ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

முத்திரை பதித்த முன்னோடிகள்: எஸ். எஸ். வாசன்

நம் தமிழகத்தில் எத்தனையோ சாதனையாளர்கள் வாழ்ந்து உள்ளனர்!தமது உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் எத்தனையோ சாதனைகளை அவர்கள் புரிந்துள்ளனர்.

News image
Updated On :21 ஏப்ரல் 2018, 8:43 am

என். பாலசுப்ரமணியன்

நம் தமிழகத்தில் எத்தனையோ சாதனையாளர்கள் வாழ்ந்து உள்ளனர்!
தமது உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் எத்தனையோ சாதனைகளை அவர்கள் புரிந்துள்ளனர். தான் சாதித்ததோடு மட்டுமல்லாமல் எண்ணற்ற சாதனையாளர்கள் பலரை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை புகழ் ஏணியில் உயர்த்தி உள்ளனர். அத்தகைய சாதனையாளர்களுள்
ஒருவர்தான் திரு எஸ் எஸ் வாசன் அவர்கள் ஆவார்! இவரது இயற்பெயர் சீனிவாசன் என்பதாகும். ஒரே நேரத்தில் பத்திரிகைத் துறையிலும், திரைப்படத் துறையிலும் சாதனை புரிந்தவர் இவர்! இவரது மாபெரும் சாதனைகளுக்கு அடையாளமாக இவர் எடுத்த திரைப்படங்களும், இவரது பத்திரிக்கை ஆனந்த விகடனும் அழியாப் புகழ்பெற்று காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.  அன்புக் குழந்தைகளே! நீங்கள் பல திரைப்படங்களை விரும்பி பார்த்திருப்பீர்கள். சில பழைய தமிழ்த் திரைப்படங்கள் உலக திரைப்படங்களுக்கு சமமாக எடுக்கப்பட்டுள்ளன. நாம் ஒவ்வொருவரும் கட்டாயமாக பார்த்தே ஆக வேண்டும் என சில தமிழ் திரைப்படங்கள் உள்ளன. அவை, "ஒüவையார்', 'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'கர்ணன்'என்பனவாகும்.
இவற்றில் முதன்மையான திரைப்படம் ஆகிய "அவ்வையார்' 1953ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தை தயாரித்த எஸ் எஸ் வாசன்
தயாரிப்பாளர் மட்டுமின்றி பத்திரிக்கையாளர் மற்றும் இயக்குனர் என பல்வேறு திறமைகளை உடையவர் ஆவார்.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி என்னும் சிற்றூரில் 4.1.1904 ஆம் ஆண்டு வாசன் பிறந்தார். மிக இளம் வயதிலேயே இவரது
தந்தை காலமானார். இதனால் இவரது குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்தது.
குடும்பத்தின் பொருளாதார நிலையை நன்கு அறிந்த வாசன் பல சிறு தொழில்கள் புரிந்து பொருள் ஈட்டினார். அந்நாட்களில் சோப்பு, சீப்பு, கண்ணாடி, ஊசி,
பொம்மைகள் போன்றவை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. காரணம் அவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இங்கு இல்லை.
இப்பொருட்களின் தேவையை நன்கு அறிந்த வாசன் இவற்றை மொத்தமாக வாங்கி, "ஒரு ரூபாய்க்கு 144 பொருட்கள்' என விற்றார். விளம்பரம் செய்யாமல் எந்த
ஒரு பொருளையும் விற்க முடியாது என்பதை இவர் அறிந்து இருந்தார்.
தனது விளம்பரத்தை வெளியிட அவர் தேர்ந்தெடுத்த பத்திரிக்கையே ஆனந்தவிகடன் ஆகும். ஆனால் அப்பத்திரிக்கையில் இவரது விளம்பரம் வெளியாகவில்லை. எனவே அதற்கான காரணம் கேட்டறிய அதன் உரிமையாளர் வைத்தியநாதன் என்பவரை சந்தித்தார்.
அப்பத்திரிக்கை சரியான ஆசிரியர் இல்லாமல் விற்பனை மிகவும் மோசமாக இருந்தது. டிசம்பர் 1927 அன்று அதன் விற்பனை நிறுத்தப்பட்டது. ஜனவரி 1928 அன்று அப் பத்திரிக்கையை விலைக்கு வாங்கினார் திரு வாசன்! பிப்ரவரி 1928 முதல் அதே பெயரிலேயே மீண்டும் வெளியிட்டார்.
நவீன விளம்பரங்கள், அழகிய ஓவியங்கள் என அப்பத்திரிக்கை வாசகர்களை வெகுவாக கவர்ந்தது. அதுமட்டுமில்லாமல் மிகத் திறமை வாய்ந்த எழுத்தாளர்கள் ஓவியர்கள் என பலருக்கும் வாய்ப்பளித்து ஊக்கப்படுத்தினார். அன்றைய காலகட்டங்களில் வாசகர்களுக்கு முதன்முதலாக போட்டிகள் பலவற்றை நடத்தி பரிசளித்தார். இதனால் அப்பத்திரிகையின் விற்பனை பல மடங்கு உயர்ந்தது. அன்று தொடங்கி இன்றுவரை அப்பத்திரிகை தன் முத்திரையை வாசகர்களிடம் பதித்துக் கொண்டு இருக்கிறது!
பத்திரிக்கைத் துறையில் இருந்தபடியே திரைப்படத் துறையின் பக்கம் தன் கவனத்தை திருப்பினார் திரு. வாசன். 1936 ஆம் ஆண்டு இவரது "சதிலீலாவதி' என்ற முதல் திரைப்படம் வெளியானது. பிறகு, தமிழ், இந்தி என பல மொழிகளில் இவர் திரைப்படங்களை தயாரித்தார். அவற்றுள் மிக முக்கியமானவை "ஒளவையார்' மற்றும் "சந்திரலேகா' ஆகியவை ஆகும். சந்திரலேகா திரைப்படத்தை இவரே இயக்கினார். அதில் மிக பிரம்மாண்டமான அரங்கங்களை அமைத்து பல ஆயிரம் துணை நடிகர்களையும் நடிக்க வைத்தார். மிகுந்த பொருட்செலவில் "சந்திரலேகா' திரைப்படம் எடுக்கப்பட்டது.
இந்திய திரைப்பட வரலாற்றிலேயே வெளியிடப்பட்ட எல்லா மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடியது "சந்திரலேகா'.
அவர் எடுத்த மற்றொரு திரைப்படம் "அவ்வையார்'ஒரு மாபெரும் வெற்றிப் படமாகவும், காவியமாகவும் விளங்கியது.
அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபொழுது சென்னையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டிற்கு அலங்கார ஊர்திகளை அமைக்கும்
பொறுப்பை திரு வாசன் இடம் அளித்தார் அண்ணா. அதில் அழகிய ஊர்திகள் அணி வகுத்துச் சென்றன. பிரம்மாண்டமான அந்தப் பேரணியை செய்திப்படம்
ஆகவும் எடுத்தனர். அதற்கான வர்ணனைகளை கலைஞர் அவர்கள் வழங்க அந்த செய்திப் படம் பெரும் வரலாற்று ஆவணமாக விளங்கியது.
காலத்தை வென்று அழியாப் புகழ் பெற்ற இச் சாதனையாளர் 26.8.1969 அன்று காலமானார்.

அறிந்து கொள்வோம் வாருங்கள்

(1) அவ்வை மூதாட்டி விநாயகப் பெருமானின் பக்தையாக விளங்கினார். ஆகவே 1948ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று "ஒüவையார்' திரைப்படத்தின்
படப்பிடிப்பு துவங்கப்பட்டது.
(2) வாசன் பல அரசியல் தலைவர்களுடனும் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.ஆனாலும் அவர்கள் செய்த தவறுகளை தமது பத்திரிகை மூலமாக சுட்டிக் காட்ட தயங்கியது இல்லை.
(3) கல்கி கிருஷ்ணமூர்த்தி, மாலி, கோபுலு, சாவி, கொத்தமங்கலம் சுப்பு, ஜெயகாந்தன், ஓவியர்கள் மணியம், சில்பி போன்றவர்கள் வாசன் அவர்களால் ஆனந்தவிகடன் மூலமாக அழியாப் புகழ் பெற்றனர்.
(4) வாசன் 1964 முதல் 1969 வரை ராஜ்ய சபா உறுப்பினர் ஆகவும் பணி புரிந்து உள்ளார்.
(5) பத்திரிக்கைத் துறையில் பல புதுமைகளை செய்தவர் வாசனே ஆவார். "தீபாவளி மலர்' போன்றவை இவராலேயே அறிமுகம் செய்யப்பட்டன!
(6) தமது எல்லா படைப்புகளிலும் பிரம்மாண்டத்தை விரும்பிய வாசன் ஒரு காந்தியவாதியாக விளங்கினார். எளிமையை விரும்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.