ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

இளமையில் வெல்! அனுபவ் வாத்வா!

பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் சிறுவன் என்ன செய்வான்? விளையாடலாம்! வீட்டுப் பாடம் செய்யலாம்! தொலைக்காட்சி பார்க்கலாம்! ஆனால் 16வயதுச் சிறுவன்

News image
Updated On :29 மே 2016, 10:32 am

என். பாலசுப்ரமணியன்

பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் சிறுவன் என்ன செய்வான்? விளையாடலாம்! வீட்டுப் பாடம் செய்யலாம்! தொலைக்காட்சி பார்க்கலாம்! ஆனால் 16வயதுச் சிறுவன் "அனுபவ் வாத்வா' தன் சொந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை கவனிக்க வேண்டும்!!

 ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆனால் உண்மை!

 இவர் ஹரியானா மாநிலம் ஆரவாலியில் உள்ள "பாத்வேஸ்' சர்வதேசப் பள்ளியில் படிக்கிறார். ஒரு நாள் அவர் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் சாலை ஓரத்தில் சேதமடைந்த டயர்களைச் சிலர் எரித்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்தார் அனுபவ். அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகவும், சுவாசிக்க முடியாமலும் இருந்தது. அவர்களை அணுகி கேட்டபொழுது, "சேதமடைந்த டயர்கள் எதற்கும் பயன்படாது' என்றும், "அவற்றை அப்புறப்படுத்த அதிகம் செலவு பிடிக்கும்! அதனால் எரிக்கிறோம்!' என்றும் கூறினர்.

 அனுபவ் தகவல் வலையத்தில் உபயோகமற்ற டயர்களைப் பயனுள்ள முறையில் அப்புறப்படுத்தும் வழிகளைத் தேடினார். "பைரோலைஸிஸ்' (PYROLYSIS) என்ற முறையில் டயர்களை மீள் சுழற்சி செய்யும்பொழுது அதிலிருந்து எரிபொருள், மூன்றாம் தர ரப்பர் கழிவு போன்றவற்றைப் பெற முடியும் என்பதைக் கண்டறிந்தார்.

 அப்படிப் பைரோலைசிஸ் முறையைச் செய்யும் நிறுவனத்திடமிருந்து அனுமதி பெற்றார். ஏனெனில் ஹரியானாவின் பல பகுதிகளில் உபயோகமற்ற டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உடைந்த ரப்பர் கழிவுகள் அங்கங்கே போடப்பட்டிருக்கும். இவற்றை அப்புறப்படுத்துவதன் மூலம் தூய்மை மற்றும் சூழல் மேம்பாடு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார்.

 எனவே தனது பெற்றோர்களின் உதவியுடன் 15-12-2015 அன்று "டையர்லெஸ்லி' (TYRELESSLY) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். தன் நிறுவனம் குறித்து தகவல் வலையத்திலும், செய்தித்தாள்களிலும் விளம்பரம் செய்தார்.

Story image

 "உங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள டயர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை இலவசமாக நாங்கள் அப்புறப்படுத்துகிறோம்! மிகப் பாதுகாப்பாக அவற்றை மறு சுழற்சி செய்கிறோம். ஆகவே அவற்றை நீங்களாகவே எரித்து விடாதீர்கள்!' என்று விளம்பரம் செய்தார்.

 ஹரியானாவில் மிகவும் உள்ளடங்கிய பகுதியில் தொழிற்சாலை ஒன்று இருந்தது. தங்கள் தொழிற்சாலைக் கழிவுகளை அவர்கள் அருகில் உள்ள அரசுப் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் கொட்டினர். இதனால் சுகாதாரச் சீர்கேடு, மாசு மற்றும் ஆக்கிரமிப்பு ஆகியவை ஏற்பட்டன. இந்த விளம்பரத்தைக் கண்ட பொதுமக்களே அந்த இடத்தைச் சுத்தம் செய்து தருமாறு வேண்டினர்.

 அனுபவ் பெரிதும் மகிழ்ந்தார். காரணம் முதல் பணியே பெரிய பணியாகக் கிடைத்ததுதான்! தன் தந்தையிடம் பொருளாதார உதவி பெற்று அப்பணியை வெற்றிகரமாக முடித்தார்! அங்கிருந்து எடுக்கப்பட்ட கழிவுகளை மறுசுழற்சி செய்ததன் மூலம் எரிபொருள், உயவு எண்ணை மற்றும் இரண்டாம் தர பிளாஸ்டிக் போன்றவை கிடைத்தன. அவற்றைத் தேவைப்படும் சிறு தொழிற்சாலைகளுக்கு விற்றதன் மூலம் நல்ல வருவாய் கிடைத்தது.

 இம்முறையின் மூலம் கிடைக்கும எரிபொருள் மற்றும் உயவு எண்ணை (LUBRIC ANT OIL) தொழிற்சாலைகளுக்குப் பயன்பட்டன.  இரண்டாம் தர ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு மிதியடிகள், துடைப்பான்கள் ஆகியவைகளும் தயாரிக்கப்படுகின்றன. இதனால் இப்பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது!

 தற்பொழுது அவருடன் சில இளைஞர்களும், நண்பர்களும் ஆர்வமுடன் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். "சுற்றுச் சூழல் மாசுபாட்டைக் குறைக்க தன்னாலான சிறு முயற்சியே இது' என்று கூறுகிறார் அனுபவ்!

 இவர் தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து (TECH APTO) "டெக் ஆப்டோ' என்ற கணினி மென்பொருள் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருக்கும் தொழிற்சாலைக் கழிவுகளையும் அகற்ற வேண்டி அரசு இவரை அழைத்திருக்கிறது. இதுவே தனக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகக் கருதுகிறார் இந்த இளம் தொழிலதிபர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.