
செல்வந்தனான பத்மசுந்தரன் சுவர்கத்தின் மகிமைகளையும், அழகையும் கேள்விப்பட்டு அங்கு செல்ல நினைத்தான். அன்றிரவு கடவுளை மிகவும் வேண்டினான். கடவுள் பிரசன்னமானார். ""பத்ம சுந்தரா, சுவர்கம் என்பது எளிதில் கிடைக்கூடியது அல்ல...நான் உனக்கு ஒரு பெட்டி தருகிறேன்....நீ செய்யும் ஒவ்வொரு அறச் செயலுக்கும் அதில் ஒரு காசு தோன்றும்! அவ்வாறு அந்தப் பெட்டியில் என்று ஆயிரம் காசுகள் சேருகிறதோ,....அன்று நீ சுவர்கத்துக்குச் செல்லத் தகுதியுடையவனாவாய்!'' என்று கூறி மறைந்தார்.
மறுநாள்.... பத்மசுந்தரன் சந்தித்த ஒரு ஏழைக்கு பசியாற உணவளித்தான்!.... உடனே கடவுள் தந்த பெட்டியில் ஒரு காசு தோன்றியது! அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது! உற்சாகமாகவும் இருந்தது. மறுநாள்....ஒரு நோய்வாய்ப்பட்டவனுக்கு மருந்துகள் வாங்கிக் கொடுத்தான். அன்றிரவும் மற்றொரு காசு தோன்றியது. ஒருநாள் ஒரு கல்விக்கூடத்திற்குச் சென்று அங்கு தன்னாலான உதவியை அந்தக் கல்விக்கூடத்திற்குச் செய்தான். மற்றொரு நாள்...பாதையில் கிடந்த முட்களை எடுத்து ஓரமாகப் போட்டான்....... வீதியில் தவித்த முதியவர் ஒருவரை கைத்தாங்கலாக அழைத்து வீட்டிற்குக் கொண்டு விட்டான். கால்நடைகளுக்கும், பறவைகளுக்கும், தீவனமும், விதைகளும், தண்ணீரும் தந்து ஆதரித்தான். கடவுள் தந்த பெட்டியில் காசுகள் சேர்ந்து கொண்டிருந்தன. சில நாட்கள் நிறைய அறச் செயல்கள் செய்ததால் பெட்டியில் வெகு வேகமாகக் காசுகள் சேரத் தொடங்கின! மனதில் அவனுக்கு மனதில் பக்குவமும் ஏற்பட்டுவிட்டது! முகத்தில் அருளொளி! சாந்தம்! அவன் பெட்டியிலிருந்த காசுகளை எண்ணிப்பார்க்கவில்லை....
பெட்டியில் 999 காசுகள் சேர்ந்து விட்டன! பத்மசுந்தரனுக்கு அது தெரியாது! அவன் அதை எண்ணிப் பார்த்தால்தானே?.....
காலை நேரம்.....ஒரு முதியவர் வந்தார்....அவர் பத்மசுந்தரனைப் பார்த்து, ""தம்பி!....நான் சுவர்கத்துக்குச் செல்ல ஆசைப்படுகிறேன்....நேற்று என்முன் கடவுள் தோன்றினார்....அவர் உனது செய்தி எல்லாவற்றையும் சொல்லி,.. உன் பெயர் மற்றும் ஊரைச் சொல்லி, உன்னிடம் கடவுள் தந்த பொற்காசுகள் இருப்பதாகவும், அதை உன்னிடம் கேட்டுப் பெற்றால் என்னை சுவர்கத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் கூறினார்!....நீ எனக்கு அந்த கடவுள் தந்த பொற்காசுகளைத்
தருவாயா?'' என்று கேட்டார்.
பத்மசுந்தரன் தாமதிக்கவே இல்லை!....உடனே பெட்டியுடன் வந்தான்! அதை முதியவரிடம் ஒப்படைத்தான்! பெட்டியில் 1000 பொற்காசுகள் நிரம்பிவிட்டன!
முதியவர் அவனைப் பார்த்து, ""கஷ்டப்பட்டு நீ சேர்த்த காசுகளாயிற்றே இவற்றைத் தருவதில் உனக்கு வருத்தமாயில்லையா?''
""இல்லை!....அறச் செயல்களைச் செய்வதும், அதற்கான வாய்ப்புகள் கிடைப்பதும், அதற்குத் தடைகள் ஏதும் வராமலிருப்பதும் சுவர்கத்தின் சுகத்தை என்னிடம் ஏற்படுத்திவிட்டன!...இனி இறைவனின் நினைப்பு இருந்தால் போதும்! தாங்கள் இந்த காசுகளை எடுத்துச் செல்வீராக!'' என்றான் பத்மசுந்தரன் மனமுவந்து!
முதியவர் மறைந்து அங்கு கடவுள் தோன்றினார்! ""நீ இன்னும் பல நற்செயல்களைப் புரிந்து கடைசியில் சுவர்கம் செல்வாய்!'' என்று ஆசி கூறினார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.