நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பூதலூர் முத்து

அரங்கம்
 காட்சி-1
 இடம் - பள்ளி
 மாந்தர் - சிவகாமி, கோமளா, நிர்மலா.
 
 (சிவகாமி வேப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி....கிராமத்துப் பெண்...-}முதல் பாடவேளை முடிந்து இரண்டாம் பாட வேளை....- அப்போதுதான் அவள் வருகிறாள். முகத்தில் வியர்வையோடும், உள்ளத்தில் பரபரப்போடும் வகுப்பு வாயிலில் நிற்கிறாள்.)
 
 ஆசிரியை கோமளா: இப்போ மணி என்ன? இதுதான் பள்ளிக்கு வருகிற நேரமா?
 சிவகாமி:......வரும்போது.....வர்ற வழியிலே.....
 கோமளா: நீ எதையும் சொல்ல வேண்டாம்....தலைமையாசிரியரிடம் அனுமதிச் சீட்டு வாங்கி வா.
 
 (தலைமை ஆசிரியர் சற்றுத் தூரத்தில் குடிநீர்க்குழாய்கள் அமைக்கும் பணியைக் கவனிக்கிறார். அந்த நேரத்தில் அவரைப் பார்க்க இயலாது. நேரே தன் வகுப்பு ஆசிரியை நிர்மலாவின் அறைக்குச் செல்கிறாள். ....தாமதம்....அனுமதிச் சீட்டு என்றதும் வேறு எதையும் அவர் கேட்கவில்லை. )
 
 நிர்மலா: உன் தாமதத்திற்கு நிச்சயம் நியாயமான காரணம் இருக்கும். அனுமதிச் சீட்டு வாங்கித் தருகிறேன். முதலில் வகுப்புக்குப் போ. பாடத்தைக் கவனி. மற்றவற்றைப் பிறகு பேசுவோம்.
 
 காட்சி - 2

 இடம் - வகுப்பறை, நிர்மலாவின் அறை.
 மாந்தர் - நிர்மலா சிவகாமி,
 மாணவிகள் வள்ளி, சிறுமி.
 
 (நிர்மலா, சிவகாமியின் வகுப்பில் இருக்கிறார். கிராமத்துப் பெண்மணி வள்ளி, தன் மகளோடு, பணியாளிடம் விவரம் கேட்டு அங்கு வருகிறாள்.)
 
 வள்ளி: (முகத்தில் ஆவேசத்தோடு) இங்கே சிவகாமிங்கற பொண்ணு யாரு....நான் அவளைப் பார்க்கணும்!...
 
 (அவள் கோபமாய் இருப்பதைப் உணர்ந்து நிர்மலா சிவகாமியை வகுப்பிலேயே இருக்குமாறு சைகை செய்துவிட்டு அவர்களுடன் தம் அறைக்குப் போகிறார். அவர்களை இருக்கையில் அமர வைக்கிறார். )
 
 நிர்மலா: அம்மா...,முதல்லே இந்தத் தண்ணீரைக் குடிங்க....சொல்ல வந்த விஷயத்தைக் கோபப்படாம சொல்லுங்க...
 வள்ளி: (நீரைக் குடித்தபின்) சிவகாமி செஞ்ச அநியாயத்தைப் பார்óததீங்களா....
 நிர்மலா: என்ன செஞ்சா?....
 வள்ளி: கிராமத்திலேர்ந்து இந்த ஆரம்பப் பள்ளிக்கு வர்ற வழியிலே சாக்லேட் மிட்டாய் நிறைய்ய கிடந்திருக்கு....சாலையிலே போன வண்டியிலே தவறி விழுந்திருக்கு....அதை ஆளுக்கு அஞ்சும் பத்துமா எடுத்திருக்காங்க.....எல்லோரும் இல்லாத பிள்ளைங்க.....காசு கொடுத்து வாங்க முடியாது. அங்கே வந்த அந்தப் பொண்ணு எல்லாரோட கையையும் தட்டி விட்டு மிட்டாயைப் பறிச்சிருக்கா.... இந்த சிவகாமிக்கு ஏம்மா இந்த வேண்டாத வேலை?.... பத்துப் பதினைஞ்சு பிள்ளைங்க அழுதபடி வீட்டுக்கே வந்திட்டாங்க.... சிவகாமி அங்கே வர்றதுக்கு முன்னாடி போன பிள்ளைங்க கை நிறைய அள்ளிக்கிட்டுப் போயிருக்குங்க......அதுங்க கொடுத்து வைச்சதுங்க....
 
 (நிர்மலா எதுவும் சொல்லாமல் அமைதியாகக் கவனிக்கிறாள்)
 
 வள்ளி: பள்ளிக்கூடத்துக்குப் போனோமா வந்தோமான்னு இல்லாம இந்த வேலையெல்லாம் எதுக்கு? ..... பிள்ளைங்ககிட்டே பறிச்ச மிட்டாயை ஒரு மூட்டையாகக் கட்டி அவளோட அண்ணனிடம் கொடுத்து அனுப்பிட்டா..... சாலையிலே கிடந்தது அவளுக்குத்தான் சொந்தமா? .... (குரலில் ஆவேசம்)..... கேட்டதுக்கு எந்த பதிலும் பேசலே.....இந்த மாதிரி பிள்ளைங்களை நீங்க பள்ளிக்கூடத்திலே சேர்க்காதீங்க..... இந்த வயசிலே இவ்வளவு ஆணவம் கூடாது....
 நிர்மலா: (பொறுமையாக) அம்மா....நான் என்ன ஏதுன்னு விசாரிக்கிறேன்.....அவள் தவறு செஞ்சிருந்தா நிச்சயம் தண்டனை உண்டு....(இருவருக்கும் தேநீர் தருகிறாள்)
 
 காட்சி-3
 இடம் - தலைமை ஆசிரியர்
 முத்துவேலன் அறை.
 மாந்தர்- முத்துவேலன், வள்ளி, சிறமி,
 நிர்மலா, சிவகாமி.
 
 (வள்ளியும் சிறுமியும் நிர்மலாவின் அறையில் இருக்கும்போதே காவல்துறை ஜீப் ஒன்று பள்ளிக்கு வருகிறது....முத்துவேலன் வெளியே வருகிறார்.)
 
 காவலர்: பத்தாம் வகுப்பு படிக்கும் சிவகாமிங்கிற மாணவி யாருங்க?
 முத்துவேலன்: என்ன விஷயம்?
 காவலர்: மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் கலியமூர்த்தி ஐயா அந்த மாணவியைப் பார்க்கணும்கறார்....அதற்கான கடிதம் இதோ.....
 முத்துவேலன்: சரி.,.....நான் ஏற்பாடு செய்யறேன்......
 
 (ஜீப் புறப்படுகிறது.....சற்று நேரத்தில் அவருக்குத் தொலைபேசி வருகிறது. சில செய்திகளை அறிகிறார்.)
 
 முத்துவேலன்: (நிர்மலாவின் அறைக்கு வந்து)...உங்க வகுப்பிலே படிக்கிற சிவகாமியை உடனே வரச் சொல்லுங்க....
 
 (காவல்துறை ஜீப் வந்துவிட்டுப் போகிறது.....தலைமை ஆசிரியர் சிவகாமியை வரச் சொல்கிறார். அவள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறார்களா..... வள்ளி அதை எசிர்பார்க்கிறாள்....; சிவகாமி நல்ல பெண்...... அவளுக்கு நல்லதே நடக்க வேண்டும் என்று நிர்மலா இறைவனை வேண்டுகிறார்.)....; சிவகாமி வரட்டும் அதற்கு முன்னால இந்தக் கடிதத்தைப் பாருங்க....
 
 (நிர்மலா படிக்கிறாள்....வியப்பிலும் மகிழ்ச்சியிலும் உள்ளம் துள்ளுகிறது.....சிவகாமி வருகிறாள்....முத்துவேலன் அவளுடைய கையைக் குலுக்குகிறார்....நிர்மலா அவளை அன்போடு அரவணைக்கிறார்....அவளுக்கு ஒன்றும் புரியவில்லை....வள்ளி விழிக்கிறாள்!)
 
 முத்து வேலன்: சிவகாமி நீ இன்றைக்கு உரிய நேரத்தில் செய்த ஒரு நல்ல செயலால் பல பிள்ளைகள் உயிர் பிழைச்சிருக்காங்க....(வள்ளி திகைப்பு அடைகிறாள்....இதயம் வேகமாகத் துடிக்கிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் அங்கே குழுமுகிறார்கள்).....சிவகாமி பள்ளிக்கு வரும்போது சாலையோரமாகக் கிடந்த சாக்லேட் குவியலைப் பார்த்திருக்கா.....பணத்துக்கு வாங்கினதை யாராவது இப்படி குப்பையைப் போலப் போடுவாங்களா....தவறி விழுந்தது போலவும் தெரியலே.....எல்லாம் காலாவதி ஆனதுன்னு புரிஞ்சுக்கிட்டா....முதல் நாள், கடைகள்லே உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து சில பொருள்களைப் பறிமுதல் செய்த செய்தியும் அவளுக்குத் தெரிய வந்திருக்கு.....யாரோ இப்படி பொறுப்பில்லாம போட்டு மனித உயிரோடு விளையாடறாங்களே என்ற கவலை....துடிப்பு....பிள்ளைகளிடம் இருந்து பிடுங்கியிருக்கா.....அவளோட அண்ணனுக்கு ஒரு மாணவன் மூலமா தகவல் அனுப்பி, அவன் வந்ததும் மிட்டாய்களை ஒரு மூட்டையாகக் கட்டி நகராட்சி அலுவலகத்துக்கு அனுப்பியிருக்கா.....மருத்துவ அதிகாரிக்கு ஒரு புகார் கடிதமும் கொடுத்திருக்கா.....இது எவ்வளவு பெரிய விஷயம்!....
 
 (அதைக் கேட்ட எல்லோரும் இதயம் வேககமாகத் துடிக்கப் பரபரப்புக்கு உள்ளாகிறார்கள்....வியப்படைகிறார்கள்....ஆசிரியர் அருணன் வருகிறார்.)
 
 அருணன்: சிவகாமி அங்கே போவதற்கு முன்னால் மிட்டாயை எடுத்துத் தின்ற பிள்ளைங்க பத்துப்பேருக்கு வாந்தி மயக்கம்னு அரசு பொது மருத்துவ மனையிலே சேர்த்திருக்காங்க....தீவிர சிகிச்சையிலே இருக்காங்க....செய்தி வந்திருக்கு....
 
 (வள்ளி அதைக் கேட்டதும் கதறி அழுகிறாள்....உணர்ச்சியோடு சிவகாமியின் கால்களில் விழுகிறாள்)
 
 வள்ளி: என் பிள்ளையைக் காப்பாத்தின தெய்வம்மா நீ.....அறிவில்லாம,....எதையும் யோசிக்காம, உன்னைப் பற்றித் தப்பாப் பேசிட்டேம்மா......என்னை மன்னிச்சிடு....-}சிவகாமி அவள் தோள்களைப் பற்றித் தூக்கி விடுகிறாள்)
 முத்து வேலன்: சிவகாமி....,உன்னைப் போன்ற பிள்ளைங்களாலதான் சமுதாயத்துக்கே பெருமை!
 சிவகாமி: (உணர்ச்சியோடு) இதுக்குக் காரணம் நிர்மலா டீச்சர்தான்...."பிறருக்கு உதவியா இரு....எது நடந்தாலும் வேடிக்கை பார்த்துட்டுப் போகாதே....அறியாமையும் வறுமையும் உள்ள இந்தச் சமூகத்தின் மேலே அக்கறையோட இரு' என்ற கருத்தைஎன் மனசிலே ஆழமாப் பதிச்சது அவங்கதான்.
 முத்துவேலன்: (நிர்மலாவிடம்) உங்களைப் போன்ற ஆசிரியர்களால்தான் சிவகாமி போன்ற பிள்ளைகள் நல்ல தலைவர்களாக உருவாக முடியும்...நீங்க இங்கே ஆசிரியராக இருக்கறதும்....சிவகாமி மாணவியா இருக்கறதும் இந்தப் பள்ளிக்குக் கிடைச்ச பெரும்பேறு!
 
 (கோபத்தோடு பள்ளிக்கு வந்த வள்ளி, சிவகாமியை வாழ்த்தியவாறு தன் மகளோடு புறப்படுகிறாள்)
 
 திரை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.