
கோவிலில் தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரிந்த மானேஜர் ரங்கனாதனைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டுப்போனாள் மங்களம்! அவரும் தன்னை அடையாளம் கண்டுகொண்டு "நலமா' என்று விசாரித்ததும் மனம் சந்தோஷப்பட்டது! அவர் பணி ஓய்வு பெற்று 15 ஆண்டுகள் ஆயிற்று! இன்றும் இளமையாக முகப்பொலிவுடன் உடல் வனப்புடன் காணப்பட்டார். நெற்றியில் குங்குமப்பொட்டு... அதன் மேலே பிறைச்சந்திரன் போல சந்தனக் கீற்று....கம்மென்ற மணம்...
மங்களத்தைப் பார்த்ததும், ""என்னம்மா செளக்கியமா இருக்கீங்களா?'' என்று விசாரித்தார். பதிலுக்கு ""வணக்கம் ஐயா, நீங்க நலம்தானே?'' என்று மங்களமும் கேட்டாள்.
""நல்லா இருக்கேன்மா.... இவுங்க உங்க குழந்தைகளா?...''
""ஆமாங்க ஐயா,.... இவன் பெரியவன் பாரதி,..... பதினைந்து வயசு ஆச்சு... சின்னவன் சிதம்பரம் எட்டாவது படிக்கிறான்...''
""அப்படியா, நல்லா படிக்கிறீங்களா,....உங்க அம்மா நல்ல உழைப்பாளி, நல்லாப் படிச்சாத்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்ங்கிற பாடத்தையும் அவ்வப்போது உங்களுக்கு போதிச்சு இருப்பாங்களே?''
""ஆமாங்க ஐயா'' என்றான் பெரிய பையன் பாரதி.
""நான் திருச்சியில் இருக்கேன்.... அடுத்த முறை சமயபுரம் வந்தா எனக்கு ஃபோன் பண்ணுங்க.... உங்களை என் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்.... உங்களை என் மனைவி பசங்க பார்த்தா சந்தோஷப்படுவாங்க....'' என்று தன் விலாசத்தைக் கொடுத்தார் ரங்கநாதன்.
""ரொம்ப நன்றி ஐயா'' என்றபடி புறப்படலானார் மங்களம்.
அதற்குப் பிறகு ஒரு மணி நேரம் மங்களத்தின் மனதில் பழைய நினைவுகள் அலை மோதின. வயதை மறந்து, பார்க்கும் வேலையைக் கணக்கில் கொள்ளாமல் சத ஊழியர் என்ற ஒரே நல்ல உணர்வில் மரியாதையை எல்லா ஊழியர்களுக்கும் தருவார் மானேஜர் ரங்கநாதன். மங்களம் கடைநிலை ஊழியராக இருந்தபோதும் வாங்க, போங்க என்றே அழைப்பார். சக ஊழியர்களிடையே கடைசி வரை நல்ல மதிப்பைப் பெற்றவர்.
மறுநாள் தன் குழந்தைகளிடம் பெரிய மாற்றம் நிகழும் என மங்களம் எதிர்பார்க்கவே இல்லை.
காலையில் மூத்த பையன் பாரதி, ""காலை வணக்கம் அம்மா!.... என்னுடைய யூனிபார்ம் எல்லாம் அயர்ன் பண்ணி வெச்சிட்டீங்களா?... மணி எட்டு ஆயிடுச்சு!.... டிபன் தர்றீங்களா,....சிரமமா இருந்தா நாங்களே எடுத்துப் போட்டுக்குறோம்....''
சின்னவன் ஒரு படி மேலே போய், ""நாங்க இனிமே உங்களை மரியாதையாய்த்தான் கூப்பிடுவோம்!... வா, போ, என்றெல்லாம் கூப்பிடமாட்டோம்''
""ஆமா,... இது என்ன புதுப்பழக்கம்!...''
""புதுசுதான்!... அந்தத் தாத்தா எங்களுக்குச் சொல்லாமல் சொன்ன அறிவுரை!.... நீங்க தாத்தாவைவிட வயதில் குறைஞ்சவங்க....ஆனாலும் உங்ககிட்டே பேசும்போதெல்லாம் வாங்க போங்கன்னே பேசினார்!... அதைப்போல நீங்க வயதில் பெரியவங்க.... உங்களை வா, போ...ன்னு கூப்பிட்டது எவ்வளவு பெரிய தப்புன்னு புரியுது!.... வாங்க, போங்க என்ற வார்த்தைகள் மனசில் ஒரு மாற்றத்தை உண்டாக்கிடுது அம்மா!....'' என்றான்.
""டேய்,.... நான் உன் அம்மாடா,.... வாம்மா, போம்மா என்கிற வார்த்தைகள் நமக்குள்ளே ஒருவித பாசத்தை ஏற்படுத்துகிற வார்த்தைகள்.... இப்போ நான் உங்களிடமிருந்து அன்னியப்பட்டு விட்டோனோ என்கிற மாதிரி உணர்வு வருது....''
""நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுங்க.... நாங்க இனி உங்களை வாங்க, போங்கன்னுதான் கூப்பிடுவோம்!
மங்களத்தின் மனதில் இது கூட நல்ல மாற்றம்தான் என்ற நினைப்பு எழ ஆரம்பித்தது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.