' (River Slaney) என்ற ஆற்றுக்குப் பறவைகளை வேட்டையாடச் சென்றார். அவர் "கோல்டன் ப்ளோவர்' (golden plover) என்ற பறவையை வேட்டையாட விரும்பினார். ஆனால் எத்தனை முறை துப்பாக்கியால் சுட்டும் அவரால் ஒரு ப்ளோவர் பறவையைக்கூட வீழ்த்த முடியவில்லை.

உடனே அவர் மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது. தாம் சுட விரும்பும் பறவைதான் உலகிலேயே வேகமாகப் பறக்கும் பறவையா? அல்லது வேறு ஏதாவது மிக வேகமாகப் பறக்கும் பறவைகள் உள்ளனவா? அப்படி இருப்பின் அவற்றின் பெயர் என்ன? இத்தகைய கேள்விகளுக்குப் பதில் அளிக்கத்தக்க வகையில் எந்தப் புத்தகமும் அன்று இல்லை. மேலும் தகவல் வலையம் போன்று வேறெந்த ஊடகங்களும் இல்லாத சமயம் அது. ஆகவே இப்படிப்பட்ட விஷயங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடலாம் என எண்ணினார். இதற்கான முயற்சியைத் தாமே மேற்கொண்டார்.

அவரது நிறுவனத்தில் பணிபுரிந்த "கிறிஸ்டோபர் சாட்டாவே' (Christopher chataway) என்ற ஊழியர் இலண்டனில் "நோரிஸ்' (Norris) மற்றும் "ராஸ் மெக் விர்ட்டர்' என்ற இரு பல்கலைக்

கழக மாணவர்கள் இப்படிப்பட்ட அரிய சாதனை மற்றும் அதிசயத் தகவல்களை ஆதாரங்களுடன் திரட்டி வருவதாகக் கூறினார்.

அவர்கள் இருவரும் தொகுத்து வைத்திருந்த தகவல்களை ஹக் பீவர் "கின்னஸ் உலக சாதனைப் புத்தகம்' (GUINNESS BOOK OF WORLD RECORDS) என்ற பெயரில் 1954-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டார். முதலில் 1000 பிரதிகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டன. அவை உடனே விற்றுத் தீர்ந்தன.

1955-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் தேதி வெளியான புத்தகம் 198 பக்கங்களுடன், அரிய புகைப்படங்களுடன் வெளியானது. இங்கிலாந்தில் அந்த ஆண்டு அதிகம் விற்பனையான புத்தகம் அதுவே ஆகும். "அரிய தகவல்களை மக்களுக்குத் தர வேண்டும் என்ற நோக்கத்திற்கு மட்டுமே அன்றி பணம் சம்பாதிப்பதற்கு அல்ல!' என்றார் ஹக் பீவர். உலகிலேயே காப்புரிமை (Copy right) பெற்ற புத்தகங்களிலேயே அதிகம் விற்பனையாவது இது மட்டுமே!

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் இப்புத்தகம் வெளியாகிறது. ஆண்டுதோறும் இந்தப் புத்தகத்தைத் தொகுத்து அளித்த காரணத்தினால் நோரிஸ் மற்றும் மெக்விர்ட்டர் ஆகிய இருவரும் அதிக தகவல்களை அறிந்து வைத்திருந்தனர். எனவே சிறுவர்களின் கேள்விகளுக்கு இவர்கள் பதில் அளிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று அந்நாளில் மிகப் பிரபலம் அடைந்தது.

முதன்முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த இப்புத்தகம் தகவல்களின் அவசியம் கருதி 37 உலக மொழிகளில் அச்சடிக்கப்படுகிறது. தனிமனித சாதனைகள், அதிசய விலங்குகள், அதிசயப் பறவைகள், அதிசய இடங்கள், ஆபத்து நிறைந்த இடங்கள் போன்ற அரிய தகவல்களின் களஞ்சியமாக இந்நூல் விளங்குகிறது.

கின்னஸ் நிறுவனம் நவம்பர் மாதம் 9ஆம் நாளை "சர்வதேச கின்னஸ் சாதனை தினம்' ஆக அறிவித்துள்ளது. இதற்கு முன் ஒருவர் செய்த சாதனையை மற்றொருவர் முறியடித்தால் அது இந்த நாளில் ஏற்றுக்கொள்ளப்படும். இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் முதல் பொது மக்களிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

இதிலும் ஒரு சாதனையாக 2006ஆம் ஆண்டு ஏறக்குறைய பத்து நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்தனர். இதன் காரணமாக 2244 புதிய சாதனைகள் உலகுக்குக் கிடைத்தன.

மிருகங்கள் மற்றும் பறவைகளை வேட்டையாடுதல் போன்ற தகவல்களை இந்நிறுவனம் வெளியிடுவதில்லை. 1976ஆம் ஆண்டு "கின்னஸ் சாதனைப் புத்தக அருங்காட்சியகம்' "எம்பயர் ஸ்டேட்' கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் அது பல காரணங்களால் 1995ஆம் ஆண்டு மூடப்பட்டது. 2010ஆம் ஆண்டு முதல் டோக்கியோ, கோபன்ஹேகன், சான் அன்டோனியோ போன்ற நகரங்களில் சிறிய அருங்காட்சியகங்கள் செயல்பட்டு வருகின்றன. கின்னஸ் சாதனைகள் தொலைக்காட்சித் தொடர்களாக இங்கிலாந்தில் ஒளிபரப்பப்பட்டன. இதிலும் சாதனை நிகழ்ந்தது. ஏறத்தாழ 10 லட்சம் பேர் இந்நிகழ்ச்சியை விரும்பிப் பார்த்ததாக ஆஆஇ அறிவித்தது.

உங்களுக்குத் தெரியுமா?

1. "ஆஷ்ரிதா ஃபர்மான்' (Ashritha Furman) என்ற அமெரிக்கர் "சாதனையாளர்களின் சாதனையாளர்' என்று போற்றப்படுகிறார். இவர் 500 உலக சாதனைகளைப் புரிந்துள்ளார்.

2. "அருளானந்தம்' என்ற கனடா வாழ் தமிழர் ஏறக்குறைய 50 முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளார். இதன் மூலம் கிடைக்கும் தொகையை இவர் உலகெங்கிலும் உள்ள ஏழைக் குழந்தைகளின் நலனுக்காகச் செலவிடுகிறார்.

3. ஓராண்டில் மேற்கொள்ளப்படும் சாதனைகளில் 8% மட்டுமே இந்நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படுகின்றன. சாதனை செய்பவர்கள் ஒவ்வொருவரது வீடியோ ஆதாரங்களும் இந்நிறுவனத்தின் சர்வரில் சேமித்து வைக்கப்படுகின்றன.

4. அமெரிக்க அதிபர் ஒபாமா சமூக வலைதளத்தில் தன் கணக்கைத் துவங்கியபொழுது 4 மணி நேரத்திற்குள் ஒரு மில்லியன் மக்களால் தொடரப்பட்டார். இது வேறெந்த உலக அதிபர்களாலும் முறியடிக்கப்பட முடியாத சாதனை என ஏற்றுக் கொள்ளப்பட்டது.

5. ஒவ்வோர் ஆண்டும் இதில் உள்ள விவரங்கள் சரிபார்க்கப்பட்டு சேர்க்கவோ நீக்கவோ படுகின்றன.

6. சாதனையாளர்களுக்கு இந்நிறுவனத்தால் வழங்கப்படும் சான்றிதழை உலக நாடுகள் அனைத்தும் அங்கீகரிக்கின்றன. இதன் காரணமாக எந்த ஒரு நாட்டிற்கும் அவரால் எளிதாக "விசா' பெற முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.