சிறந்த பிரார்த்தனை!

கடலில் ஓர் கப்பல் சென்றுகொண்டிருந்தது. திடீரென்று புயல் வீசியது. கப்பல் உடைந்தது! அதில் இருந்த இரு ஆண்கள் மட்டும் தப்பி நீ ஒரு சிறிய தீவை சென்று அடைந்தனர்.
சிறந்த பிரார்த்தனை!

கடலில் ஓர் கப்பல் சென்றுகொண்டிருந்தது. திடீரென்று புயல் வீசியது. கப்பல் உடைந்தது! அதில் இருந்த இரு ஆண்கள் மட்டும் தப்பி நீ ஒரு சிறிய தீவை சென்று அடைந்தனர்.
அந்த இருவரும் நண்பர்கள். ஒருவன் வசதி படைத்த பணக்காரன். மற்றொருவனோ ஏழை.
அந்த தீவில் சாப்பிட எதுவும் இல்லை. இருவருக்கும் பசி! அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
வசதியானவன் உணவுக்காக பிரார்த்தனை செய்தான். ஏழையோ பேசாமல் உட்கார்ந்திருந்தான். ஆச்சரியம்! கடலில் இரண்டு பழங்கள் மிதந்து வந்தன! வசதியானவனுக்கு மிகுந்த பசி. ஒன்றை அவன் சாப்பிட்டான். இன்னொன்றை தன் ஏழை நண்பனிடம் நீட்டினான்.
""உன் பசி இன்னும் தீரவில்லை!..... இந்தப் பழத்தையும் நீயே சாப்பிடு!'' என்றான் ஏழை. சரி என்று இரண்டு பழங்களையும் பணக்காரன் சாப்பிட்டுவிட்டான்.
சிறிது நேரத்தில் மேலும் சில பழங்கள் மிதந்து வந்தன. அவற்றில் சிலவற்றை உண்டு ஏழை பசியாறினான். மீதியிருந்த பழங்களை பணக்காரன் எடுத்து வைத்துக்கொண்டான்.
பிறகு வசதி படைத்தவன் கடவுளிடம், ""தாகமாக இருக்கிறது சற்று தண்ணீர் வேண்டும்....'' என்று கண்களை மூடிப் பிரார்த்தித்தான். ஏழையோ பேசாமல் இருந்தான்.
மூடியுடன் கூடிய ஜாடி அங்கு தோன்றியது! அதில் நல்ல குடிநீர் இருந்தது. அதைக் குடித்து இருவரும் தாகத்தைத் தீர்த்துக்கொண்டனர்.
கடலில் நீந்தி வந்ததால் இருவரின் உடைகளும் நனைந்திருந்தன. இரவு நெருங்கியது. இருவருக்கும் குளிர ஆரம்பித்தது. பணக்காரன், கண்களை மூடிக்கொண்டு கடவுளிடம், போர்வையும், உலர்ந்த ஆடைகளையும், வேண்டினான். ஏழை நண்பனோ ஒன்றும் செய்யாமல் அமர்ந்திருந்தான்.
வானிலிருந்து ஒரு மூட்டை விழுந்தது. அதில் உலர்ந்த மாற்று உடுப்புகளும், போர்வைகளும் இருந்தன. பணக்காரன் சந்தோஷமாய் அவற்றை அணிந்து கொண்டான். போர்வை கதகதப்பாக இருந்தது. ஏழைக்கும் உடைகளையும், போர்வைகளையும் வழங்கினான்.
விடிந்தது! இருவரும் எழுந்தனர். மீதமிருந்த பழங்களை உண்டனர். சிறிது தண்ணீரையும் அருந்தினர்.
ஊர் போய்ச் சேர எண்ணிய பணக்காரன், மறுபடியும் கண்களை மூடிக்கொண்டு பிரார்த்தனை செய்தான். ஏழையோ பேசாமலே இருந்தான்.
கடவுள் அங்கு எல்லா வசதிகளுடன் ஒரு படகைத் தோன்றச் செய்து, ""இதில் ஏறிக்கொள்ளுங்கள் இந்தப் படகில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. இது தானே உங்களை ஊரில் சேர்த்துவிடும்!'' என்று கூறி மறைந்தார்.
பணக்காரன் அதில் ஏறினான். ஏழை ஏறப்போகும்போது பணக்காரனுக்கு எரிச்சல் வந்தது.
""நீ ஒரு முயற்சியும் செய்யவில்லை!.... உனக்குக் கடவுள் நம்பிக்கையும் இல்லை.....இருந்த போதிலும் உனக்கு எல்லாம் கிடைத்துவிட்டது!.... சிலர் இப்படித்தான் எந்த முயற்சியுமில்லாமல் பலன்களை அனுபவிக்கிறார்கள்..... ம்ம்ம்...... படகில் ஏறித்தொலை!'' என்றான் வேண்டா
வெறுப்புடன்.
தனக்குக் கிடைத்த எல்லா உதவிகளுக்கும் நன்றி கூறும் பொருட்டு படகில் இருந்தவாறே கடவுளை நினைத்தான் பணக்காரன். கடவுள் அவன் முன்பு தோன்றினார்.
அவரிடம், ""இதோ என் நண்பன்.... நண்பன் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கமாக இருக்கிறது!..... சோம்பேறி.... எந்த பிரார்த்தனையும் செய்யாமல் பலன்களை மட்டும் அனுபவிக்கிறான்..... அப்படியானால் நம்பிக்கை உள்ளவனுக்கும், இல்லாதவனுக்கும் என்னதான் வித்தியாசம்?'' என்று கேட்டான்.
கடவுள் சிரித்துக்கொண்டே , ""யார் சொன்னது?.... அவன் பிரார்த்தனை செய்யவில்லை என்று?.... உன் நண்பன் என்ன நினைத்தான் தெரியுமா?..... "என் நண்பன் வசதி
படைத்தவன்!.... அவனால் துன்பங்களைத் தாங்கிக்கொள்ள முடியாது.....எனவே அவன் கேட்பது எல்லாவற்றையும் நிறைவேற்றுங்கள்' என்று என்னிடம் வேண்டிக்கொண்டான். அவன் சுயநலமில்லாதவன்..... தனக்கென்று எதையுமே அவன் கேட்கவில்லை.... அவனது வேண்டுகோளுக்கு இணங்கித்தான்.... உன் பிரார்த்தனைகளை நான் நிறைவேற்றினேன்!'' என்று கூறி மறைந்தார்.
வசதி படைத்தவனுக்கு கண்களில் நீர் சுரந்தது. தன் நண்பனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, அவனைக் கட்டி அணைத்துக்கொண்டான்.
குளிர்ந்த காற்று வீசியது. படகு இரு நண்பர்களுடன் நீரில் விரைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com