முத்திரை பதித்த முன்னோடிகள்: கங்காதரன் மேனன்
ஒரு ஆவணப்படம் என்ன செய்துவிட முடியும்? ஒரு தனி மனிதரால் மாநில அரசின் திட்டத்தை தடுத்து நிறுத்த முடியுமா?


ஒரு ஆவணப்படம் என்ன செய்துவிட முடியும்? ஒரு தனி மனிதரால் மாநில அரசின் திட்டத்தை தடுத்து நிறுத்த முடியுமா? இவ்விரு கேள்விகளுக்கும் விடை தருகிறது ஒரு ஆவணப்படம். சரி அது என்ன படம்? "ஹல்லா போல்!' .... ஹல்லா போல் என்றால் "உரக்கப் பேசு' என்று அர்த்தம்! ஆம்! "அமைதிப் பள்ளத்தாக்கு' என்ற பசுமை மாறாக் காட்டைப் பற்றி உரக்கப் பேசினார் ஒரு மனிதர்! தன் ஆவணப் படத்தின் மூலம்! இதனால் ஒரு மாநில அரசே தனது திட்டத்தைக் கை விட்டது! நமது அண்டை மாநிலமான கேரளாவில் 33 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற நிகழ்வு இது!
அந்த ஆவணப்படத்தை எடுத்தவர்தான் திரு. கங்காதரன் மேனன்! இவர் ஒரு ஆசிரியர். பயணக் கட்டுரை எழுத்தாளர்! புகைப்படக் கலைஞர்! மேடை நாடக நடிகர்! இப்படி பன்முகத் திறன் கொண்ட ஆளுமை கொண்டவர்.
இவர் 1962 முதல் மும்பையில் வசித்து வந்தார். பல ஆண்டுகள் விளம்பரத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
தனது ஆவணப்படம் நீங்கலாக "அமைதிப் பள்ளத்தாக்கு - இனிமேல் அமைதியில்லை!'
(SILENT VALLEY IS NOT SILENT ANY MORE) என்ற தலைப்பில் தான் ஆற்றிய பெரும்பணியை ஒரு நூலாக வடித்துள்ளார்.
தற்பொழுது இந்தியாவின் தேசியப் பூங்காக்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள "அமைதிப் பள்ளத்தாக்கு' நீலகிரி மலைத் தொடரின் எல்லைப் பகுதியாகிய பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஒரு பசுமை மாறாக் காட்டுப் பகுதியாகும். சிங்கவால் குரங்கு, தவளைவாய்ப் பறவை, மற்றும் அரிய வகை நாரைகள் போன்ற எண்ணிலடங்கா விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழிடமாகத் திகழ்கிறது இப்பகுதி.
இக்காட்டின் ஊடே "குந்திப்புழா' என்ற ஆறு ஒன்று பாய்ந்து செல்கிறது. இந்நதியின் மேல் ஓர் அணை கட்டி நீர்மின் சக்தியை உற்பத்தி செய்ய கேரள அரசு முடிவெடுத்தது. அதன்படி 1978 ஆம் ஆண்டு அணை கட்டும் பணிகளைத் துவக்கியது. இதனால் இக்காட்டின் முக்கால் பகுதி நீரில் மூழ்கிவிடும் அபாயம் இருந்தது.
சூழலியல் ஆர்வலர்களால் இத்திட்டம் எதிர்க்கப்பட்டு மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதியா உச்ச நீதி மன்றத்தில் தடை ஆணை பெறப்பட்டது.
1980 ஆம் ஆண்டு மேடை நாடக நடிகராக இருந்த கங்காதரனை மும்பையில் கே.கே.சந்திரன் என்ற கேரள ஆவணப்பட இயக்குனர் சந்தித்தார். அவர் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட ஆவணப் படங்களை இயக்குபவராக இருந்தார். அமைதிப் பள்ளத்தாக்கு பற்றி விவரித்த சந்திரன் தாம் ஒரு ஆவணப்படம் எடுக்க விரும்புவதாகவும், காடுகளைப் பற்றிய தகவல்களைத் திரட்டுமாறும் தனக்கு உதவியாளராக இருக்குமாறும் வேண்டினார். 22 வயதே ஆன கங்காதரன் இந்த சாகசப் பயணத்திற்கு உடனே சம்மதித்தார். தான் பணி புரிந்த நிறுவனத்தில் ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு சந்திரனுடன் பாலக்காட்டுக்குப் பயணமானார் கங்காதரன்!
நிதி உதவி செய்து தயாரிக்க ஒருவரும் முன் வராததால் யாரெல்லாம் 15.000 ரூ அளித்தனரோ அத்தனை பேரும் தயாரிப்பாளர்களாகக் கருதப்பட்டனர்.அவர்களையும் தம்முடன் அழைத்துச் சென்றனர். கையில் ஒரு 16 எம்.எம். கேமரா, உணவுப் பொருட்கள், குடிதண்ணீர், மருந்துகள், தீப்பெட்டி, மண்ணெண்ணை போன்ற பொருட்களை எடுத்துச் சென்றனர்.
"அமைதிப் பள்ளத்தாக்கு' எல்லைக்கு 24 கி.மீ. முன்னால் இருந்த "முக்காலி' என்ற கிராமம் வரை மட்டுமே வாகனப் போக்குவரத்து இருந்தது! அதன் பின்னர் நடைப்பயணம் மட்டுமே! இக்கானகத்தின் ஒவ்வொரு மூலையையும் நன்கு அறிந்து வைத்திருந்த "தெக்கின் காட்டின் ஹம்ஸா' என்ற 62 வயது ஆதிவாசி முதியவரையும் தம்முடன் அழைத்துச் சென்றனர்.
அவர்கள் அக்காட்டில் அடியெடுத்து வைத்த பொழுது அணைகட்டும் அதிகாரிகள் ஏறத்தாழ 2 நூற்றாணடுகளாக ஜீவித்திருந்த மிகப் பெரிய மரம் ஒன்றை இயந்திரங்களின் உதவியால் சில மணித்துளிக்குள் வீழ்த்தினர். அவர்கள் அறியாதவாறு கங்காதரனும், அவரது குழுவினரும் மிகுந்த மனவேதனையுடன் இக்காட்சியைத் தமது கேமராவில் படம் பிடித்துக் கொண்டனர். மரம் வீழ்ந்த பிறகும் அரைமணி நேரத்திற்குக் கானகத்தின் பறவைகள் ஓலமிட்டுக் கொண்டே இருந்தன. அதையும் பதிவு செய்துகொண்டனர்.
அணைக்கட்டின் ஆரம்பப் பணிகள் அங்கு ஏற்கனவே முடிவடைந்திருந்தன. மிக அடர்த்தியான மரங்கள் சூழ்ந்திருந்தன. எனவே சீரான பாதை இல்லை! சில இடங்களில் 6 அடி நீளத்திற்கும் 3 அடி அகலத்திற்கும் பச்சை நிற தரை விரிப்புகள் போல் காணப்பட்டன. இவர்கள் அழைத்துச் சென்ற ஆதிவாசி வழிகாட்டி இவர்களைத் தடுத்து நிறுத்தி அங்குள்ள ஏராளமான பூச்சிகளைச் சுட்டிக் காட்டினார். பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். காரணம், அவை அனைத்தும் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சிகள்!
இவை எல்லாவற்றையும்விட காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மட்டுமே சூரிய வெளிச்சம் இருக்கும்!
அதற்குள் தான் கண்ட அத்தனை காட்சிகளையும் படம் பிடித்தனர். இதனால் திட்டமிட்டதை விட படப்பிடிப்பு நாட்கள் அதிகரித்தன. உணவுப் பொருட்களும், மருந்துகளும் மிகக் குறைந்த அளவே இருந்தன. மீண்டும் முக்காலி கிராமத்திற்குச் சென்று அவற்றைக் கொண்டுவர வேண்டும். ஒருவரும் முன் வராததால் கங்காதரனே அந்தப் பொறுப்பையும் மேற்கொண்டார். திரும்பி வரும் வழியில் பெரிய கொம்பன் யானையைக் கண்ட பொழுதுதான் தன் வாழ்நாளிலேயே முதன் முதலாக மரணம் பற்றிய அச்சம் அவருக்குத் தோன்றியது. நல்ல வேளையாக அது இவரை கவனிக்கவில்லை!
இப்படியாகப் பெரும் போராட்டங்களுக்கிடையே சிறிது சிறிதாக ஆவணப்படம் வளர்ந்து கொண்டிருந்தது. மும்பை திரும்பிய பின்னர் நிதி உதவி கிடைக்காததால் எடிட்டிங் செய்ய முடியவில்லை. மும்பையில் இருந்த "ஃபிலிம்ஸ் டிவிஷன்' என்ற அமைப்புதான் அந்நாட்களில் ஆவணப் படங்களைத் திரையிட்டது. அதன் அதிகாரிகளுடன் சந்திரனுக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் இந்த ஆவணப்படக் குழுவிலிருந்து விலகிக் கொண்டார்.
ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடம் காட்டில் அலைந்து திரிந்த கங்காதரனுக்கு இதை அப்படியே விட்டுவிட மனம் வரவில்லை. ஃபிலிம் எடிட்டிங் என்பதையே அறிந்திராத கங்காதரன் இதற்காக எடிட்டிங் கற்றுக் கொண்டார். தாம் எடுத்த காட்சிகளை தமக்குத் தெரிந்த வகையில் 18 நிமிடப் படமாக எடிட் செய்து முடித்தார். எடிட் செய்யாத பகுதிகள் 12 நிமிடத்திற்கு இருந்தன.
இப்படச் சுருளைக் கையில் எடுத்துக் கொண்டு "அமைதிப் பள்ளத்தாக்கு பாதுகாப்பு' இயக்கத்தின் தலைவர் திருமதி. தில்நவாஸ் வரியேவா (ஈஐக சஅயஅழ யஅதஐஅயஅ) அவர்களைச் சந்தித்தார். ஆவணப்படம் முழுமையையும் கண்ட அவர் சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக தமது பங்களிப்பாக பத்தாயிரம் ரூபாய் அளித்தார். ஏனெனில் சென்சார் சான்றிதழ் பெற்றால் மட்டுமே ஆவணப்படத்தைத் திரையிட முடியும். இப்படத்தைக் கண்ட தணிக்கைக் குழுவோ "இப்படம் ஒருதலைப் பட்சமாக எடுக்கப்பட்டுள்ளது!' என்று கூறி சான்றிதழ் தர மறுத்துவிட்டது!
இப்படம் எடுக்க நிதி உதவி செய்தவர்கள் கங்காதரனிடம், "தனி ஒரு ஆளாக ஒரு மாநில அரசை உன்னால் எதிர்த்து என்ன செய்ய முடியும்? இப்படச் சுருளை எரித்துவிடு!' என்றனர்.
மனமுடைந்த கங்காதரன் மீண்டும் திருமதி தில்நவாஸ் அவர்களிடமே வந்தார். கங்காதரனின் உண்மையான அக்கறையை உணர்ந்துகொண்ட அவர் வேறுவழியில் இப்பிரச்னையைத் தீர்க்க முடிவு செய்தார். அவர் கோத்ரெஜ் நிறுவனத் தலைவர் "எஸ்.பி.கோத்ரெஜ்' அவர்களை சந்தித்து பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களை எப்படியாவது சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தருமாறு வேண்டினார். சில மாதங்களுக்குப் பிறகு பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் கிடைத்தது. அதுவும் சந்திப்பு நேரம் 10 நிமிடங்கள் மட்டுமே என்ற அனுமதியுடன்!
தனது படத்தின் ஒரு சில காட்சிகளையாவது அவர் பார்க்க வேண்டும் என கங்காதரன் விரும்பினார். இவர்களது பிரச்னையின் முக்கியத்தினை உணர்ந்து கொண்ட பிரதமர் தனது பிற சந்திப்புகளை ஒத்தி வைத்தார்.
ஆவணப்படம் முழுவதையும் (எடிட் செய்த....மற்றும் எடிட் செய்யப்படாத பகுதிகள்) கண்டார்.
அமைதிப் பள்ளத்தாக்கின் அழகிலும், வளத்திலும் மனதைப் பறிகொடுத்த இந்திராகாந்தி 236.74 கி.மீ. பரப்பளவுள்ள அக்கானகத்தை இந்தியாவின் தேசியப் பூங்காக்களுள் ஒன்றாக அறிவித்தார்.
15-11-1983 ஆம் ஆண்டு முதல் இந்த ஆணை நடைமுறைப் படுத்தப் பட்டது.
கிட்டத்தட்ட தனது 18 மாத கடின உழைப்பிற்குப் பலன் கிடைத்ததைவிட காட்டின் ஒவ்வொரு ஜீவராசியும் காப்பாற்றப்பட்டதே தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகக் கூறுகிறார் இந்த சமூக ஆர்வலர்!
தொகுப்பு: என்.லக்ஷ்மி பாலசுப்ரமணியன், கடுவெளி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...