கருவூலம்: நயாகரா!
நயாகரா என்பது ஒரு ஆற்றின் பெயர்! ஆற்றின் பெயரே அருவிக்கும் வழங்குகிறது. இந்த ஆறு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சென்று வடக்காகத் திரும்பி ஓடிக் கொண்டிருக்கிறது! இப்படித் திரும்பும் முனையில்தான் அருவி உள்ளது!


நயாகரா என்பது ஒரு ஆற்றின் பெயர்! ஆற்றின் பெயரே அருவிக்கும் வழங்குகிறது. இந்த ஆறு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சென்று வடக்காகத் திரும்பி ஓடிக் கொண்டிருக்கிறது! இப்படித் திரும்பும் முனையில்தான் அருவி உள்ளது!
இதன் மேற்குக் கரையில் கனடா என்ற நாடு உள்ளது. கிழக்குக் கரையில் அமெரிக்கா உள்ளது. கனடாவையும் அமெரிக்காவையும் பிரிக்கும் எல்லையாக நயாகரா உள்ளது! வழியில் ஒரு பூங்கா உள்ளது. இது அரசின் உடைமை. 1885ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அமெரிக்காவிலேயே தொன்மை வாய்ந்த பூங்கா இதுதானாம்! இதனூடே புகுந்து நடந்தால் அருவிக்குச் சுருக்கு வழி. பூங்காவினுள் சென்றோம். மலையின் உச்சியில் இருந்துதானே அருவி கொட்டும் என்று மலையைத் தேடி மேலே பார்த்துக்கொண்டு சென்றோம். திடீரென்று ஒரு பேரிரைச்சல்! நயாகரா ஆறு தடதடவென்று அதல பாதாளத்தில் கொட்டிக் கொண்டிருந்தது. நாமே சமதரையில் நிற்பது போல் தோன்றும்! உச்சிப் பாறைகளில்தான் நிற்கிறோம் என்பது அப்போதுதான் தெரிந்தது!
நமக்குக் கீழே ஆறு கரை புரண்டு ஓடி வந்து இடி முழக்கத்துடன் படு பாதாளத்தில் பாய்கிறது. பாறைகளில் விழுந்து முட்டி மோதி மீண்டும் மேலெழும்பித் தாவி தண்ணீர்த் திவலைகளைத் தெறிக்கிறது!
உலகில் வேறு எங்கும் இத்தகைய பேரெழிலைக் காண முடியாது என்று அமெரிக்கர்கள் அறை கூவுகிறார்கள்! "ஃபாதர் லூயிஸ் ஹென்னபின்' என்ற ஐரோப்பியர்தான் இதை முதல் முதலில் கண்டறிந்து உலகிற்கு அறிவித்தாராம்! இந்த பிரம்மாண்டமான அருவியின் பேரழகைக் காண்பதெற்கென்றே கோடான கோடி மக்கள் வந்து குவிகிறார்கள்! ஆண்டொன்றுக்கு 14 மில்லியன் பேருக்கு மேல் வருவதாகக் கணக்கு இருக்கிறது.
இங்குள்ள சுற்றுலாத் துறையினர் பயணிகளை மகிழ்விக்க பல ஏற்பாடுகள், வசதிகள் செய்திருக்கிறார்கள். ஆற்றில் படகு விடலாம்! வானிலேறி வட்டமிட்டுப் பார்ப்பதற்கு ஹெலிகாப்டர்கள் விடுகிறார்கள்! நெடிதுயர்ந்த ஒரு கோபுரத்தின் உச்சியில் இருந்தும் அருவியைக் காணலாம்! ஆடம்பர விடுதிகள், அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள், கடைகள், சோலைகள், பசும்புல் தரைகள் என கண்களுக்கு நிறைவு தரும் காட்சிகள் அருவியைச் சுற்றி இருக்கின்றன. அமெரிக்கர்கள் தங்கள் பகுதியில் விழும் அருவியை அமெரிக்க அருவி என்றும், கனடா நாட்டினர் தங்கள் பகுதியில் விழும் அருவியை கனடா அருவி என்றும் அழைக்கிறார்கள்.
கனடாவில் விழும் அருவி குதிரையின் குளம்பில் அடிக்கும் லாடத்தைப் போன்று இருப்பதால் இதனை அவர்கள் குதிரை லாடம் என்று அழைக்கிறார்கள். அமெரிக்க அருவியில் தண்ணீர் 10 சதவீதம்தான் விழுகிறதாம். எஞ்சிய பகுதி முழுவதும் இந்த லாடப் பாறையில் கொட்டுகிறது! அக்கரைக்கும் இக்கரைக்கும் விரிந்த ஆற்றில் இறங்குவதோ, குளிப்பதோ நினைத்துப் பார்க்க இயலாது!
உச்சியில் இருந்து கீழே விழும் அருவியின் உயரம் 170அடி! அது அப்படியே பூமியைத் துளைத்து இன்னுமோர் 170அடி ஆழத்திற்கு ஊடுருவிச் சென்று விடுகிறதாம்! இந்த அருவி பாதி ஆகாய அருவியாகவும், பாதி பாதாள அருவியாகவும் இருக்கிறது. இந்த அழகை வர்ணிக்க வார்த்தைகள் கிடையாது!
இவ்வளவு தண்ணீர் இந்த ஏரிக்கு எங்கே இருந்து வருகிறது? ஈரி, ஹ்யூரன், மிச்சிகன், சுபீரியர் என்னும் நான்கு மாபெரும் ஏரிகளிலிருந்து இந்தத் தண்ணீர் வந்து ஆறாய் ஓடி அருவியாய் கொட்டுகிறது. மீண்டும் ஆறாகப் பெருக்கெடுத்து கனடாவில் உள்ள ஒன்டாரியோ என்ற ஏரியில் சேர்கிறது. மீண்டும் அங்கிருந்து செயின்ட் லாரன்ஸ் என்ற பெயரோடு ஆறாகி இறுதியில் அட்லாண்டிக் பெருங்கடலில் கடலோடு கடலாய்க் கலந்து விடுகிறது.
முன்பெல்லாம் 2லட்சத்து 2ஆயிரம் கன அடி தண்ணீர் இந்த அருவியில் கொட்டியதாம். இப்போது இதில் பாதியை மின் உற்பத்திக்காக அமெரிக்காவும் கனடாவும் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.
அரை வட்ட வடிவமாகத் தோன்றும் லாடப் பாறையில் கொட்டும் அருவியும் அரைவட்ட வடிவமாகவே காணப்படுகிறது. நெடிதுயர்ந்த பாறைகளால் வளைந்த சுவர் போல சூழப்பட்டு குகை போல் இந்த இடம் உள்ளது. இதைத்தான் "பனிமூட்டப்பாவை' என்று அழைக்கிறார்கள். பயங்கரமான இந்தப் பனிப்பாவைக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு நெருங்கி மக்களை அழைத்துச் சென்று காட்டுகிறார்கள். இதற்கென அமெரிக்க அருவிப்பகுதியில் ஒரு படகுத்துறை இருக்கிறது. அனைத்தும் பெரிய பெரிய விசைப்படகுகள். சிறிய கப்பல் என்றே அழைக்கலாம். மூன்று தளங்கள் கொண்ட இந்த விசைப்படகில் மக்களை ஏற்றிக்கொண்டு லாடப் பாறைக்கு அருகே ஆற்றின் நடுவே நிறுத்துகிறார்கள்! இந்த அனுபவம்தான் அருவிக்காட்சியிலேயே ஒப்பற்றதோர் அனுபவமாகும்.
அங்குள்ள பாறையின் குகைக்குள் கப்பல் நெருங்க நெருங்க கடுங்குளிரில் உடம்பு வெடவெடவென நடுங்குகிறது. அருவி செய்யும் இடிமுழக்கம் வேறு! அம்புகளைப்போல் அருவியின் சாரல் உடம்பைத் துளைக்கிறது. கப்பலில் ஏறுமுன்பே கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டுவிடவேண்டும்! உடம்பு நனைந்து விடாமல் இருக்க நீளமான பிளாஸ்டிக் கோட்டுகளை இங்கேயே தருகிறார்கள். இவற்றால் உடம்பு தலை யாவற்றையும் நன்கு மூடிப்
போர்த்திக் கொள்ள வேண்டும். போகப் போகப் ஓவென்ற இரைச்சலுடன் காற்று புயல் போன்று நான்கு புறத்திலிருந்தும் வீசும். போர்த்தியிருக்கும் போர்வையெல்லாம் சடசடவென்று படபடக்கும்! கைப்பிடிச் சுவர் போன்று கப்பலின் ஓரத்தில் இருக்கும் கம்பிகளையோ, தூண்களையோ கெட்டியாகப் பிடித்துக் கொண்டுதான் நிற்க முடியும்! இல்லையென்றால் காற்று ஆளைத் தள்ளிவிடும்! தூக்கிக் கொண்டு போனாலும் போகும்! அவ்வளவு வேகம்!
எதிரே தெரியும் பனிப்புயலுக்குள் எவ்வளவுதான் ஊடுருவிப் பார்த்தாலும் ஒன்றும் தெரியாது. கப்பல் கொஞ்சம் கொஞசமாய் மீண்டும் திரும்பி நகர்ந்து அமெரிக்க அருவிக் கரையில் இறக்கி விடுகிறது.
அமெரிக்கப் பக்க அருவியில் அமைந்துள்ள பாலம் வானவில் பாலம் என்று அழைக்கப்படுகிறது. சூரியன் ஒளி வீசும்பொழுது அருவியின் எதிரில் இப்பாலத்திற்கு அருகில் அழகான வானவில் தோன்றிக் காட்சியளிக்கிறது!
இருட்டிய பிறகு அழகிய இரவுக்கோலம் ஒன்றுள்ளது! அதைக் காண இரவு 7 மணிக்கு மேல் இங்கு வரவேண்டும். பளீர்...பளீர் எனத் திடீரென்று அந்த அருவித் தாரகைகள் பலவிதமான வண்ணங்களில் மின்னத் தொடங்கி ஆயிரக்கணக்கான வானவில்கள் வானிலிருந்து அறுந்து தொங்குவதுபோல் மஞ்சளாய், பச்சையாய், நீலமாய், சிவப்பாய், வெண்மையாய் பலவிதமான வண்ணக்கோலங்களில் நயாகரா நங்கை நாட்டியமாடுகிறாள்!
கனடாவின் கரையிலிருக்கும் உயரமான கட்டடம் ஒன்றிலிருந்து பல்வேறு வண்ணங்களில் ஒளியுமிழும் மின் விளக்குகளை அமைத்து அருவியின் மேல் விழும்படியாக ஒளிக்கதிர்களை வீசுகிறார்கள். அருவியின் தண்ணீர் தகடுகளை அந்த ஒளிக்கதிர்களால் அசையும் வண்ணப் பட்டுச் சேலைகளாய் மாற்றி விடுகிறார்கள். அமெரிக்கர்கள் தங்கள் பக்கத்திலிருக்கும் அருவிக்கு மணப்பெண்ணின் முகத்திரை என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண உலகெங்குமுள்ள பல்வேறு நாட்டிலிருந்தும் மக்கள் வந்து கூடுகிறார்கள்.
இவ்வழகிய அருவியைப் பார்வையிட "விஞ்ச்' என்னும் நகரும் தொங்கு பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் இந்த அருவி கனடாவில் இருக்கும் ஒன்டாரியோ என்ற ஏரியில்தான் விழுந்து கொண்டிருந்ததாம். பின்னர் பாறைகளை அறுத்துப் பின்னடைந்து வந்து தற்போது உள்ள இடத்தில் விழுகிறது என்று புவியியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
கடலூர் மு.சுந்தரமூர்த்தியின் "அமெரிக்காவில் கண்டதும் கேட்டதும்' நூலிலிருந்து...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...