Enable Javscript for better performance
கருவூலம்: யுவான் சுவாங்!- Dinamani

சுடச்சுட

  கருவூலம்: யுவான் சுவாங்!

  By DIN  |   Published on : 14th October 2017 10:52 AM  |   அ+அ அ-   |    |  

  s2

  யுவான்சுவாங் (602-664) சீன நாட்டைச் சேர்ந்த புத்தத் துறவி. இவர் மிகச் சிறந்த கல்வியாளர்! மேதை! துறவி! இந்த மிகச் சிறந்த கல்வியாளர் பயணம்செய்வதில் மிகவும் விருப்பம் உள்ளவர்! மொழிகள் கற்பதிலும், கற்றவற்றை மொழி பெயர்ப்பதிலும் ஆர்வம் உள்ளவர். இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் கூட!
  இவர் புத்தத் துறவி ஆனதால் புத்தர் பிறந்த இடத்தை நேரில் பார்ப்பது, புத்தருடைய கொள்கைகளை விரிவாக ஆராய்ந்து அறிவது என்ற உயர்ந்த
  நோக்கங்களுடன் பல நாடுகள், பயங்கரக் காடுகள், பாலைவனங்கள், மலைகள் என பல இடங்களைக் கடந்து நடைப்பயணமாக இந்தியாவுக்கு வந்தவர்!
  தமிழகத்தின் காஞ்சிபுரம் வரை வந்துள்ள இவர், தான் பார்த்த, அறிந்து கொண்ட பல்வேறு தகவல்களையும் குறிப்புகளாக எழுதி வைத்து, பின்னாளில் தொகுத்துநூலாக வெளியிட்டார்!

  யுவான் சுவாங்கின் இளமைக் காலம்!
  இவர் சீன நாட்டின் ஹெனானில் உள்ள லூவோயங்குக்கு அருகில் உள்ள ஓர் இடத்தில் கி.பி. 602இல் பிறந்தார். இவர் பிறந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
  பல தலைமுறைகளாக நல்ல கல்வியறிவு பெற்றவர்கள்!
  யுவான் சுவாங்கும் சிறுவயதிலேயே புத்திசாலியாகவும், ஊக்கமும், உற்சாகமும் கொண்டவராக இருந்தார். தொடக்கக் கல்வியைத் தன் தந்தையிடமே கற்றார்.
  மிக சிறு வயதிலேயே தன்னுடைய ஒரு அண்ணன் போல் புத்தத் துறவியாக மாறும் எண்ணம் யுவான் சுவாங்கிற்கு வந்துவிட்டது. கி.பி. 611இல் தந்தை இறந்ததும் தன் அண்ணனுடன் லுவோங்கில் இருந்த புத்த மடாலயத்திற்குச் சென்று தங்கியிருந்து கல்வி கற்கத் தொடங்கினார். அங்கு பெளத்த மதத்தின் இருபிரிவுகளான தேர வாத பெளத்தம் (மிகப் பழமையான பிரிவு) மஹாயான பெளத்தம் என இரண்டையும் கற்றார்.
  இந்நிலையில் கி.பி. 618இல் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் சாங்சான் என்ற ஊரில் இருந்த மடத்திற்குச் சென்று மேலும் பல நூல்களைக்
  கற்றுத் தேர்ந்தார். தன் 20ஆவது வயதில் ஒரு முழுமையான புத்தத் துறவியாக ஆனார். பின்னர் புத்த மத நூல்களைத் தேடி சீனா முழுவதும் பயணம்செய்தார்.
  அக்காலத்தில் சீனாவில் இருந்த புத்த மத நூல்கள், ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தன. அதனால் யுவான் சுவாங்கிற்கு புத்தர் பிறந்த இந்தியாவிற்கே சென்று மத நூல்களைக் கற்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
  தன் எண்ணம் ஈடேற வேண்டும் என்றால் சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்பதை உணர்ந்து கி.பி.626இல் சமஸ்கிருதம் கற்கத் தொடங்கினார். அப்பொழுதுபுத்த பிட்சு பாஹியான் பற்றியும் தெரிந்து கொண்டார். பின்னர் கி.பி. 629இல் தன் இந்திய பயணத்தைத் தொடங்கினார்.

  நீண்ட நெடும்பயணக்கதை!
  இவர் இந்தியாவிற்கு வர வேண்டும் என்ற ஆவலில், மிகக் கடுமையான சுழல் நிலவிய கோபி பாலைவனம், எரிதழல் மலைகள்(FLAMING MOUNTAINS), பிடல் கணவாய் (BEDAL PASS), அன்றைய பட்டுப் பாதையில் (SILK ROAD) இருந்த பல நகரங்கள் பாம்யான் மலைகள் (BAMYAN HILLS), சைபர் கணவாய் (SIBER PASS), அன்றைய காந்தார நாட்டின் மலைகளும், காடுகளும் நிறைந்த பகுதிகள் என பல இடங்களைக் கடந்து வந்தார்.
  காந்தார நாட்டின் "ஆதினப்பூர்' என்ற நகருக்கு வந்தவுடன், தான் இந்தியாவிற்குள் வந்துவிட்டதாகக் கருதியதைப் பற்றியும் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
  பின்னர் "கைபர் கணவாய்' வழியாக காந்தாரத்தின் தலைநகரான "புருஷபூரா' இன்றைய பெஷாவர் வழியாக "செவட்' மற்றும் "புனர்' ...பள்ளத்தாக்குகளையும்
  சிந்து நதியையும் கடந்து கி.பி. 633இல் காஷ்மீரத்திற்கு வந்து சேர்ந்தார்.
  யுவான் சுவாங் தான் வரும் வழியில் தான் கண்ட புத்த மடாலயங்களையும், வணங்கிய பெளத்த ஆலயங்களையும், பார்த்த பெளத்த ஸ்தூபிகளைப் பற்றியும்பல தகவல்களை பதிவு செய்துள்ளார். மேலும் ஆயிரக்கணக்கான புத்த பிட்சுகளையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
  இந்தியாவின் "மந்திப்பூர்' (ம.பி.), ஜலந்தர், குளு பள்ளத்தாக்கு, மதுரா, கன்னோஷ் (பேரரசர் ஹர்ஷரின் தலைநகரம்) அயோத்தியா, சாராவதி, (புத்தர் காலத்தில்புகழ் பெற்றிருந்த கங்கைக் கரை நகரம்) வைசாலி, வாரணாசி, பாடலிபுத்திரா, புத்த கயா, நாளந்தா, நாகர் ஜுன மலை, (ஆந்திரா) அமராவதி, பல்லவர்களின்தலைநகரமான காஞ்சிபுரம் என காஷ்மீரம் முதல் தென்னிந்திய காஞ்சி வரை பயணம் செய்துள்ளார். காஞ்சிபுரத்தில் இருந்த பெளத்த பல்கலைக் கழகத்தில்சிறிது காலம் தங்கியிருந்து பல நூல்களைக் கற்றுள்ளார்.
  காஞ்சியிலிருந்து தன் நாட்டிற்குப் பயணத்தைத் தொடர்ந்தார். போகும் வழியில் பேரரசர் ஹர்ஷரின் அழைப்பிற்கு இணங்கி கன்னோஷில் நடைபெற்றமஹாயான புத்த மகா நாட்டிலும் மற்றும் "பிரயாக்"கில் நடந்த கும்பமேளா விழாவிலும் கலந்து கொண்டார்.
  அதன்பின் கைபர் கணவாய் வழியாக 645இல் தன் நாடான சீனாவின் "செங்கான்' நகரத்திற்குத் திரும்பிச் சென்றார்! அங்கு அவருக்கு மிகப் பெரிய வரவேற்பு
  அளித்துப் பெருமைப் படுத்தினர்.
  தன் 17 ஆண்டுகாலப் பயணத்தில் (629 - 645) யுவான் சுவாங் எண்ணற்ற நூல்களைக் கற்றதுடன், சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 657 புத்த மத நூல்களைச்சேகரித்துத் தன்னுடன் எடுத்துச் சென்றார்.
  கி.பி. 646இல் சீன "டாங்' பேரரசரின் வேண்டுகோளுக்கு இணங்கி தன் நீண்ட நெடும் பயணத்தைப் பற்றி, சீன மொழியில் (தற்போது -ஆங்கிலத்தில் GREAT TANG RECORDS ON THE WESTERN REGION) ஒரு சுய சரிதை நூலினை எழுதினார். ஆயிரக்கணக்கான தகவல்கள் அடங்கிய இந்நூல், மத்திய ஆசிய
  வரலாற்றை அறிந்து கொள்வதற்கான கருவூலமாக இன்று வரை திகழ்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள்பலவற்றின் வரலாற்றில் யுவான் சுவாங்கும் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார்.
  யுவான் சுவாங் இந்தியாவில் இருந்து, தான் கொண்டு சென்ற 657 சமஸ்கிருத புத்த மத நூல்களையும் சீன மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
  மேலும் கி.பி. 650 இல் "பியான்ஜி' என்னும் புத்த பிட்சு யுவான் சுவாங்கின் பயண தகவல்கள், மற்றும் குறிப்புகளைத் தொகுத்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

  மேலும் சில தகவல்கள்!
  கோபி பாலைவனம்!
  இது வடக்கு சீனாவிற்கும், தெற்கு மங்கோலியாவிற்கும் இடையே பரவியுள்ளது. இதன் பெரும் பகுதி கற்களால் ஆனது. (சாதாரணமாக நாம் காணும்மணற்பாங்கான பாலைவனம் போன்றது அல்ல!) 1500 கி.மீ. நீளமும், 800 கி.மீ. அகலமும் 12,95,000 ச.கி.மீ. பரப்பளவும் கொண்ட கோபி பாலைவனம் உலகின்மிகப் பெரிய பாலைவனங்களில் ஒன்று!

  பாமியன் புத்தர் சிலைகள்!
  பாமியன் மலைகளும், பாமியன் பள்ளத்தாக்கும் மத்திய ஆப்கானிஸ்தானில் உள்ளது! இங்குள்ள மலைச்சரிவுகளில் புத்தர் நின்ற நிலையிலான தோற்றத்தில்மிகப் பெரிய இரண்டு சிலைகள் செதுக்கப்பட்டிருந்தன.
  இதில் பெரிய புத்தர் சிலை 57 மீ. உயரமும், சிறிய புத்தர் சிலை 35 மீ. உயரமும் கொண்டது. இச்சிலைகள் 2001இல் தலிபான் அரசியல் சண்டைகளால் வெடி
  வைத்துத் தகர்க்கப்பட்டன.
  யுவான் சுவாங் தன் நூலில் கி.பி. 630 இல் இச்சிலைகளைப் பார்த்ததாகவும், தங்கம் மற்றும் பல அழகான நகைகளால் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு
  இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

  கோச்சாங் மலைகள்!
  GAOCHANG MOUNTAINS - அல்லது - எரிதழல் மலைகள்! (FLAMING MOUNTAINS)இந்த மலை சீனாவின் சிஞ்சியாங் பகுதியில் இருக்கிறது., 100 கி.மீ. நீளமும், 5 முதல் 10 கி.மீ. அகலமும், 800 மீ. உயரமும் உள்ள சில சிகரங்களும்
  கொண்டது. சிவப்பு மணற் பாறைகளால் ஆன தாவரங்கள் ஏதுமற்ற தரிசான, மண் அரித்துச் செல்லப்பட்ட மலைகள் இவை! மண்ணரிப்பால் ஏற்பட்ட
  வரிவரியான இடுக்குகளாலும், சிவப்பு நிறத்தாலும் எரிவது போல் காட்சியளிப்பதால் எரிதழல் மலைகள் எனவும் அழைக்கப்படுகிறது.
  இம்மலைகளின் அடிவாரத்தில் பல சிறு நகரங்களும் பெளத்த மடாலயங்களும் உள்ளன. அந்நாளில் பட்டுப் பாதையில் (SILK ROAD) பயணித்தவணிகர்களும் பெளத்த குருமார்களும் இவ்வூரில் தங்கிச் சென்றுள்ளனர்.
  இம்மலையின் கோச்சாங் கணவாய்ப் பகுதியில் பழைமையான பெளத்த குகைக் கோயில்கள் உள்ளன. மேலும் இக்குகைகளில் புத்தரின் ஆயிரக்கணக்கானசுவரோவியங்களும் காணப்படுகின்றன. சீனாவின் மிக வெப்பமான பகுதி இது! கோடை காலத்தில் மிக அதிகமாக வெப்பம் நிலவுகிறது.
  இங்குள்ள குகைக்கோயில்கள் பற்றிய குறிப்புகளும் யுவான் சுவாங் நூல்களில் உள்ளன.

  பட்டுப் பாதை! (SILK ROAD)
  மிகவும் பழைமையான வணிகப் பாதை இது! கி.மு. 114 முதல் கி.பி. 1450 வரை பிரசித்தி பெற்று இருந்தது. நீர் மற்றும் நிலத்தின் வழியான பல பாதைகளை
  ஒருங்கிணைத்து பட்டுப்பாதை என அழைத்தனர்.
  6500 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாதை மூலம் சீனா, பண்டைய எகிப்து, பாரசீகம், மெசபடோமியா, இந்தியா, ரோம் என பல நாடுகள் இணைக்கப்பட்டிருந்தது.
  சீனாவின் பட்டுத் துணிகள் அதிக அளவில் இப்பாதை வழியாக விற்பனைக்குக் கொண்டு செல்லப்பட்டதால் "பட்டுப் பாதை' எனப் பெயர் பெற்றது.

  கைபர் கணவாய்!
  ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பகுதியில் "ஸ்பின் கர்' மலையின் வடகிழக்கு பகுதியில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
  கணவாய். வரலாறு படிக்கும் அனைவரும் நன்கு அறிந்த கைபர்-போலன் கணவாய்களில் இது ஒன்று. பட்டுச் சாலையின் ஒரு பகுதி!

  பாஹியான்! (337-422)
  இவர் சீன நாட்டின் புத்த பிட்சு! கி.பி. 399 இல் தொடங்கி கி.பி. 412 வரையிலான காலத்தில் நடைப்பயணமாக, யுவான் சுவாங்கிற்கும் முன்னதாகஇந்தியாவிற்கு வந்து சென்றார்!

  காந்தாரம்!
  இந்நாடு மஹாபாரதத்தில் சகுனி மற்றும் காந்தாரியின் நாடாகக் குறிப்பிடப்படும் காந்தாரமேதான்! இன்றைய பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதியில்இருந்தது அன்றைய காந்தார தேசம். சமீபத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியின் மூலம் இங்கு 30,000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்திருக்கலாம் என்றுகருதப்படுகிறது.
  இந்திய வரலாற்றில் சிறப்பான இடத்தைப் பெற்ற குஷாணர்கள் என்ற அரச வம்சத்தினர் (கி.பி. 35 முதல் கி.பி. 375 வரை) ஆட்சி செய்துள்ளனர். புகழ் பெற்ற
  காந்தார சிற்பக் கலை இவர்கள் காலத்தில் உள்ளதுதான்!
  இவர்களில் குறிப்பிடத்தக்கவரான பேரரசர் கனிஷ்கர் (கி.பி.128 - 151) காலத்தில் "புருஷபூரா' வில் (இன்றைய "பெஷாவர்') 400 அடி உயர கோபுரம் (TOWER) இருந்ததாக யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். பாமியன் புத்தர் சிலைகள் இவர் காலத்தில் உருவானவைதான்!

  காஞ்சிபுரம்!
  இந்நகரம் பரந்து விரிந்து இருந்ததாகவும், மக்கள் கல்வியிலும், வீரத்திலும் சிறந்து விளங்கியதாகவும் கூறுகிறார் யுவான் சுவாங்! மேலும் கெளதம புத்தர் தன்வாழ்நாளில் காஞ்சிக்கு வந்து சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

  நாளந்தா பல்கலைக் கழகம்!
  இது பிஹார் மாநிலத்தில் உள்ளது! கி.பி. 5ஆம் நூற்றாண்டில் துவங்கப்பட்டது! 14ஹெக்டேர் பரப்பளவில் இருந்த இந்தப் பல்கலைக் கழகத்தில் சீனா, பாரசீகம்,
  திபெத் என பிற நாட்டு மாணவர்களும் கல்வி கற்றுள்ளனர்.
  உலகின் மிகப் பழமையான பல்கலைக் கழகங்களில் இதுவும் ஒன்று! 10,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்களும், 1500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் கொண்டஇப்பல்கலைக் கழகம் 1197இல் துருக்கியர்களின் படையெடுப்பில் முற்றிலும் அழிக்கப்பட்டது!
  2014இல் மீண்டும் புதுப்பொலிவுடன் தொடங்கப்பட்டுள்ளது.
  சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே, பல்வேறு இன்னல்களுக்கு இடையே, மிக நீண்ட பயணத்தை மேற்கொண்டதும் அல்லாமல், அவற்றை முறையாகத்தொகுத்து ஆவணப்படுத்தியுள்ள யுவான் சுவாங் அவர்களின் முயற்சியும், செயலும் போற்றப்பட வேண்டியவை!
  தொகுப்பு:
  கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்.


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp