இளமையில் வெல்!
பவன் மணிப்பூரில் வசிக்கும் சிறுவன். அவனுக்குப் பதினாறு வயதுதான் ஆகிறது. காலையில் தினமும் சரியாக 5.00 மணிக்குக் கண் விழிப்பான்.


பவன் மணிப்பூரில் வசிக்கும் சிறுவன். அவனுக்குப் பதினாறு வயதுதான் ஆகிறது. காலையில் தினமும் சரியாக 5.00 மணிக்குக் கண் விழிப்பான். காலைக் கடன்களை முடித்த பிறகு நடக்கத் தொடங்குவான். நடை என்றால் அப்படி ஒரு நடை! ஒரு மணி நேரம்...? இரண்டு மணி நேரம்...? இல்லையில்லை....! தொடர்ந்து நான்கு மணி நேரம்!
சரியாக காலை 9.00 மணிக்குத் தனது காலை உணவை எடுத்துக் கொள்வான். பிற சிறுவர்கள் போன்று அரிசியோ, கோதுமை உணவோ இல்லை. பால், சில வாழைப்பழங்கள், தேன் ஆகியவை மட்டுமே அவன் காலை உணவு!
பிறகு பள்ளிக்குச் செல்வான். மாலையில் நண்பர்களுடன் இரண்டு மணி நேரம் விளையாடுவான். சாப்பிட்ட பிறகு இரவு அரை மணி நேரம் தியானம் செய்வான். ஞாயிற்றுக் கிழமை என்றால் சிறுவர்களுக்குக் கொண்டாட்டம்!
ஆனால் கன்பாவிற்கோ அது ஒரு கூடுதல் சுமை! காரணம் அவன் கட்டாயம் ஏழு மணி நேரம் தொடர்ந்து நடக்க வேண்டும். இந்த வழக்கத்திற்கு ஒரு நாள் ஓய்வு அளித்தாலும் அவனால் தன் கனவை எட்ட முடியாது!
ஏன் இத்தனை கடுமையான பயிற்சிகள்? உணவுக் கட்டுப்பாடு? அதுவும் ஒரு சிறுவனுக்கு? அவன் இலட்சியம்தான் என்ன? "எவரஸ்ட் சிகரத்தை எட்ட வேண்டும்' என்பதே கன்பாவின் கனவு! இந்த மணிப்பூர் சிறுவனின் பெயர் சற்றே நீளமானது. நம்மில் பலருக்கு உச்சரிக்கக் கடினமாக இருக்கும். "நமீரக்பாம் சிங்கீய்ன் கன்பா' (NZCEIRAKPAM CHING KHEIN GANBA) என்பதே அது! அவனது தந்தை "நரேக்பாம் தோம்பா' இளம் வயதிலேயே எவரெஸ்ட் சிகரத்தை எட்டி விட வேண்டும் என்பதில் மிக உறுதியாய் இருந்தார். ஆனால் அதற்கான பொருள் வசதியோ, வழிகாட்டுதலோ அவருக்குக் கிடைக்கவில்லை. அவர் அறிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான்! தங்கள் பகுதியில் வசித்த "டென்சிங் நார்கே' எவரெஸ்ட் சிகரத்தை எட்டி விட்டார் என்பதே அது!
அவர்களின் மூதாதையர்கள் காலம்காலமாய் ஒரு கதை கூறுவார்கள். கண்ணுக்குத் தெரியும் இமயமலையின் மறுபக்கத்தைக் காண இளைஞன் ஒருவன் விரும்பினானாம்! அதில் ஏறுவதையே தன் இலட்சியமாகக் கொண்டிருந்தானாம் அவன்! முதியவர்கள், "அந்த மலையில் ஏறியவர்கள் ஒருவரும் இறங்கி வந்ததில்லை! ஆகவே உன் எண்ணத்தைக் கைவிடு!'' என்றனராம்!
ஒரு இளைஞன் ஒரு பெளர்ணமி தினத்தன்று மலை ஏறத் தொடங்கினானாம்! அதற்குப் பிறகு அவன் திரும்பி வரவே இல்லையாம்! சீனாவில் இருந்து அந்த வழியாக வந்த யாத்ரீகர் ஒருவர் அவன் பெயரைச் சொல்லி அவன் இமய மலையில் இருப்பதாகவும், மலை ஏறுபவர்களுக்கு வழி காட்டுவதாகவும் கூறினார். அந்த இளைஞனின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் "நமீரக் பாம்' என்று அழைக்கப்பட்டனர்! இக்கதையால் ஈர்க்கப்பட்ட கன்பாவின் தந்தை எப்படியாவது இமயமலையில் ஏறிவிட வேண்டும் என்று உறுதி கொண்டார். ஆனால் அவரது உடல் நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை.
எனவே தன் மகனையாவது இமயமலையில் ஏறச் செய்ய விரும்பினார். அதற்காகத்தான் கன்பாவிற்கு இத்தனை கடுமையான பயிற்சிகள்! கன்பாவின் தந்தை தற்பொழுது கட்டுமானத் தொழிலில் ஒப்பந்ததாரராகவும், "பட்சோய்' என்ற கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராகவும் பணி புரிகிறார். மலை ஏற்றத்தில் முன் அனுபவம் இல்லாதவர் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிவிட முடியாது. ஆகவே அவர் கன்பாவை உத்தரகாசியில் உள்ள மலை ஏற்றப் பயிற்சி நிறுவனத்தில் (NEHRU INSTITUTE OF MOUNTAINEERING) சேர்ந்து பயிற்சி பெற உதவினார். இதனால் மிக இளம் வயதிலேயே கன்பா மலை ஏற்றம் குறித்த அறிவைப் பெற முடிந்தது! இரண்டு முறை அவன் மலை ஏற்றக் குழுவினருடன் பிற சிகரங்களில் ஏறினான். இந்த முன் அனுபவம் அச்சிறுவனுக்கு எவரெஸ்ட் மலை ஏறப் பெரிதும் உதவியது.
வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்ட குழு ஒன்று 2013ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிப் பயணம் மேற்கொண்டது. அவர்கள் மரியாதை நிமித்தமாக குடியரசுத் தலைவரை அவரது மாளிகையில் சந்தித்த பின் தமது பயணத்தைத் தொடங்கினர். அந்தக் குழுவில் கன்பாவும் ஒரு உறுப்பினர்! குடியரசுத் தலைவர் கொடி அசைத்து அந்தப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.
7-10-1996ஆம் ஆண்டு மணிப்பூரில் பிறந்த கன்பா 2013ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தபொழுது அவனுக்கு சரியாக 16வயது, ஏழு மாதங்கள், 11 நாட்கள் நிறைவடைந்து இருந்தன. எவரெஸ்ட் மலை ஏற்றத்தில் இது ஒரு புதிய சாதனையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. கன்பாவிற்கு முன் நொய்டாவைச் சேர்ந்த "அர்ஜுன் வாஜ்பாய்' என்ற ஒரு சிறுவன் எவரெஸ்ட் மலையை எட்டியிருக்கிறான். அவன் மலை ஏறிய பொழுது அவனுக்கு 16வயது, 11மாதங்கள், 18நாட்கள் ஆகி இருந்தது.
கன்பாவின் தந்தை எவரெஸ்ட் மலை ஏற விரும்புபவர்களுக்கு உடல் வலுவை ஏற்படுத்தும் பயிற்சிகளை அளிக்கிறார். ஏனெனில் எவரெஸ்ட் மலை ஏற உடல் வலுவே முதல் தகுதியாகக் கருதப்படுகிறது. எனவே "மணிப்பூர் மலை ஏற்றப் பயிற்சிக் கழகம்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்நிறுவனத்தின் மூலம் வசதியற்ற ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இலவசமாகப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்நிறுவனத்தில் மலை ஏற்றப் பயிற்சி மட்டுமல்லாது மலைக் காடுகளில் எப்படி உயிர் வாழ்வது? மலைகளில் தேடுதல் வேட்டை மற்றும் மீட்புப் பணிகள் ஆகியவற்றை எப்படி மேற்கொள்வது? போன்றவையும் கற்றுத் தரப்படுகின்றன.
தனது கடுமையான பணிகளுக்கு இடையேயும் கன்பாவிற்கு ஆனந்தம் அளிப்பது தொலைக்காட்சி பார்த்தல்..., மற்றும் கிடார் வாசித்தல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...