திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

பட்டாபிஷேகம்!

ராமபிரானுக்கு முடிசூட்டு விழா! அயோத்தி நகர் முழுவதும் கோலாகலமாக இருந்தது. மன்னன் தசரதன் முதல் அரண்மனை சிப்பாய்கள் வரை ராமபட்டாபிஷேகத்தைக் காண ஆவலுடன் காத்திருந்தனர். 

News image
Updated On :23 டிசம்பர் 2017, 6:53 am

இராசமாணிக்கம்

ராமபிரானுக்கு முடிசூட்டு விழா! அயோத்தி நகர் முழுவதும் கோலாகலமாக இருந்தது. மன்னன் தசரதன் முதல் அரண்மனை சிப்பாய்கள் வரை ராமபட்டாபிஷேகத்தைக் காண ஆவலுடன் காத்திருந்தனர். 
ராமரின் தலையை அலங்கரிக்கப்போகும் கிரீடம் மிகப் பெருமையுடன் காணப்பட்டது! பின்னே? நவரத்தினங்கள் பதித்த பொற்கிரீடம் அது! தகதக என்று ஜொலித்த அது ஒரு பட்டுத்துணியில் வைக்கப்பட்டிருந்தது. மறுநாள் ராமரின் தலையை அலங்கரிக்கப் போகிறது! 
கிரீடத்திற்கு கர்வம் தலைக்கேறியது! 
அருகில் ஒரு ஓரமாய் இருந்த பாதுகைகள் இருந்தன! கிரீடம் அந்தப் பாதுகைகளைப் பார்த்தது! அதைச் சீண்டி வம்புக்கு இழுக்க எண்ணியது. 
கிரீடம் பாதுகையிடம், ""நாளையிலிருந்து நான் ராமபிரானின் தலையை அலங்கரிக்கப் போகிறேன்! தன் கைகளால் அவர் என்னை தினமும் காலையில் தொட்டு எடுத்துத் தலையில் வைத்துக் கொள்ளுவார்! உன்னைப் பார்த்தால்தான் பாவமாக இருக்கிறது! ஹூம்...என்ன செய்வது?...''
""ஏன்? எனக்கென்ன குறைச்சல்?'' என்று கேட்டது பாதுகை.
""இதுகூடத் தெரியவில்லையா?...நீ நாளை முதல் ராமரின் காலின் கீழ் மிதிபடப்போகிறாய்! மிதித்து, மிதித்து உன்னைத் தேய்ப்பார் அவர்! நீயும் நாளடைவில் தேய்ந்துவிடுவாய்! உன் கதி அதுதான்!''
""என்ன செய்வது? என் நிலைமை அப்படி....ஏதோ அவரது பாதத்தையாவது நான் தாங்கிக் கொள்கிறேனே...அதுவே போதும்!'' என்றது பாதுகை!
""இப்படி ஏதாவது சொல்லி ஆறுதல் அடைய வேண்டியதுதான்! உனக்கு வேறே வழி?'' என்றது கிரீடம். 
பாதுகை அமைதியாகிவிட்டது. 

மறுநாள் பொழுது விடிந்தது. கைகேயின் கேட்ட வரத்தால் ராமர் காட்டுக்குச் சென்றார். அவரது பாதத்தில் பாதுகை. ராமருடன் கூடவே சென்றது. பட்டுத் துணியில் கிரீடம் சீந்துவாரற்று கிடந்தது!
சில நாட்கள் ஆயின. ஒருநாள் பரதன் ராமரின் பாதுகையை தன் தலையில் சுமந்துகொண்டு வந்தான். அதுமட்டுமல்ல....அந்தப் பாதுகையை சிம்மாசனத்தில் வைத்துப் பூஜித்து அரசாட்சி செய்தான்! மிகச் சிறந்த மரியாதை பாதுகைக்கு வழங்கப்பட்டது. கிரீடத்தின் கர்வம் முற்றிலும் விலகியது! தெய்வத்தின் காலுக்கு இருக்கும் சிறப்பை அது உணர்ந்து கொண்டது! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.