ஞானக்கிளி! - 19: ஆற்றில் ஒரு சிறுவன்!
ஞானம் அமர்ந்ததும் பிள்ளைகள் எல்லோரும் வந்து விட்டார்களா என்று பார்த்தது.


ஞானம் அமர்ந்ததும் பிள்ளைகள் எல்லோரும் வந்து விட்டார்களா என்று பார்த்தது.
""அக்கா,..... எல்லோரும் இருக்கிறோம்!....ஏதாவது முக்கியமான செய்தியா?''
பாபு ஆர்வத்தோடு கேட்டான்.
""ஆமாம்..... மூன்று நாளைக்கு முன்னால் தங்கமணி ஐயாவிடம் சிறுவன் ஒருவன் பரபரப்போடு வந்தான்.....கை, கால்களில் சிராய்ப்பு..... வேகமாக ஓடி வரும்போது கீழே விழுந்திருக்கிறான்....''
எல்லோருக்கும் அவன் எதற்காக வந்தான் என்று அறியும் பதற்றம்.
""........"ஐயா, எங்க தெருப்பையன் முனியன் நம்ம சோலையாற்றிலே விழுந்திட்டான்....அவனுக்கு நீச்சல் தெரியாது...'....என்றதும் அவர் விரைந்து சென்று இளைஞர்கள் சிலரைப் பார்த்துச் செய்தியைச் சொன்னார். அவர்கள் முன்னால் ஓட,....பின்னால் அவர் வேகமாகச் சென்றார்.
ஆற்று வெள்ளத்தில் தத்தளித்த முனியனைக் காப்பாற்றினார்கள். சற்றுத் தாமதம் ஆகியிருந்தாலும் அவன் உயிர் போயிருக்கும்.....அவ்வளவு தண்ணீரைக் குடித்திருந்தான்....மூழ்கும் நிலையில்.....வெளியே தெரிந்த கையைப் பார்த்து..... இழுத்துத் தூக்கிக் கரைக்குக் கொண்டு வந்தார்கள்.... தங்கமணி ஐயா அவனைக் குப்புறப் படுக்க வைத்தார். தண்ணீரை வெளியேற்றினார்.
ஆற்றிலே வந்த வெள்ளத்தைப் பார்த்ததும் நீச்சல் தெரிந்த நான்கைந்து பேர் குதித்ததும் ஆர்வத்தில் அவனும் குதித்திருக்கிறான்.
""அக்கா,....அவன் அதையும் ஒரு துணிச்சல்னு நினைச்சிட்டான் போல...''
ஞானம்,""இது போன்ற துணிச்சல் தேவையா?'' என்று கேட்டது.
அதற்கு பாத்திமா, ""கூடவே கூடாது!.... அது நமக்கும் நம்மைச் சேர்ந்தவங்களுக்கும் தொல்லைதான்!...பள்ளிக்கு விடுமுறை விட்டால் போதும்....உடனே விளையாடப் போகிறோம் என்று சொல்லி குளம், குட்டை, ஏரி, ஆறு என்று மாணவர் சிலர் ஓடுகிறார்கள்.... சேற்றில் சிக்குவது,... ஆழத்தில் திணறுவது,....வெள்ளத்தின் வேகத்தில் போவது இதெல்லாம் அசட்டுத் துணிச்சலால் வருவது.... உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் இந்த வேலைகள் நமக்கு எதற்கு?''
அந்தக் கேள்வி எல்லோரையும் சிந்திக்க வைத்தது.
பீட்டர் கையை உயர்த்தினான்...
""அக்கா,....குறளிலும் இது பற்றிச் செய்தி இருக்கு....''
""அது எந்தக் குறள்?....என்ன செய்தி?''
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை,....
அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
- என்பது குறள். அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சாமல் நடப்பது அறிவில்லாத தன்மையாகும்....அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவது அறிவு உடையவரின் செயலாகும்....இது அதன் பொருள்.''
""வள்ளுவர் சொன்னது அருமை. நீ அதை எடுத்துச் சொன்னது அழகு!''
சிவகாமி சொன்னாள்...""நீச்சலே தெரிந்தாலும் தண்ணீரில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்....நீர் நிலையை வேடிக்கை பார்க்கப் போனாலும் தகுந்த துணையோடு போகவேண்டும். நீரோடும், நெருப்போடும், பாம்போடும் விளையாடக் கூடாது. மின்சாரமும், கருவிகளும் அப்படித்தான்!....ஏன் புதியவர்களோடு பழகுவதிலும் கவனம் தேவை. "ஆழம் தெரியாமல் காலை விடாதே' என்று எதற்கும் பொருந்தும்படி ரத்தினச் சுருக்கமாக ஒரு பழமொழியும் உள்ளதே!..''
""சிவகாமி,....உன் விளக்கம் இந்தக் கருத்தை மேலும் அழகுபடுத்தி விட்டது.....எளிமையாக்கி விட்டது!....''
ஞானம் பீட்டர், பாத்திமா, சிவகாமி, மூவரைûயும் அருகே அழைத்தது. தன் சிவந்த அலகால் அன்போடு முத்தமிட்டது!
கிளி வரும்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...